ஊக்கமருந்து; நீச்சல் வீராங்கனை வெண்டியின் தங்கங்கள் பறிப்பு!

மலேசிய அரங்கம்
Typography

 

கோலாலம்பூர், அக்26- மலேசிய நீச்சல் வீராங்கனை வெண்டி இங் யான் யீ, ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ஆகஸ்டு மாதம் கோலாலம்பூரிலில் நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டியில் அவர் வென்ற தங்கப் பதக்கங்களை திருப்பித் தருமாறு பணிக்கப்பட்டுள்ளார். 

வெண்டியின் பி’ சோதனை மாதிரிகள், அதாவது, அவரிடம் ஏற்கெனவே எடுக்கப்பட்ட மாதிரியிலிருந்து தனியாக வைக்கப்பட்ட ஒரு பகுதியிலும், உடல் எடையக் குறைக்கும் மருந்துகளில் இருக்கும் 'சிபூதிராமின்' எனப்படும் அந்த ஊக்க மருந்தின் தாக்கம் தென்பட்டுள்ளது. 

24 வயதான வெண்டியின் முன்னிலையில் ‘பி’ மாதிரி திறக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த 'சிபூதிராமின்' என்ற ஊக்க மருந்து உலக ஊக்கமருந்து தடுப்பு கழகம் தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விவகாரம் குறித்து மலேசிய அமெச்சூர் நீச்சல் மன்றத் தலைவர் டத்தோஶ்ரீ ஷாஹிடின் காசிமிடம் தெரிவித்தப் பின்னரே இது குறித்து மேல் விவரங்களை தன்னால் பகிர்ந்துக் கொள்ளமுடியும் என்று அம்மன்றத்தின் செயலாளர் மே சென் கூறினார். 

3 மீட்டர் 'ஸ்பிரிங் போர்டு' தனிநபர் டைவிங் நீச்சலில் வெண்டி வென்ற தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டு, இப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த மற்றொரு மலேசிய வீராங்கனையான நூர் டபிதா சப்ரிக்கு இந்தத் தங்கப் பதக்கம் வழங்கப்படவுள்ளது. 

அதேவேளையில் 3 மீட்டர் 'ஸ்பிரிங் போர்டு' இரட்டையர் டைவிங் நீச்சலில் வெண்டி மற்றும் டபிதா ஜோடி வென்ற தங்கப் பதக்கங்கள் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆஷ்லீ டான் – பொங் கெய் இயான் ஜோடிக்கு  வழங்கப்படும். 

ஊக்க மருந்தை உட்கொண்ட குற்றத்திற்காக வெண்டிக்கு 2 ஆண்டு காலம்  நீச்சல் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்படலாம்.

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS