எப்.ஏ.லீக் கால்பந்து: சரவா அதிரடி! சமாளிக்கும் முயற்சியில் மிஃபா தோல்வி!

மலேசிய அரங்கம்
Typography

கூச்சிங், பிப்.16- எப்.ஏ.லீக் கால்பந்து போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் பலம் பொருந்திய சரவாவிடம் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கக் குழுவான மிஃபா 6-3 என்ற கோல்கணக்கில் தோல்வியைத் தழுவியது.

கூச்சிங்கிலுள்ள சரவா அரங்கத்தில் நடந்த இந்த ஆட்டத்தில், போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே மிஃபா குழு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியைச் சந்திக்க நேர்ந்தது.

சூப்பர் லீக் போட்டியில் விளையாடி வரும் குழு என்பதால் சரவாவின் அபார ஆட்டம், தொடக்கத்திலேயே மிஃபாவை நிலைகுலைய வைத்தது. முற்பகுதி ஆட்டத்தின் முடிவில் சரவா 4-0 என்ற கோல்கணக்கில் முன்னணி வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

பிற்பகுதி ஆட்டம் தொடங்கிய பின்னர் கடுமையாகப் போராடி மிஃபா குழு, பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடி,  மூன்று கோல்களை அடித்தது என்றாலும், சரவா தொடர்ந்து 5-3 என்ற கோல் எண்ணிக்கையில் முன்னிலை வகித்தது.

ஆட்டத்தைச் சமமாக்கும் முற்சியில் இறங்கிய வேளையில் மிஃபாவின் தற்காப்பு ஆட்டக்காரர் சதிஷ், நடுவரால் வெளியேற்றப்பட்ட போது தடுமாற்றம் ஏற்பட்டது. இந்த ஆட்ட இறுதியில் 6-3 என்ற கோல்கணக்கில் சரவா வாகைசூடியது.

இதன்வழி எப்.ஏ. கிண்ணப் போட்டியில் இருந்து வெளியேறி விட்ட நிலையில், இனி மிஃபா குழு தனது கவனத்தை முழுமையாக பிரிமியர் லீக்கில் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்.ஏ. கிண்ண தோல்வி பற்றிக் கருத்துரைத்த பயிற்சியாளர் ஜேக்கப் ஜோசப், தம்முடைய குழு களத்தில் இறங்கி முழுமையாக ஆட்டத்தில் கவனம் செலுத்த முயல்வதற்கு முன்பே சரவா கோல்களை அடித்ததுதான், இந்தத் தோல்விக்குக் காரணம் எனக் குறிப்பிட்டார். தற்காப்பில் நிகழ்ந்த சில தவறுகளால் சரவா எளிதாக முற்பகுதி ஆட்டத்திலேயே 4 கோல்களைப் போட்டது என அவர் சுட்டிக்காட்டினார்.

பிற்பகுதி ஆட்டத்தின் போது இதிலிருந்து மீண்டு மிஃபா பதிலடி கொடுத்தது என்றாலும், முற்றாக மீட்சி பெறுவதற்குள் காலம் கடந்துவிட்டது என்று அவர் சொன்னார்.

இந்த ஆட்டம் குறித்து மிஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன் குறிப்பிடுகையில், நமது விளையாட்டாளர்களுக்கு இந்த ஆட்டம் நல்லதொரு அனுபவத்தை வழங்கியிருக்கும்.  நமது வீரர்களும் தன்னம்பிக்கையோடு கடுமையாக விளையாடினர் என்று தெரிவித்தார்.

சரவாவைப் பொறுத்தவரையில் அது மாநில அணி, அதோடு நம்மை விட பொருளாதாரத்திலும் சிறந்த அணி, இருப்பினும் நமது வீரர்கள் கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடியது பாராட்டுக்குரியது என்றார் அவர்.

பிரிமியர் லீக்கில் மிஃபா குழு, அடுத்து குவந்தான் எப்.ஏ அணியுடன் மோதவிருக்கிறது. இந்த ஆட்டம் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு குவந்தான் அரங்கத்தில் நடைபெறுகிறது. 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS