மெர்டேக்கா ஓட்டப்போட்டி: MISCF இந்தியர் அணியினர் பல பிரிவுகளில் அபார வெற்றி!

மலேசிய அரங்கம்
Typography

 கோலாலம்பூர், செப்.3- மெர்டேக்கா கோலக் குபுபாரு 21 கிலோமீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் மலேசிய இந்தியர் விளையாட்டு,  கலாசார அறவாரியத்தின் (MISCF) சிலாங்கூர் கிளை வீரர்-வீராங்கனைகள் அபாரமான வெற்றிகளைக் குவித்தனர்.

சனிக்கிழமையன்று நடந்த இந்த ஓட்டப்போட்டியில், நான்கு பிரிவுகளில் சாம்பியனாக வாகை சூடினர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பொதுப் பிரிவுகள், 18 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் ஜூனியர் பிரிவு, 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பிரிவு ஆகியவற்றில் அவர்கள் வாகை சூடினர். 

ஆண்களுக்கான பொதுப் பிரிவில் மலேசிய இந்தியர் விளையாட்டு அறவாரியத்தின் சிலாங்கூர் குழுவில் இடம் பெற்றிருந்த எம்.கோவிந்தா, எஸ்.ஜீவரசன், ஜே.பிரதீப் குமார், மற்றும் சிவனேஸ்வரன் ஆகியோரைக் கொண்ட அணி, 21 கிலோ மீட்டரை ஒரு மணிநேரம் 14 நிமிடங்களில் கடந்து சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

இவர்களை அடுத்து அனாஸ் ரோஸ்லி, அமிருலாமின், எம்.ராகவேந்திரன் மற்றும் கிரண்ரெட்டி ஆகியோரைக் கொண்ட ஆயாம் கோரிங் எம்.சி.டி  குழு இரண்டாவது இடத்தை வென்றது.

பேரா பந்தெர்ஸ் அத்லெட்டிக் கிளப்பைச் சேர்ந்த எஸ்.மகேஸ்வரன், சியு காய் ஹோ, மகாதீர் ஹைதர் அலி, மற்றும் ரவிந்தர் சிங் ஆகியோரைக் கொண்ட அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 

பெண்களுக்கான பொதுப் பிரிவில் MISCF சிலாங்கூரின் எஸ்.சுசீலா, எஸ்.சங்கீதா, ஏ.மனிஷா மற்ரும் பவித்ரா தாஸ் ஆகியோரைக் கொண்ட குழு முதலிடத்தைப் பிடித்தது. 2ஆவது இடத்தை பேஸ்செட்டர்ஸ்-3.0 குழு கைப்பற்றியது. பவர்பஃப் கேர்ல்ஸ் குழு 3ஆவது இடத்தைப் பெற்றது. 

ஆண்களுக்கான ஜுனியர்பிரிவில் MISCF சிலாங்கூர் கிளையின் கங்கேஷ்ராஜ், ஜி.தேவன், கே.சங்கரன், மற்றும் எம்.திருச்செங்குமார் ஆகியோர் சாம்பியன் பட்டத்தை வென்றனர். ஸ்டார் ஒன் எஸ்.எம்.கே. கேகேபி 2ஆவது இடத்தையும் ரன்னர் நெவர் கொயட் குழு 3ஆவது இடத்தையும் பிடித்தன.

சிறார் ஜூனியர் பிரிவில் MISCF சிலாங்கூரின் முதல்நிலைக் குழுவைச் சேர்ந்த எஸ்.தேவஸ்ராஜா, ஆர்.கிஷோர்த்தரன், ஜே.கிஷன் மற்றும் எம்.அவினேஸ்வர் அஸ்டின் ஆகியோர் முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் கோப்பையைத் தட்டிச் சென்றனர்.

ஈப்போ கருடா கிளப்பை பிரதிநிதித்து பங்கேற்ற எம்.மனோகரன் குமாரன், கே.மாத்திஷ், சரண் கோபால் மற்றும் பி.சரண்ராஜ் ஆகியோர் 2ஆவது இடத்தைக் கைப்பற்றினர்.

அதேவேளையில் MISCF சிலாங்கூரை பிரநிதித்து ஓடிய இரண்டாவது குழுவான பி.சுதன், வி.விஜய தர்சன், பி.பிரசீலன் மற்றும் ஆர். மோவின் ஆகியோர் 3ஆவது இடத்தைப் பெற்றனர்.

மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாசார அறவாரியத்தைச் சேர்ந்த குழுக்கள் பெரும் வெற்றியைப் பெற்றதற்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக 'சுக்கிம்' எனப்படும் மலேசிய இந்தியர்களின் விளையாட்டுப் போட்டிகளின் வழி நமது வீரர்களுக்கு கிடைத்த அனுபவம், மிகச் சாதகமாக அமைந்தது என்று குழு நிர்வாகி டி.இந்திரன் கூறினார்.

மேலும் இப்போட்டிக்காக கடந்த இரண்டு மாதங்களாகவே MISCF அணி, பயிற்சியாளர் எம்.அருள்தேவனின் கீழ் தொடர்ந்து பயிற்சி பெற்று வந்திருப்பதாகவும் அவர் சொன்னார். 

இதேபோன்று நாடு தழுவிய அளவில் நடக்கும் இதர போட்டிகளிலும் நமது வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பதற்கு வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என்று MISCF சிலாங்கூர் கிளையின் தலைவருமான டி.இந்திரன் தெரிவித்தார்.

சனிக்கிழமை நடந்த இந்த 21 கிலோமீட்டர் தூர தொடர் ஓட்டப்போட்டிகளில் நால்வர் கொண்ட அணி பங்கேற்றது. ஒவ்வொரு வீரரும் 5.25 கிலோமீட்டர் தூரம் ஓடும் வகையில் இந்தத் தொடர் ஓட்டம் அமைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 6 பிரிவுகளில் 88 குழுக்கள் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS