உலக ஜுனியர் சாம்பியனை வீழ்த்திய ஸ்குவாஷ் வீராங்கனை சிவசங்கிரி!

மலேசிய அரங்கம்
Typography

கோலாலம்பூர், செப்.7- இங்கு நடைபெற்றுவரும் நான்ஸ் பொது ஸ்குவாஷ் போட்டியில் உலக ஜூனியர் சாம்பியனாக விளங்கிவரும் எகிப்தைச் சேர்ந்த ரோவான் ரெடாவை வீழ்த்தி மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார் மலேசியாவின் இளம் ஸ்குவாஷ் வீராங்கனையான எஸ்.சிவசங்கரி.

அண்மையில் கோலாம்பூரில் நடந்து முடிந்த சீ விளையாட்டுப் போட்டியின் ஸ்குவாஷ் ஆட்டங்களில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தவரான சிவசங்கரி, முதல் சுற்று ஆட்டத்தில் உலகத் தரத்திலான வீராங்கனையான ரோவான் ரெடாவை வீழ்த்திருப்பது ஒரு புதிய எழுச்சியாக அமைந்துள்ளது.

இந்த ஆட்டத்தில் முதல் இரண்டு செட்டுகளில் 3-11, 9-11 என்ற புள்ளிகளில் தோல்விகண்ட சிவசங்கரி, அதன் பின்னர் உத்வேகத்துடன் விளையாடி அடுத்த மூன்று செட்டுகளையும் 11-9, 11-4, 11-6 என்ற புள்ளிகளில் கைப்பற்றினார்.

"தொடக்க செட்டுகளில் நான் சரிவர விளையாடவில்லை. எனினும், மூன்றாவது செட்டில் வெல்வதன் மூலம் போட்டியில் தொடர்ந்து நீடிக்கப் போராடினேன். பின்னர் அடுத்த இரு செட்டுகளையும் கைப்பற்ற கடுமையாகப் போராடினேன். ரோவான் ரெடா சற்று களைத்துக் காணப்பட்ட தருணத்தைப் பயன்படுத்தித் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வெற்றியை நிலைநிறுத்தினேன் என்று சிவசங்கரி கூறினார்.

உலக ஜூனியர் சாம்பியனை வீழ்த்தி இருப்பது குறித்து பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்து இங்கிலாந்து வீராங்கனையான மில்லி டோம்லின்சனுடன் மோதவிருக்கிறேன். அடுத்த ஆட்டம் அவ்வளவு எளிதானது அல்ல என்றார் அவர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS