இந்தியாவுக்கு உதவவே கூடாது! முன்னாள் நேப்பாள பிரதமர் காட்டம்

World
Typography

காட்மண்டு, பிப்.17- பல்வேறு பிராந்திய கூட்டமைப்புகளில் இருந்து பாகிஸ்தானை ஓரங்கட்டம் விரிவான திட்டத்தில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அதன் திட்டத்திற்கு நேப்பாளம் ஒருபோதும் உதவக்கூடாது என்று முன்னாள் நேப்பாள பிரதமர் பிரகாஷ் ஒலி வலியுறுத்தினார்.

பாகிஸ்தானை ஓரங்கட்ட மிகப்பெரிய வியூகத்தை இந்தியா வகுத்துள்ளது. குறிப்பாக, இப்பிராந்தியத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு இடையே நிலவும் சிறிய கூட்டமைப்புகளில் பாகிஸ்தான் இருப்பதை தடுக்கவும், அதன் செல்வாக்கைக் குறைக்கவும் இந்தியா முயன்றிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

நேப்பாளத்தின் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகக்  கூட்டத்தில் ஆய்வு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த போது அதில் அவர் மேற்கண்டாவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் வியூகம் மிகத் தெளிவானது. பிராந்திய கூட்டமைப்புகள், துணைக் கூட்டமைப்புகள் ஆகியவற்றில் இருந்து பாகிஸ்தானை ஒதுக்கி வைக்கவேண்டும் என்று அது முனைந்துள்ளது. எனவே, இந்தியாவின் ஆசைகளை நிறைவேற்றுவதில் நேப்பாளம் உடந்தையாக கூடாது என்றார் அவர்.

இதனிடையே 2015ஆம் ஆண்டில் நேப்பாளத்தின் பிரதமர் பொறுப்பை ஏற்ற பிரகாஷ் ஒலி, கடந்த ஆண்டு ஆகஸ்டில் அப்பதவியிருந்து விலக நேர்ந்தது. தாம் பதவியில் இருந்து வீழ்த்தப்பட்டதற்கு இந்தியா தான் காரணம் என்று அவர் அடிக்கடி சாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தொடர்ந்து சீனாவுக்கும், அதன் வழி பாகிஸ்தானுக்கும் ஆதரவாகச் செயல்பட்டு வந்ததால் ஆத்திரமடைந்த இந்தியா,  வலதுசாரிக் கட்சியினர் மற்றும் நேப்பாள தேசியவாதிகளின் துணை கொண்டு இவரை வீழ்த்தியதாக நம்பப்படுகிறது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS