'டிரம்பின் நெருக்குதலுக்கு ஐரோப்பா அடிபணியக் கூடாது!" -ஜங்கெர் கருத்து

World
Typography

மூனிச் (ஜெர்மனி), பிப்.17- ஐரோப்பிய நாடுகள் தங்களின் இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவேண்டும் என்ற அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருக்குதலுக்கு அடிபணியக்கூடாது என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் கிளாவ்டி ஜங்கெர்  வலியுறுத்தினார்.

நேட்டோ இராணுவக் கூட்டணிக்கு ஐரோப்பிய நாடுகள் ஒதுக்கும் நிதியை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் நெருக்குதல் அளித்து வருகிறார். ஐரோப்பா தனது  பொருளாதார உற்பத்தி பலத்தில் 2 விழுக்காட்டினை இராணுவக் கூட்டணிக்காக செலவிடவேண்டும் என்று அவர் வற்புறுத்தியுள்ளார்.

அமெரிக்கா பல ஆண்டுகாலமாக இதைத்தான் வலியுறுத்தி வருகிறது. ஆனால், நம்மைத் தொடர்ந்து அது நெருக்குவதை நம்மால் ஏற்க முடியாது என்று மூனிக் நகரில் நடந்து வரும் பாதுகாப்பு மீதான மாநாட்டில் ஜங்கெர் குறிப்பிட்டார்.

இராணுவச் செலவினம் பற்றி நமது அமெரிக்க நண்பர்கள் கொண்டுள்ள கருத்து மிகக் குறுகலானது. ஐரோப்பாவைப் பொறுத்தவரை மனிதாபிமான அடிப்படையில் அகதிகளுக்காக செலவிடப்படும் தொகை கூட இராணுவ பாதுகாப்புச் செலவினத்திற்கு ஒப்பானதுதான். நாடுகளின் பாதுகாப்புக்கு இதுவும் அவசியமானதே. அமெரிக்காவின் பாணி வேறுவிதமானது. எனவே அவர்களின் நெருக்குதலுக்கு நாம் பணிய வேண்டியதில்லை என்று ஜங்கெர் சொன்னார்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS