காமன்வெல்த் வெற்றி: 'தங்க மகன்' என மீண்டும் நிருபித்தார் லீ சோங் வெய்

மலேசிய அரங்கம்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல்.15- ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டில் பேட்மிண்டன் ஒற்றையர் ஆட்டத்தில் மலேசியாவின் மூத்த வீரர் டத்தோ லீ சோங் வெய்  தங்கப் பதக்கத்தை வென்று சாதனைப் படைத்தார்.  இறுதியாட்டத்தில் உலகின் முதல்நிலை ஆட்டக்காரராக விளங்கும் இந்தியாவின் ஶ்ரீகாந்தை 19-21, 21-14, 21-14 என்ற புள்ளிகளில்  லீ சோங் வெய் வீழ்த்தினார்.

36 வயதுடைய லீ சோங் வெய்க்கு இது 3ஆவது காமன்வெல்த் தங்கம் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 25 வயதுடைய ஶ்ரீகாந்திடம் முதல் செட்டில் 19-21 என்ற புள்ளிகளில் கடும் போராட்டத்திற்குப் பின்னர் லீ சோங்  வெய் வீழ்ச்சி கண்டாலும், அடுத்தடுத்த செட்டுகளில் அவர் அபாரமாக விளையாடி வெற்றியை நிலைநாட்டினார். 

இந்தக் காமன்வெல்த் போட்டியின் தொடக்கத்தில், குழு ரீதியிலான ஆட்டத்தின் போது ஶ்ரீகாந்திடம்  லீ சோங் வெய்  தோல்வி கண்டார் என்பதால், மலேசிய ரசிகர்கள் மத்தியில் இன்றைய ஆட்டத்தின் போது பதட்டமான சூழ்நிலையே நிலவி வந்தது. முதல் செட்டில் லீ சோங் வெய் தோல்வி கண்ட போது தங்கம் கைநழுவி விட்டதைப் போல ரசிகர்கள் உணர்ந்தனர்.

ஆனால், அசுர வேகத்தில் அந்தத் தோல்வியிலிருந்து மீண்டு, தம்முடைய அனுபவங்களை முன்நிறுத்தி இந்த அபாரமான வெற்றி லீ சோங் வெய் நிலைநிறுத்தி மலேசியாவின் 'தங்க மகன்' என்பதை நிருபித்தார்.

இதனிடையே பெண்களுக்கான ஒற்றையர் போட்டியின் இறுதியாட்டத்திற்கு இந்தியாவின் இரு வீராங்கனைகள் தேர்வு பெற்றிருந்த நிலையில், மூத்த வீராங்கனையான சாய்னா நேவால் 21-18, 23-21 என்ற புள்ளிகளில் சக வீராங்கனையான பி.வி. சிந்துவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS