உதிர்ந்தது ஓர் அறிவியல் நட்சத்திரம் ! விஞ்ஞானி ஸ்டிபன் ஹவ்கிங் மரணம்!

World
Typography

லண்டன், மார்ச்.14- 'பூமிக்கு ஆபத்துக்கள் நிச்சயம் உண்டு. மனிதகுலம் தப்பிப் பிழைக்க வேண்டுமானால், இப்போதே மாற்றுக் கிரகம் ஒன்றைக் கண்டறிந்து குடியேறுவதற்கு வழி காணுங்கள்' என்று அடிக்கடி வலியுறுத்தி வந்த மாபெரும் இயற்பியல் (பௌதீக) விஞ்ஞானியான ஸ்டீபன் ஹவ்கிங் இன்று தமது 76 ஆவது வயதில் காலமானார்.

இந்தப் பிரபஞ்சத்தின் அறிவியல் வானில் சுடர்விட்டு ஜொலித்துக் கொண்டிருந்த நட்சத்திரம் ஒன்று உதிர்ந்து விட்டது என்று இவரது மரணத்தை வர்ணிக்கலாம்.

##  விஞ்ஞானி ஹவ்கிங்கிற்கு  ஒபாமா  விருதளிப்பு சிறப்பித்தார்...

பிரபஞ்சப் பெரும் பள்ளம் என்றழைக்கப்படும் பிளாக் ஹோல், மற்றும் கிரக ஈர்ப்பியல் ஆகிய அறிவியல் துறையில் மிகச் சிறந்த அறிவியல் பணிகளைச் செய்தவர் ஸ்டீபன் ஹவ்கிங்.

"எங்களின் நேசத்திற்குரிய தந்தை இன்று காலமாகி விட்டார் என்பதை மிகுந்த வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அவருடைய பிள்ளைகளான லூசி, ரோபெர்ட் மற்றும் டிம் ஆகியோர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தனர்.

அவர் ஒரு மாபெரும் விஞ்ஞானி. மிக அசாதாரணமான மனிதர். அவரது அறிவியல் பணிகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடித்து இருக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

##  மனைவி மற்றும் குழந்தைகளுடன்  ஹவ்கிங்...

1942 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு நகரில் பிறந்த ஹவ்கிங், 1957 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் படிக்கத் தொடங்கினார்.  அதன் பின்னர் தனது முனைவர் படிப்பை கேம்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் மேற்கொண்டார்.

ஆனால், 1963 ஆம் ஆண்டில் அவர் 'மோட்டர் நியூரோன்' என்ற நோய்க்கு இலக்கானார். அவர் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வார் என மருத்துவ நிபுணர்கள் கூறியிருந்தனர். எனினும், அதன் பின்னர் அரைநூற்றாண்டுகள் இந்த மண்ணில் வாழ்ந்து அறிவியல்  கண்டு பிடிப்புகள் மூலம் சாதனை புரிந்தார் ஹவ்கிங்.

## மகள் லூசியுடன் விஞ்ஞானி ஹவ்கிங்...

அவர் 1988 ஆம் ஆண்டில் எழுதிய 'காலத்தின் வரலாற்றுச் சுருக்கம்' என்ற நூல் உலகப் பிரசித்திப் பெற்ற ஒன்றாகும். சுமார் ஒரு கோடி பிரதிகள் விற்பனையாகியுள்ளன. இவருடைய வாழ்க்கை வரலாறு 'தியரி ஆஃப் எவரித் திங்' என்ற தலைப்பின் திரைப்படமாக வெளிவந்துள்ளது.

மிகவும் நகைச்சுவையாக பேசக்கூடிய இவரது  குணம், வெகுவாக பாராட்டப்பட்டது. அண்மைய காலமாக, பூமியிலிருந்து மனிதர்கள் வேறு கிரகங்களுக்குக் குடியேறுவதை ஆதரித்துத் தொடர்ந்து அறிவியல் பூர்வமான கருத்துக்களைக் கூறிவந்தார். வாழ்க்கையின் பெரும் பகுதியை அவர் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட சக்கர நாற்காலியில் கழித்தார்., கணினி வழிக் குரல் ஒலியின் உதவியுடன் பேசி வந்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS