கால்பந்து: 30 குழுக்கள் தேர்வு: கண்ணீரில் மூழ்கின ஹாலந்து, இத்தாலி! 

உலக அரங்கம்
Typography

 ஜூரிச், நவ.15- கடந்த 18 மாதங்களாக நடந்த தேர்வு ஆட்டங்களுக்குப் பின்னர், 2018 -ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இதுவரை 30 நாடுகள் தேர்வு பெற்றுள்ளன. இன்னும் இரண்டு நாடுகளுக்கான இடங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

ஐரோப்பா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய பிராந்தியங்களில் இருந்து 30 நாடுகள் ரஷ்யாவில் நடக்கும் இறுதிப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளன. போட்டியை ஏற்று நடத்தும் நாடு என்ற வகையில் ரஷ்யா தேர்வுச் சுற்றில் பங்கேற்காமலேயே இறுதிச் சுற்றுக்கு தேர்வாகிவிட்டது. 

தொடர்ச்சியாக தேர்வு பெற்றுவிட்ட நிலையில், இந்நாடுகள் மகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில், சில முக்கிய கால்பந்து வல்லரசுகள் தேர்வு பெறத் தவறியதால் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளன.

2018-ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணப் போட்டிக்கு தேர்வு பெற்ற நாடுகளின் பட்டியல் வருமாறு;

ஆசியாவிலிருந்து...,

1) ஈரான், 2) ஜப்பான், 3) சவுதி அரேபியா, 4) தென்கொரியா.

ஆப்பிரிக்காவிலிருந்து...,

1) எகிப்து, 2) மொரோக்கோ, 3) நைஜீரியா, 4) செனகல், 5) துனிசியா.

வட மற்றும் மத்திய அமெரிக்காவிலிருந்து..,

1) கோஸ்டா ரிக்கா, 2) மெக்சிகோ, 3) பனாமா.

தென் அமெரிக்காவிலிருந்து..,

1) அர்ஜெண்டினா, 2) பிரேசில், 3) கொலம்பியா, 4) உருகுவே, 

ஐரோப்பாவிலிருந்து...,

1) பெல்ஜியம், 2) குரோசியா, 3) டென்மார்க், 4) இங்கிலாந்து, 5) பிரான்ஸ், 6) ஜெர்மனி, 7) ஐஸ்லாந்து, 8) போலந்து, 9) போர்த்துக்கல், 10) செர்பியா, 11) ஸ்பெய்ன், 12) சுவீடன், 13) சுவிட்சர்லாந்து, 14) ரஷ்யா.

மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டியில் இன்னும் 2 இடங்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. இவ்விரு இடங்களுக்கான தேர்வு ஆட்டங்களில் ஹோண்டுராஸை எதிர்த்து ஆஸ்திரேலியாவும் பெருவை எதிர்த்து நியூசிலாந்தும் விளையாடவுள்ளன. இப்போட்டிகளில் வெற்றி பெறும் இரு குழுக்கள், உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்கு தேர்வுபெறும்.

வாய்ப்பை இழந்த முன்னணி குழுக்கள்:

2018 -ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணப் போட்டிக்கு தேர்வுபெறத் தவறிய முன்னணிக் குழுக்களில் குறிப்பிடத்தக்கது இத்தாலி. இந்தக் குழு நான்கு முறை உலகக் கிண்ணத்தை வாகை சூடிய குழு என்பதோடு கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ச்சியாக உலகக் கிண்ண கால்பந்து இறுதிச் சுற்றுக்கு தேர்வு பெற்று வந்துள்ளது.

ஆகக் கடைசியான தேர்வு ஆட்டத்தில் சுவீடனுடன் இத்தாலி கோல் எதுவுமின்றி சமநில கண்டு வாய்ப்பை இழந்தது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த முதல் கட்ட ஆட்டத்தில் சுவீடன் 1-0 என்ற கோல்கணக்கில் வென்று இருந்ததால் அது இறுதிச் சுற்றுக்கு தேர்வு பெற்றுக்கு இத்தாலியை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியதால் இத்தாலி முழுவதும் ரசிகர்கள் மத்தியில் சோக அலை வீசி வருகிறது.

இறுதிச் சுற்றுக்கு தேர்வுபெறத் தவறியதன் வழி கால்பந்து ரசிகர்களை கண்ணீர் சிந்த வைத்த மற்றொரு குழு ஹாலந்து (நெதர்லாந்து) குழுவாகும். ஐரோப்பாவின் மிகச் சிறந்த கால்பந்து குழுவாக விளங்கிய இந்தக் குழு 1974, 1978 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் நடந்த உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டம் வரை சென்று சாம்பியன் பட்டத்தை நூலிழையில் தவறவிட்டது.   

மேலும் அமெரிக்கக் குழு இம்முறை இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெறத் தவறியது. தென் அமெரிக்க சாம்பியனான சிலியும் அடுத்த உலகக் கிண்ண போட்டிக்கு தேர்வு பெறவில்லை. தொடர்ச்சியாக தேர்வு பெற்று வந்த ஆப்பிரிக்க அணிகளான ஐவரி கோஸ்ட் மற்றும் கானா ஆகியவை தேர்வு ஆட்டங்களில் தோல்வி கண்டு வெளியேறின.

இதில் எதிர்பாராத விதமாக உலகக் கிண்ண இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெற்ற குழுக்களின் வரிசையில் ஐஸ்லாந்து குழுவும் பனமாவும் இடம்பெற்றிருக்கின்றன.

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS