லீக் கிண்ணம்: அர்சனல் வேரோடு சாய்ந்தது! சாம்பியனானது மன்.சிட்டி!

உலக அரங்கம்
Typography

லன்டன்,பிப்.26- இங்கிலாந்தின் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்தில் மன்செஸ்ட்டர் சிட்டி 3-0 என்ற கோல் கணக்கில் அர்சனல் குழுவை வேரோடு சாய்த்து வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது. 

மன்.சிட்டி குழுவின் நிர்வாகியாக  ஸ்பெயினைச் சேர்ந்த பிரபல பயிற்சியாளர் பெப்  குவாடியோலா பதவியேற்ற பிறகு அக்குழு கைப்பற்றி முதல் வெற்றிக் கிண்ணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே எப்.ஏ. கிண்ன கால்பந்து போட்டியின் 5ஆவது சுற்றில், இரண்டாம் டிவிசனில் விளையாடி வரும் விகான் குழுவிடம் தோல்வி கண்டு தர்மசங்கடத்திற்கு உள்ளான மன்.சிட்டி, அந்தத் தோல்வியை ஈடுகட்டும் வகையில் பலம் பொருந்திய அர்சனலை அதிரடியாக வீழ்த்தி சாம்பியனானது.  

முற்பகுதி ஆட்டத்தின் 18ஆவது நிமிடத்தில் மன்.சிட்டியின் மூத்த முன்னணி வீரர் செர்ஜியோ அக்குயெரோ முதல் கோலை அடித்தார். பின்னர் பிற்பகுதி ஆட்டத்தின்58 ஆவது நிமிடத்தில் தற்காப்பு வீரர் வின்செண்ட் கொம்பெனி இரண்டாவது கோலையும் 65 ஆவது நிமிடத்தில் மத்திய திடல் ஆட்டக்காரர் டேவிட் டி சில்வா மூன்றாவது கோலையும் போட்டனர். 

அடுத்து, மன்.சிட்டி குழு பிரிமியர் லீக் சாம்பியன் பட்டத்திற்கும் ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து சாம்பியன் பட்டத்திற்கும் குறி வைத்திருப்பதாக அதன் நிர்வாகி பெப் குவார்டியோலா தெரிவித்தார். 

அதேவேளையில் மன்.சிட்டி குழுவிடம் அர்சனல் தோற்ற விதம்,  அக்குழு மீதும் ஆட்டக்காரர்கள் மீதும் பயிற்சி மீதும் பல கேள்விகள் எழக் காரணமாக அமைந்துள்ளது என்று அதன் நிர்வாகி வெங்கர் குறிப்பிட்டார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS