வடகொரியாவைத் தகர்ப்பதற்கு அமெரிக்காவிடம் இரகசியக் குண்டு!

World
Typography

வாஷிங்டன், ஏப்ரல்.20- வடகொரியாவின் அணு உலைகளைத் தகர்ப்பதற்காக அமெரிக்கா இரகசியக் குண்டுகளைத் தயாரித்திருக்கிறது. இந்தக் குண்டுகள் தான் உலகிலேயே மிகப்பெரிய குண்டுகளாக இருக்கும் என்று தகவல்கள் கசிந்துள்ளன.

அண்மையில் ஆப்கானிஸ்தானில் மலைக் குன்று குகைகளில் பதுங்கி இருந்த ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக 9,800 கிலோ எடையைக் கொண்ட அதிரடிக் குண்டை அமெரிக்கா பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் போரில் பயன்படுத்தப் பட்ட குண்டுகளிலேயே இதுதான் மிகப்பெரிய குண்டு என வர்ணிக்கப்பட்டது. இந்தக் குண்டை தீவிரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தியதற்கு அமெரிக்கர்களில் ஒரு தரப்பினர் அதிபர் டிரம்பை வெகுவாகப் பாராட்டினர்.

இந்நிலையில் கொரியத் தீபகற்பத்தில் வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் கடுமையாகி வருகிறது. எந்த நேரத்திலும் போர் மூளலாம் என்று அஞ்சப்படுகிறது.

வடகொரியா தொடர்ச்சியாக அணுச் சோதனைகளையும் ஏவுகணைச் சோதனைகளையும் நடத்தி வருவதால் இவ்விரு நாடுகளும் மோதலுக்கு இலக்காகியுள்ளன. தனது நட்பு நாடுகளான தென் கொரியாவையும் ஜப்பானையும் ஏவுகணைகள் மூலம் தாக்கப் போவதாகவும் தென்கொரியாவை சாம்பாலாக்கி விட்டு, அமெரிக்க இலக்குகள் மீதும் ஏவுகணைகளைப் பாய்ச்சப் போவதாக வட கொரியா எச்சரித்திருக்கிறது.

இத்தகைய அணுவாயுதச் சோதனைகளுக்கு எதிராக ஐநா தடையை அமல்படுத்தி உள்ளது என்றபோதிலும் அதனை மீறி வட கொரியா சோதனைகளை நடத்துவது அமெரிக்காவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

போர் மூண்டால் முதலில் வடகொரியாவின் அணு உலைகளையும் அணுவாயுதக் கூடங்களையும் ஏவுகணைத் தளங்களையும் அழிக்க அமெரிக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இதற்காக இரகசியமான மகா குண்டுகளை அது தயாரித்து இருப்பதாக தகவல் அம்பலமாகியுள்ளன. 

இந்தக் குண்டுகள் சுமார் 14,000 கிலோ எடையைக் கொண்டததாக இருக்கும் என்றும் பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ள அணுச் சோதனைக் கூடங்களை தகர்க்கக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு என்றும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS