சாதித்தது போதும், விடைபெற போகிறேன்- மின்னல் வேக ஓட்டக்காரர் உசைன் போல்ட்

உலக அரங்கம்
Typography

மொனாகோ, பிப்.15- உலகின் மின்னல் வேக ஓட்டக்காரர் உசைன் போல்ட் ஓட்டப்பந்தய துறையிலிருந்து வரும் ஆகஸ்டு மாதம் விடைபெற போவதாக அறிவித்துள்ளார். தான் எடுத்த இந்த முடிவில் தனக்கு எந்த வருத்தமும் கிடையாது எனவும் அவர் கூறினார்.

ஜமைக்காவைச் சேர்ந்த உசைன் போல்ட் ஓட்டப்பந்தய துறையில் சாதிக்காத போட்டிகளே கிடையாது எனலாம். கடந்த ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 9வது தங்கத்தை வென்று வரலாற்று சாதனைப் படைத்தார். ஆனால், நால்வர் பங்கேற்ற 100 மீட்டர் தொடர் ஒட்டத்தில் தன் சக ஓட்டக்காரர் ஊக்கமருந்து உண்டதால் உசைன் போல்ட் உட்பட மற்ற மூவரின் தங்கங்களும் பறிக்கப்பட்டன.

இந்நிலையில், வரும் ஆகஸ்டு மாதம் லண்டனில் நடக்கவிருக்கும் உலக கோப்பைக்கு பிறகு தாம் ஓட்டப்பந்தயத்தை விட்டு விலகவிருப்பதாக உசைன் கூறியுள்ளார். இத்துறையில் தாம் சாதிக்க நினைத்த அனைத்தையும் சாதித்து விட்டதாக கூறிய உசைன் இனி ஓட்டப்பந்தய துறையில் இருப்பதற்கு காரணங்கள் ஏதும் கிடையாது என கூறியுள்ளார்.

"அமெரிக்காவின் முன்னாள் அதிவேக ஓட்டக்காரர் மைக்கல் ஜோன்சனிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன். அதாவது புகழின் உச்சியில் இருக்கும்போது ஏன் விளையாட்டுத்துறையை விட்டு விலகுகிறீர்கள் என்று. அதற்கு அவர், ஓட்டப்பந்தயத்தில் நான் சாதிக்க நினைத்தவற்றை சாதித்து விட்டேன். இனியும் இதிலேயே இருக்க என்ன அவசியம் என பதிலளித்தார். அன்று அவர் கூறியதன் அர்த்தத்தை இன்று தான் நான் புரிந்து கொண்டேன்" என உசைன் போல்ட் கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS