மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்: நிலைகுலைந்தது பிரான்ஸ்!

World
Typography

பாரிஸ், ஏப்ரல்.21- ஐஎஸ் தீவிரவாதத் தொடர்புடையவர் என நம்பப்படும் 38 வயதுடைய நபர் ஒருவர், பிரான்சின் தலைநகரான பாரிசில் போலீஸ் அதிகாரி ஒருவரைச் சுட்டுக் கொன்றதோடு மேலும் இருவரைக் காயப்படுத்தினான். அதேவேளையில் சமபந்தப்பட்ட கொலையாளியையும் போலீசார் சுட்டு வீழ்த்தினர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தினால் பிரான்ஸ் நிலைகுத்திப்போனது. ஞாயிற்றுக்கிழமையன்று அதிபர் தேர்தல் வாக்களிப்பு நடைபெறவிருக்கும் நிலையில் இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடந்திருப்பது மக்களிடையே பதட்டத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது. 

இந்தத் தாக்குதல் ஒரு பயங்கரவாதச் செயல்தான் என உறுதிப்படுத்திய அதிபர் ஹோலாண்டே, உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து விவாதித்தார்.

அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த 11 வேட்பாளர்களும் தற்காலிகமாக பிரசாரத்தை நிறுத்திவைத்தனர். துப்பாக்கிச் சூட்டில் உயிர்நீத்த போலீஸ் அதிகாரிக்கு நாடு தழுவிய அளவில் அஞ்சலி செலுத்தப்படும் என்று அதிபர் ஹோலாண்டே சொன்னார்.

பாரிசில் பிரசித்திபெற்ற சாம்ப்-யெலிசீஸ் பகுதியில், காரில் வந்த அந்த ஆசாமி, போலீஸ் அதிகாரிகள் வந்த பஸ் ஒன்றை மடக்கி, அதன் மீது இயந்திரத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுவிட்டு விட்டு தப்பி ஓடினான். பஸ்சில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில் போலீஸ்காரர்கள், தப்பியோடிய அந்த நபரைச் சுட்டு வீழ்த்தினர். இந்த வட்டாரம் முழுவதும் முற்றாக சுற்றி வளைக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய ஆசாமியுடன் வேறு சில சகாக்களும் இருக்ககக்கூடும் என்பதால் வீடு வீடாகத்தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

சம்பந்தப்பட்ட ஆசாமியின் அடயாளம் காணப்பட்டு விட்டது என்றாலும் போலீசார் அதிகாரப்பூர்வமாக யார் என்பதை வெளியிட மறுத்து விட்டனர். இதனிடையே துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பாதிப்புற்ற போலீஸ் அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS