பாயெர்ன் மூனிக் அதிரடியில் வேரோடு சாய்ந்தது அர்சனல்:

உலக அரங்கம்
Typography

 மூனிக், பிப்16- ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில்,  இங்கிலாந்தின் புகழ்பெற்ற அர்சனல் குழுவை ஜெர்மனியின் பாயெர்ன் மூனிக் வேரோடு சாய்த்தது.

காலிறுதிக்கு முந்திய சுற்றின் முதல்கட்ட மோதலில் 5-1 என்ற கோல்கணக்கில் தோல்வி கண்டுள்ள அர்சனல், இரண்டாவது கட்ட ஆட்டத்தில் 5 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்து காலிறுதிச் சுற்றுக்குள் காலடி எடுத்து வைக்க முடியும்.

எனவே, இது சாத்தியமில்லை என்கிற நிலையில், சாம்பியன்ஸ் லீக் போட்டியிலிருந்து 6ஆவது ஆண்டாக அர்சனல் வெளியேற்றப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

முற்பகுதி ஆட்டத்தின் போது பாயெர்ன் குழுவுக்கு ஈடுகொடுத்து அர்சனல் விளையாடியது. முதலில் பாயெர்ன் குழு வீரர் அர்ஜென் ருபென் கோலடித்தார். பதிலடியாக அர்சனல் வீரர் அலெக்ஸி சான்செஸ் ஒரு கோலைப் போட்டு ஆட்டத்தைச் சமமாக்கினார்.  

பிற்பகுதி ஆட்டத்தின் போது நிலைமை தலைகீழாக மாறியது அர்சனலின் தற்காப்பு ஆட்டக்காரர் லாரெண்ட் கோசில்னி காயமடைந்து வெளியேறிய பின்னர் அதிரடித் தாக்குதல்களை நடத்திய பாயெர்ன் குழு 10 நிமிட இடைவெளிக்குள் மூன்று கோல்களை அடித்து அர்சனலை சின்னபின்னப் படுத்தியது.

பாயெர்ன் குழு வீரர்களான லெவான்டோஸ்கி ஒரு கோலையும், தியாகோ அல்கண்ட்ரா இரண்டு கோல்களையும் அடித்த வேளையில் ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்த போது தோமஸ் முல்லர் மேலும் ஒரு கோலையும் போட்டு 5-1 கோல்கணக்கில் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இந்தத் தோல்வி பற்றிக் கருத்துரைத்த அர்சனல் நிர்வாகி அர்சனி வெங்கர், தம்முடைய உணர்வை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என்று குறிப்பிட்டார்.

முற்பகுதி ஆட்டத்தின் போது கிடைத்த ஓரிரு நல்ல வாய்ப்புக்களை எனது ஆட்டக்காரகள் வெற்றிகரமாக பயனபடுத்தி இருப்பார்களேயானால், எங்களுக்கு தோல்வி ஏற்பட்டிருக்காது. இந்நிலையில் தற்காப்பில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தி வந்த கோசில்னி காயமடைந்து வெளியேறியது சரிவுக்கு வித்திட்டு விட்டது என வேதனையுடன் சொன்னார் வெங்கர்.

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS