பாரிஸ், மார்ச்.13- அதெல்லாம் செல்லாது.., செல்லாது.. மீண்டும் முதல்லே இருந்து ஆட்டத்தை தொடங்கணும். பார்சிலோனா மறு ஆட்டத்தில் பிஎஸ்ஜி குழுவுடன் விளையாட ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கோரி 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

கடந்த வாரம் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து ஆட்டத்தில் பிஎஸ்ஜியை வென்று பார்சிலோனா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

ஐரோப்பாவின் முன்னணி கால்பந்து குழுக்களான பார்சிலோனாவுக்கும் பிஎஸ்ஜி குழுவுக்கும் இடையே நடந்த முதல் கட்ட ஆட்டத்தில் பிஎஸ்ஜி 4-0 என்ற கோல்கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ஐரோப்பாவின் தலைசிறந்த குழுவான பார்சிலோனா 4 கோல் வித்தியாசத்தில் தோல்வி காண்பது மிக மிக அபூர்வமாகும் என்பதால் இந்த அதிர்ச்சி ஏற்பட்டது. 

எனினும், மறுவாரம் சொந்த அரங்கத்தில் நடந்த 2ஆம் கட்ட ஆட்டத்தில் பார்சிலோனா பதிலடி கொடுத்தது. இந்த ஆட்டத்தில் 6-1 என்ற கோல்கணக்கில் பிஎஸ்ஜி குழுவை வீழ்த்தி 6-5 என்ற கோல் விகிதத்தில் காலிறுதிக்கு தகுதிபெற்றது. 

இந்நிலையில், பிஎஸ்ஜி ரசிகர்கள் கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தினர். மீண்டும் பார்சிலோனாவுக்கும் பிஎஸ்ஜி குழுவுக்கும் இடையே மறு ஆட்டம் நடத்தப்படவேண்டும் என்று 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் மகஜரில் கோரியுள்ளனர்.

நடுவர் டெனிஷ் அய்டெக்கின் இரண்டு முக்கியமான பெனால்டிகளை பார்சிலோனாவுக்கு வழங்கியதால் தான் பிஎஸ்ஜி வீழ்ந்தது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். எனவே,  அந்த செல்லாது, மறு ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.

அது மட்டுமல்ல, இந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வியானது பிஎஸ்ஜியின் மனநிலைக்கு மிகப்பெரிய பாதிப்பு என்றும் கூறுகிறார்கள்.

 

தோக்யோ, மார்ச் 13- ஜப்பானின் கால்பந்து வீரரான காஸூயோஷி மியுரா நேற்று நடந்த போட்டியில் யோகோஹாமா குழுவிற்காக அடித்த கோல் அந்த குழுவின் வெற்றிக்கு உறுதுனையாக நின்றது. ஜப்பான் லீக்கில் விளையாடும் கால்பந்து வீரர்களில் இவரே வயதில் மிக முதிர்ந்தவர். அவருக்கு இந்த வருடம் 50 வயதாகிறது. "கோல் அடிப்பதற்கு நான் எப்போதும் வாய்ப்புகள் தேடிகொண்டே இருப்பேன். இந்த போட்டியில் நிச்சயம் நான் கோல் அடிப்பேன் என்று நினைத்துகொண்டு விளையாடியது எனக்கு உற்ச்சாகம் அளித்தது" என்று அவர் கூறினார். 

கடந்த பிப்ரவரியில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடிய இவர் 1990களில் ஆசியாவின் சிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்தார். 1993இல் ஜப்பான் லீக் துவங்கபட்டு ஜப்பானிய கால்பந்து துறை உயர இவரின் பங்கு முக்கியமானது. ஜப்பானுக்காக உலகளாவிய நிலை ஆட்டங்களில் விளையாடிய இவர் இதுவரை 89 கோல்கள் அடித்துள்ளார். 1994ஆம் ஆண்டில் இவர் இத்தாலியின் ஜெனோவா அணியில் இணைந்தார்.  

தனது 60ஆவது வயது வரை கால்பந்து விளையாட வேண்டும் என்பது இவரது கனவு. "இதற்குமுன் இங்கிலாந்தின் ஸ்தான்லீ மாத்தியூஸ் 1965ஆம் ஆண்டு ஸ்தோக் சிட்டிக்காக விளையாடியபோது அவருக்கு வயது 50. நான் அந்த சாதனையை முறியடிக்க முயற்சிப்பேன்", என்று மியூரா கூறினார். 

இங்கிலாந்து, மார்ச் 11-  ஆல் இங்கிலாந்து பூப்பந்து போட்டியில்,  சீனாவின் லின் டானுடன் களமிறங்கிய மலேசிய ஆட்டக்காரர் சுல்ஃபாட்லி 9-18 என்ற  புள்ளிகளில்  தோல்வியடைந்தாலும், ஆட்டத்தின் போது,  ஐந்து முறை உலகச் சாம்பியனான லின் டானை தமது நூதன ஆட்டத்தால்,திணறடிக்கச் செய்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.  

சுல்ஃபாட்லியின் ஆட்டத்தைச் சமாளிக்க முடியாத,  லின் டான் ஒரு கட்டத்தில் தமது ரேக்கட்டையே வீசி எறிய, அது போய் அரங்கத்தில் ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்த கேமராமேனைப் போய் தாக்குவது அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது. 

இது, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் இக்காணொளியைப் பார்க்கும் நெட்டிசன்கள், இதுவும் லின் டானின் புதிய விளையாட்டு நுட்பமாக இருக்குமோ என்ற கோணத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

 லண்டன், மார்ச்.10- உலகின் மூத்த பேட்டமிண்டன் வீரர்களான மலேசியாவின் லீ சோங் வெய் மற்றும் சீனாவின் லின் டான் ஆகியோர் அகில இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் காலிறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்றனர்.

அதேவேளையில் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் லோங்மும் டென்மார்க்கின் முன்னணி வீரரான ஜான் ஜோர்செனும் வீழ்ச்சி கண்டு வெளியேறினர்.

லீ சோங் வெய் காலிறுதி ஆட்டத்தில் தைவான் வீரரான தியன் ஹோவ் வெய்யுடன் மோதுகிறார். ஐந்து முறை உலகச் சாம்பியனாக வாகை சூடியுள்ள லின் டான், டென்மார்க்கின் அலெக்ஸ்செனுடன் மோதவிருக்கிறார்.

சீனாவின் சென் லோங் 21-16, 21-19 என்ற புள்ளிகளில் தாய்லாந்தின் தானோங்சாக்கிடம் தோல்வி கண்டு, சீனா பேட்மிண்டன் ரசிகர்ளுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தார்.

மலேசியாவின் கலப்பு இரட்டையர்களான சான் பெங் சோன் மற்றும் கோ லியூ யிங் ஜோடி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. மலேசியாவின் ஒலிம்பிக் வெள்ளிப்பதக்க இரட்டையர்களான கோ ஷெம் -டான் வீ கியோங் ஜோடி, சீனாவைச் சேர்ந்த ஜோடியை வென்று காலிறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.

இதனிடையே, அகில இங்கிலாந்து போட்டியில் பெரும்பாலான இந்திய வீரர்கள் 2ஆவது சுற்றிலேயே வெளியேறிவிட்ட நிலையில், அந்நாட்டின் முன்னணி வீராங்கனைகளான சாய்னா நேவாலும் பி.வி.சிந்துவும் காலிறுதி ஆட்டத்திற்குத் தேர்வு பெற்றுள்ளனர். 

 பார்சிலோனா, மார்ச்.9- ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த பிரசித்திபெற்ற கால்பந்து குழுவான பார்சிலோனா ஓர் அதிரடி வெற்றியின் வழி புதிய வரலாறு படைத்தது. 

பிரான்சைச் சேர்ந்த  பிஎஸ்ஜி எனப்படும் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் குழுவிடம் முதல் கட்ட மோதலின் போது 4-0 என்ற கோல்கணக்கில் தோல்வி கண்ட பார்சிலோனா குழு, நேற்று தனது தனது இரண்டாவது கட்ட ஆட்டத்தின் போது 6-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி அதிசயத்தை நிகழ்த்தியது.

இதன் வழி 6-5 என்ற கோல் விகிதத்தில் சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதி ஆட்டத்திற்கு பார்சிலோனா தேர்வுபெற்றது. சாம்பியன்ஸ் லீக் வரலாற்றிலேயே 4-0 என்ற கோல்கணக்கில் தோல்விமுகத்தில் இருந்த ஒரு குழு, அதிலிருந்து மீண்டு 6-1-இல் வெற்றியை நிலைநாட்டி, அடுத்த சுற்றுக்குத் தேர்வுபெறுவது இதுவே முதன் முறையாகும்.

இன்று அதிகாலை 3.45 மணியளவில் (மலேசிய நேரப்படி) நடந்த இந்த ஆட்டத்தின் முற்பகுதியில் பார்சிலோனா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. மேலும் 88-ஆவது நிமிடத்தில் பிஎஸ்ஜி 5-3 என்ற கோல் விகிதத்தில் வெற்றிமுனையில் இருந்தது.

இந்நிலையில், பார்சிலோனா இனி மீளாது எனக் கருதப்பட்ட நேரத்தில், அந்த அதிசயம் நிகழ்ந்தது. 89ஆவது நிமிடம், 91ஆவது நிமிடம் மற்றும் 95ஆவது நிமிடம் என வரிசையாக 3 கோல்களைப் போட்டு வெற்றியை பிஎஸ்ஜியிடமிருந்து பார்சிலோனா தட்டிப்பறித்தது.

இந்த வெற்றிக்குப் பின்னால் பார்சிலோனாவின் முன்னணி வீரர் நெய்மாரின் அபார ஆட்டம் முக்கிய பங்குவகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டம் பற்றிக் கருத்துரைத்த பார்சிலோனா நிர்வாகி லூய்ஸ் என்ரிக்கே, இந்த வெற்றியை வர்ணிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை. என்வாழ் நாளில் ஒரு கால்பந்து அதிசயத்தைக் கண்கூடாக பார்க்க நேர்ந்தது இன்றுதான் என்று சொன்னார்.

அதேவேளையில், கடைசி மூன்று நிமிடங்களில்தான் நாங்கள் எல்லாவற்றையும் இழக்க நேர்ந்தது என்று பிஎஸ்ஜி நிர்வாகி உனாய் எம்ரி வேதனையுடன் குறிப்பிட்டார்.

லண்டன், மார்ச் 3- சீன லீக் கிளப்புகளுக்கு ஆண்டி கரோலை விற்க முடியாது என அவரின் நிர்வாகி ஸ்லாவென் பிலிக் கூறினார். ‘எங்களின் சிறந்த விளையாட்டாளரை விற்கும் எண்ணம் இல்லை’ என வெஸ்ட் ஹாம் யுனைடெட்டும் திட்டவட்டமாக கூறியது.

ஆண்டி கரோலின் சிறந்த ஆட்டங்களைத் தொடர்ந்து கவனித்து வந்த சீன கிளப்புகள் அவருக்கு பெரிய தொகை தந்து வாங்கிகொள்ள முடிவெடுத்தன. ஆனால் அவருக்கு வந்த எந்த அழைப்பையும் அவர் ஏற்கவில்லை. கடந்த 4 ஆட்டங்களில் 4 கோல்கள் அடித்த கரோல் தற்போது காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். 

அடுத்து செல்சியுடன் மோதவுள்ள ஆட்டத்திற்கு அவர் மீண்டும் களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ‘அவர் குணமடைந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எனக்கு நம்பிக்கை உண்டு’ என்றார் பிலிக்.

லண்டன், பிப். 27- இங்கு வெம்பிளி அரங்கத்தில் நடந்த இங்கிலீஷ் கால்பந்து லீக் சாம்பியன் போட்டியின் இறுதியாட்டத்தில் சவுத்ஹாம்ப்டன் குழுவை 3-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி மன்செஸ்ட்டர் யுனைடெட் லீக் கிண்ணத்தை வென்றது.

இந்த ஆட்டத்தில் மன்.யுனை. குழுவின் முன்னணி ஆட்டக்காரரான ஷலாத்தான் இப்ரோகிமோவிச் இரண்டு கோல்களை அடித்து தம்முடைய குழுவின் வெற்றிக்கு உதவினார்.

ஆட்டம் தொடங்கிய 19ஆவது நிமிடத்தில் இப்ரோகிமோவிச் முதல் கோலைப் போட்டார். இந்த அதிர்ச்சியில் இருந்து சவுத்ஹாம்டன் மீள்வதற்குள் மன்.யுனை. வீரர் லிங்கார்ட் இரண்டாவது கோலை அடித்தார். 

எனினும், முற்பகுதி ஆட்டம் முடிய இரண்டு நிமிடங்கள் இருந்த வேளையில் சவுத்ஹாம்ப்டன் வீரர் கபியாடினி ஒரு கோலைப் போட்டார். பிற்பகுதி ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே கபியாடினி மீண்டும் ஒரு கோலைப் போட்டு அரங்கத்தை அதிரவைத்தார்.  

இந்நிலையில் ஆட்டம் 2-2 இல் சமநிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையில் 87ஆவது நிமிடத்தில் இப்ரோகிமோவிச் வெற்றிக் கோலை அடித்தார். இந்தக் கடைசி நேரச் சறுக்கலில் இருந்து சவுத்ஹாம்டனால் மீளமுடியவில்லை. 

நிர்வாகி மொரினோ தலைமையில் ஷார்ரிட்டி ஷீல்ட் மற்றும் இங்கிலீஷ் கால்பந்து லீக் கிண்ணம் ஆகிய இரண்டையும் இவ்வாண்டில் கைப்பற்றியுள்ள மன்.யுனை. குழு, தொடர்ந்து முன்பு போல் வெற்றிப்பாதைக்குத் திரும்பும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

More Articles ...