Top Stories

அய்ல்ஸ்பர்ரி, நவ.18- இங்கிலாந்தின் அய்ல்ஸ்பர்ரி நகருக்கு அருகிலுள்ள வாட்டெஸ்டன் மன்னோர் என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிறிய விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்றும் சிறுரக விமானம் ஒன்றும் நடுவானில் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மொத்தம் நால்வர் மாண்டனர்.

சம்பந்தப்பட்ட விமான நிலையத்தில் இருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் ஹெலிகாப்டரும் அந்த விமானமும் நடுவானில் மோதிக் கொண்ட பின்னர் துண்டுகளாக உடைந்து கீழே விழுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

காட்டுப்பகுதியில் விழுந்து கிடக்கும் சிதைந்த பகுதிகள் தொடர்பில் விமானப் போக்குவரத்து மீதான புலன் விசாரணைப் பிரிவு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. விபத்தின் போது ஹெலிகாப்டரில் இருவரும் சிறுரக விமானத்தில் இருவரும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

நியூயார்க், நவ.18- நியூயார்க்கிலுள்ள ஹமில்டன் ஹைய்ட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த கோரத் தீவிபத்தில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்களின் கதியென்ன ஆனது? என்று தெரியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறுகின்றனர்.

இந்த 6 மாடி அடுக்கு வீட்டின் மேல் பகுதியில் தொடங்கிய இந்தத் தீயைக் கட்டுப்படுத்த 170-க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். 

இந்தத் தீவிபத்தைத் தொடர்ந்து இங்கு குடியிருந்த பலரும் அவசர அவசரமாக தப்பியோடினர். பகல் 3 மணிக்கு இந்த விபத்து நடந்ததால் பலர் தப்ப முடிந்தது. எனினும், மேல் மாடிகளில் தங்கியிருந்த குடும்பங்களின் நிலை குறித்து தீயணைப்பு வீரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேல் மாடிகளில் எவ்வளவு பேர் தங்கியிருந்தனர்? யார் யார் உள்ளே இருந்தனர்? யார் யார் தீ விபத்தின் போது அங்கே இல்லை என்பது போன்ற விபரங்களைத் திரட்ட முடியாததால் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர், நவ.17- கடந்த ஏப்ரல் மாதத்தில், எம்.ஆர்.டி இரயில் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு ஆடவரைத் தாக்கியதாக சிங்கப்பூரைச் சேர்ந்த 71 வயது ஆடவர் ஒருவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதியன்று ஃபெர்ரர் பார்க் எம்.ஆர்.டி நிலையத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரயிலில், ஜோசப் ஃபிலின் டி மரினி என்ற ஆடவரை கான் தியான் சூ தகாத வார்த்தைகளில் திட்டினான். ஐந்து நிமிடங்கள் கழித்து, டி மரினியின் தலைப் பகுதியை தியான் சூ தாக்கினார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

அதுமட்டுமல்லாது, அந்த வெளிநாட்டவரை தகாத வார்த்தைகளால் திட்டும் போது தனது குரலை உயர்த்தி கோபத்தை வெளியிட்டு, அந்த இரயிலில் பயணித்துக் கொண்டிருந்த மற்ற பயணிகளுக்கு எரிச்சலை மூட்டினார் என்றும் அந்த 71 வயது ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

மனநல மருத்துவ கழகத்தின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள கான், தனது வழக்கறிஞருடன் நீதிமன்றத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கு டிசம்பர் 1-ஆம் தேதி விசாரணைக்கு உட்படுத்தப்படும். 

எம்.ஆர்.டி இரயிலில் நிகழ்ந்த இச்சம்பவம், சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது. கானின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 5,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் அல்லது 6 மாதச் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். 

 கொழும்பு, நவ.16- தனது கையில் புத்தர் உருவத்தைப் பச்சைக் குத்தி இருந்ததற்காக இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணுக்கு கொழும்பு நீதிமன்றம் 6 லட்ச ரூபாய் இழப்பீடு தர உத்தரவிட்டது.

கடந்த 2014ஆம் ஆண்டில் இந்தப் பெண் இலங்கைக்கு வந்திருந்த போது அவரது கையில் புத்தரின் உருவம் பச்சை குத்தப்பட்டிருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவரை கைது செய்து தடுத்து வைத்ததோடு, பின்னர் பிரிட்டனுக்கே திருப்பி அனுப்பினர்.

இது தொடர்பாக, நயோமி கோல்மன் என்ற அந்தப் பெண் கொழும்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், நயோமி கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டது மனித உரிமையை மீறிய செயலாகும் என்று இன்று தீர்ப்பளித்தது.

மேலும் அந்தப் பெண்ணுக்கு இலங்கை அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு குறித்துக் கருத்துரைத்துள்ள நியோமி, உண்மையில் தாம் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக கூறினார்.

''நான் புத்தரையோ, பவுத்த மதத்தையோ, இலங்கை கலாசாரத்தையோ அவமதிப்பதற்காக கையில் பச்சை குத்திக் கொள்ளவில்லை. நான் இன்னுமும் பவுத்த சமயத்தை பின்பற்றுகிற ஒரு பெண்" என்றார் நயோமி.

"இனிமேல் எந்தக் காரணம் கொண்டும் நான் இலங்கைப் பக்கமே வரமாட்டேன். எனது வழக்கறிஞர்கள் உள்பட எனக்கு உதவிய சில இலங்கை அன்பர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்" என்று அவர் சொன்னார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ரியாத், நவ.16- மலேசியாவின் தேசிய ஃபத்வா சமய மன்றம் யோகாவை மலேசிய முஸ்லீம்களிடம் தடை விதித்துள்ள நிலையில், சவுதி அரேபியா யோகா கலையை விளையாட்டு நடவடிக்கையாக அங்கீகரித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை சவுதி அரேபியா தனது வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சின் கீழ் யோகாவை விளையாட்டு நடவடிக்கையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை இந்தியா டூடே ஆங்கில பத்திரிக்கை செய்தியாக வெளியிட்டிருந்தது.

இதன்வழி, சவுதி அரேபியாவில் யோகா கலையைக் கற்க அல்லது கற்பிக்க நினைப்பவர்கள் முறையாக விண்ணப்பம் செய்து உரிமம் பெற்று அதனை மேற்கொள்ளலாம். 

இதனைப் பற்றி கருத்துரைத்த தேசிய பத்வா சமய மன்றத்தின் தலைவர் டத்தோ டாக்டர் அப்துல் சுகோர் ஹூசின், சமயம் சார்ந்த மந்திரங்கள் மற்றும் பூஜைகள் இல்லாத உடல்பயிற்சியாக யோகாவை மேற்கொள்வது தவறாகாது எனக் கூறினார். 

கோலாலம்பூர், நவ.16- கோலாலம்பூரிலிருந்து திரும்பிய இந்தியாவைச் சேர்ந்த ஆடவன் ஒருவன், ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 512 ரிங்கிட் மதிப்புள்ள தங்கங்களைக் கடத்தியதாக பிஜூ பட்நாயக் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டான்.

ஏர் ஆசியா விமானத்தில் பயணம் செய்த அந்த நபர், மாத்திரைகள் போன்று காட்சியளித்த அந்தத் தங்கக் கட்டிகளை, ஒரு சிறிய பெட்டிக்குள் மறைத்துக் கடத்தியதோடு சில கட்டியை அந்த நபர் விழுங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

"அவன் கையில் இருந்த சிறிய பெட்டியில் 33 தங்கக் கட்டிகளை நாங்கள் கண்டெடுத்தோம். மேலும், அவற்றில் ஒன்றை அவன் விழுங்கி உள்ளான். இந்தத் தங்கக் கட்டிகள் 661.53 கிராம் எடைக் கொண்டுள்ளன" என்று பிஜூ பட்நாயக் விமான நிலைய சுங்கத் துறை துணை ஆணையர் ஆர்.பி.எஸ் ராஜ்வார் கூறினார். 

"உடலில் உலோகம் ஏதும் பொருத்தப்பட்டுள்ளதா? என்ற சோதனையின் போது, அந்த ஆடவரின் உடலில் தங்கம் உள்ளது என்பது கண்டறியப்பட்டது. உடனே சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்து அந்த நபரிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போதுதான் அவன் தங்கக் கட்டியை விழுங்கி இருப்பதும் தெரிய வந்தது" என்று அவர் சொன்னார். 

அந்த ஆடவன் மலேசியாவிற்கு முதல் முறையாக பயணத்தை மேற்கொண்டுள்ளான். அவன் கடத்தல் தொழிலுக்கு புதியவன் என்றும் தி டைம்ஸ் இந்தியா பத்திரிகைத் தகவல் தெரிவித்துள்ளது. 

அந்தத் தங்கக் கட்டிகள் அடங்கிய பெட்டியை யாரோ கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தன்னிடம் கொடுத்து அனுப்பிய தாகவும். அவற்றுக்கு சொந்தக்காரர்கள் யார் என்று தனக்கு தெரியாது என்றும் அந்த நபர் கூறிய அந்தத் தினசரி செய்தி கூறுகிறது.

வாஷிங்டன், நவ.16- அமெரிக்க மக்களுக்கு எடுத்து விளக்கவேண்டிய நேரம் வந்து விட்டது. நமது அரசியல் அமைப்புச் சட்டத்தை முட்டி மோதி காயப்படுத்தும் அதிபர் டொனால்ட் டிரம்பின் செயல்களுக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும். அதற்கு ஒரே வழி, டிரம்புக்கு எதிராக பதவிநீக்கம் செய்யும் கண்டனத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது தான் என்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு அறிவித்திருக்கிறது. 

அதிபர் டிரம்புக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டுவர ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.கள் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஐந்து வகையான அம்சங்களின் அடிப்படையில் தீர்மானங்களை அறிமுகப்படுத்தப் போவதாக அவர்கள் கூறியுள்ளனர். 

இந்தக் குழுவின் சார்பில் பேசிய ஜனநாயகக் கட்சியின் எம்.பியான ஸ்டிவ் கொஹென் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

மத்திய உளவுத்துறையின் இயக்குனரான ஜேம்ஸ் கோமியை பதவி நீக்கம் செய்ததன் வழி அதிபர் டிரம்ப், நீதிக்கு தடங்கலை ஏற்படுத்தி இருக்கிறார். இதனால், அரசியல் அமைப்புச் சட்ட அம்சங்களை அவர் மீறியிருக்கிறார். 

மேலும் மத்திய நீதித்துறையின் சுதந்திரத்தை கீழறுக்கும் வகையிலும் பத்திரிகைச் சுதந்திரத்திற்கு கேடுவிளைவிக்கும் வகையிலும் அவர் செயல்பட்டுள்ளார் என்று ஸ்டிவ் கொஹென் தலையிலான ஐந்து ஜனநாயகக் கட்சி எம்.பி.கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நாடாளுமன்றம் அவருக்கு எதிரான பதவி நீக்க வகை செய்யும் கண்டனத் தீர்மான விசாரணையைத் தொடங்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

இதனிடையே அதிபர் டிரம்பின் அபார வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாமல் இன்னமும் சிலர் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று டிரம்பின் பத்திரிகைச் செயலாளரான சாரா சாண்டெர்ஸ் சாடியுள்ளார்.

அதிபரை நீக்குவதற்காக அலைவதை விட்டு விட்டு மக்களுக்கு ஏதாவது வரிச் சலுகைகளைப் பெற்றுத்தரமுடியுமா? என்பதில் இவர்கள் கவனம் செலுத்தலாம் என்று அவர் கிண்டலடித்தார்.

 

சிங்கப்பூர், நவ.15- இங்குள்ள ஜூ கூன் இரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்ட இரயில் ஒன்றின் மீது சிங்கப்பூர் எம்.ஆர்.டி இரயில் மோதியதில் 25 பேர் காயமடைந்தனர் என்று சிங்கப்பூர் பொதுத் தற்காப்பு படைப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது. 

இந்த விபத்து காலை மணி 8.33-க்கு நிகழ்ந்ததாக அந்தப் பிரிவு தெரிவித்தது. இவ்விபத்தில் காயமுற்றோருக்கு சிங்கப்பூர் பொதுத் தற்காப்பு படைப் பிரிவு முதலுதவி வழங்கி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. 

காலை 6 மணியளவில், 'யெல்லோவ் லைன்னில்' நேர்ந்த தாமத்தின் காரணத்தால், 'சிக்னல் தவறு' நிகழ்ந்ததாகவும், அதனால் அவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.  

 ஹராரே, நவ.15- திடீர்ப் புரட்சியின் மூலம் ஜிம்பாப்வேயின் ஆட்சி அதிகாரத்தனந்நாட்டு இராணுவம் கைப்பற்றியது. 1980-ஆம் ஆண்டு முதல் அதிபராக இருக்கும் 93 வயதுடைய ரோபெர்ட் முகாபே கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார்.

ஜிம்பாப்வே அதிபர் ரோபெர்ட் முகாபே, அதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாகக் கூறி அந்நாட்டின் துணை அதிபர் எம்மர்சன் நாங்காவாவை கடந்த வாரம் பதவி நீக்கம் செய்தார்.

இதனால், ஆளும் ஷானு-பி.எப் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இராணுவ தலைமை தளபதி ஜெனரல் சிவெங்கா, துணை அதிபர் நாங்காவாவுக்கு ஆதரவாக நின்றார். இதனால், அந்நாட்டு அரசியலில் குழப்பநிலை ஏற்பட்டது.

இந்நிலையில், உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை தலைநகர் ஹராரேவை இராணுவ பீரங்கிகள் சுற்றி வளைத்தன. அதிகளவிலான ராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் தலைநகரைச் சுற்றி குவிக்கப்பட்டிருந்தனர். 

அப்போது, துப்பாக்கி மற்றும் பீரங்கிகளால் சுடும் சப்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அந்நாட்டு அரசு ஊடக தலைமையகத்தையும் இராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. நாடாளுமன்றம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களையும் படிப்படியாக இராணுவம் முற்றுகையிட்டு, தன்வசம் கொண்டு வந்தது. 

அதிபர் மாளிகையை எப்போது வேண்டுமானாலும், இராணுவம் முற்றுகையிடலாம் என்ற நிலைநீடித்து வந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

"அரசை கைப்பற்றும் நோக்கமில்லை" என இராணுவச் செய்தி தொடர்பாளர் முன்னர் கூறியிருந்தார். குற்றவாளிகளை மட்டுமே இராணுவம் குறிவைத்துள்ளது எனவும் தெரிவித்திருந்தார். 

அதிபர் முகாபே மற்றும் அவரது குடும்பத்தினர் இராணுவத்தின் கண்காணிப்பில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

இதற்கிடையே, "இரத்தம் சிந்தாமல் நடைபெற்ற மாற்றம்" என ஆளும்கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் குழப்பமான சூழ்நிலை நிலவுவதால் தங்களது நாட்டவர்கள் வெளியே செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி அமெரிக்க மற்றும் பிரிட்டன் தூதரகங்கள் அறிவுறுத்தியுள்ளன.

 

 

 

 

 

 டாக்கா, நவ.15- மியன்மாரில் இருந்து தப்பிச் சென்ற லட்சக் கணக்கான ரோஹின்யா அகதிகள், வங்காள தேசத்தில் பல்வேறு அவலங்களை எதிர்நோக்கி உள்ளனர். இதில் பெண் அகதிகள் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் கொடுமை அதிகரித்து வருகிறது.

பாதிக்கப்பட்ட பெண் அகதி ஒருவர், பாலியல் தொழில் சிக்கி தான் பட்ட அவதிகளை கண்ணீருடன் விளக்கினார். மியன்மாரிலிருந்து தப்பி வந்த தன்னை, அழகுபடுத்தி, பின்பு கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் செய்ய வைத்தது குறித்து 21 வயது பெண் ஹலீமா பரபரப்பு தகவலை அனைத்துலக ஊடகங்களுக்கு பகிர்ந்துள்ளார். 

வங்காளதேசத்தில் நுழைந்தவுடன், நாங்கள் ஒரு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு ஒரு உள்ளூர் மனிதர் எங்களுக்கு உணவு வழங்கினார். மேலும், அவர் தன்னிடம் வந்து தன் மனைவியை இழந்து விட்டதாகவும் தனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும் என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பப் படுவதாகவும் கூறினார். 

அதை நம்பி காக்ஸ் பசார் என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றேன் என்று ஹலீமா தெரிவித்தார். ஆனால், அந்தக் குடியிருப்பில் தன்னைப் போலவே ஏழெட்டு இளம்பெண்கள் அங்கு இருந்ததை பார்த்ததாகக் கூறிய ஹலிமா, தான் பயந்துவிட்டதாகவும் பின்பு அந்த வீட்டில் பல ஆண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள கட்டாயப்படுத்தப் பட்டதாகவும் கூறினார்.

மியன்மாரின் வடக்கு மாநிலத்தில் நடந்த வன்முறையில் இருந்து தப்பித்து, மூன்று மாதங்களுக்கு முன்னர் வங்காளதேசத்திற்கு வந்து சேர்ந்ததாக ஹலிமா சொன்னார். 

வங்காளதேசப் பெண் ஒருவர் நடத்தி வந்த ஒரு குடியிருப்பில் தாம் இரண்டு மாதங்கள் தங்கியதாக கூறும் ஹலீமா, சில நேரங்களில் ஒர் இரவில் மட்டும் மூன்றிலிருந்து நான்கு ஆண்களுடன் உறவில் ஈடுபட கட்டாயப் படுத்தப்பட்டதாக தெரிவித்தார். அந்த நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது என கூறும் அவர், பல நாட்கள் இரத்தப் போக்கால் அவதிப் பட்டேன் என்று கண்ணீருடன் கூறினார்.

 

ரியாத், நவ.15- சவுதி அரேபிய மன்னர் சல்மான் விரைவில் பொறுப்பிலிருந்து விலகுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. சவுதியில் சல்மான் அப்துல்லா (வயது 81) மன்னராக உள்ளார். அவரது மகன் முகமட்  பின் சல்மான் (வயது 32) பட்டத்து இளவரசராக பொறுப்பில் இருந்து வருகிறார்.

மன்னருக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அரச குடும்பத்து இளவரசர்கள் 11 பேர் அண்மையில் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். மேலும், பட்டத்து மன்னர் சல்மானுக்கு எதிராக கருத்துகளைக் கூறிவந்த இளவரசர்களில் ஒருவரான மிக்ரின் என்பவர் ஏமன் எல்லையில் ஹெலிகொப்டர் விபத்தில் பலியானார்.

சம்பந்தப்பட்ட விபத்தானது திட்டமிட்ட படுகொலை எனவும், சவுதி ராணுவமே இதை மேற்கொண்டது எனவும் இஸ்ரேலிய நாளேடு ஒன்று உறுதிப்படுத்தப்படாத தகவலை வெளியிட்டு அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.

இந்நிலையில், வயது முதுமை காரணமாக மன்னர் சல்மான் விரைவில்  பொறுப்பில் இருந்து விலகுவார் என்றும் பட்டத்து இளவரசர் முகமட் பின் சல்மான் மன்னர் பொறுப்பை ஏற்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை மறுத்துள்ள அரசு வட்டாரம், மன்னர், வாழ்நாள் முழுவதும் அப்பதவியில் நீடிப்பார் என்றும் கூறியுள்ளது.

 

 

வாஷிங்டன் நவ.15- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காரில் சென்று கொண்டிருந்த போது அவரை நோக்கி ஆபாசச் சைகை காட்டியதால் பெண் ஒருவர் வேலையிழந்தார். தற்போது அவருக்கு இணையதளம் ஒன்று உதவி செய்துள்ளது.

வெர்ஜினியாவில் உள்ள அகிமா எல்.எல்.சி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 50 வயதான ஜூலி பிரிஸ்க்மேன் என்ற பெண், சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவ்வழியாக கோல்ப் கிளப்பிற்கு செல்வதற்காக அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது காரில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது பிரிஸ்க்மேன், டிரம்பை நோக்கி நடு விரலை நீட்டி ஆபாசச் சைகை காண்பித்து ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். இந்தக் காட்சியை வெள்ளை மாளிகை புகைப்பட கலைஞர் ஒருவர் படம்பிடிக்க, இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.

இதனால், ஜூலி வேலையில் இருந்து நீக்கப்பட்டார். வேலையிழந்த காரணத்தால் வருவாய்க்கு பாதிக்கப்பட்ட ஜூலிக்கு தற்போது கோ ஃபண்ட்  மீ பேஜ்  "GoFundMepage" என்ற இணையதளம் 55 ஆயிரம் டாலர் நிதி தந்து  உதவியிருக்கிறது.

 

Advertisement