Top Stories

 கோலாலம்பூர், மார்ச்.23- மலேசிய கால்பந்து சங்கத்தின் (எப்.ஏ.எம்.) தலைவர் பதவிக்கான போட்டியிலிருந்து டான்ஶ்ரீ அனுவார் மூசா விலகிக் கொண்டதைத் தொடர்ந்து ஜொகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

கால்பந்து சங்கத்தின் 53ஆவது காங்கிரஸ் கூட்டம்

சனிக்கிழமையன்று நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தல் கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் பதவிக்கு ஜொகூர் இளவரசரும் ஜேடிடி கால்பந்து கிளப்பின் உரிமையாளருமான துங்கு இஸ்மாயிலும் அம்னோ தகவல் பிரிவுத் தலைவரான அனுவார் மூசாவும் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

சங்கத் தேர்தலுக்கு இன்னும் 48 மணிநேரம் இருக்கும் நிலையில், அனுவார் மூசா போட்டியிலிருந்து வாபஸ் பெற்றுக் கொள்வதாக இன்று அறிவித்தார். தற்போது போட்டிக் களத்தில் ஒரேயொரு வேட்பாளராக ஜொகூர் இளவரசர் மட்டுமே இருப்பதால் அவர்  சங்கத்த லைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

தமது விலகலை அறிவித்த அனுவார், வாக்குச் சீட்டுகளில் பெயர்கள் கூட அச்சடிக்கப்பட்டு விட்டன. எனவே, அடுத்த கட்டமாக எத்தகைய நடைமுறை உண்டோ அதன்படி கால்பந்து சங்க அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்று குறிப்பிட்டார்.

சனிக்கிழமையன்று நடைபெறவிருக்கும் கூட்டத்தின் போது சங்கத்தின் துணைத் தலைவர், உதவித் தலைவர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கான தேர்தல்கள் நடைபெறும்.

 

 கிள்ளான், மார்ச்.22– இந்திய ஆத்மசக்தி இயக்கத்தின் ஏற்பாட்டில் 7ஆவது ஆண்டாக நடைபெறும் மாணவர் விழாவின் போது இடம்பெற்ற கபடிப் போட்டியை மஇகாவின் உதவித்தலைவரும், மிஃபாவின் தலைவருமான டத்தோ டி.மோகன் துவக்கி வைத்தார். 

இந்திய மாணவர்களுக்கு ஏற்ற வகையிலும், அவர்களுக்கு  நமது பண்பாட்டையும் விதைக்கும் வண்ணம் இந்திய ஆத்ம சக்தி இயக்கம் செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது என்று டத்தோ மோகன் தெரிவித்தார். 

ஆண்டுதோறும் மாணவர் விழாவினை நடத்தி அவர்களுக்கு தலைமைத்துவப் பண்பினை வளர்ப்பது நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க வழிவகுக்கும் என்றார் அவர்.

இந்திய ஆத்மசக்தி இயக்கத்தின் தலைவர் ம.வசந்தகுமார் பேசுகையில், மாணவர் விழாவினை மாணவர்களே ஏற்று நடத்துகின்றனர். மாணவர் விழாவில் இடம்பெற்ற இந்த கபடிப் போட்டி குறித்து அவர்களே அது பற்றிக் கண்டறிந்து போட்டியையும் அவர்களே வழிநடத்துகின்றனர் அவர் சுட்டிக்காட்டினார்.

மாணவர்களுக்கு தலைமைத்துவ பண்பை வளர்க்கவும், அவர்களை வருங்காலமாக தலைவர்களாக உருவாக்கவும் எங்கள் இயக்கம் முனைப்பு காட்டி வருகிறது. இந்த மாணவர் விழாவில் மாணவத் தலைவர்கள் உருவாக்கப் படுகிறார்கள். 

நமது கலை, கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வை இவர்களுக்கு புகுத்துவதன்வழி இவர்கள் எதிர்காலத்தில் சிறந்த சமுதாயத் தலைவர்களாகவும் உருவாக்கம் காண்பார்கள் என்று அவர் சொன்னார். மாணவர் விழாவை முன்னிட்டு நடந்த கபடிப் போட்டிகளில் கிட்டத்தட்ட 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

கோலாலம்பூர், மார்ச்.18-- அனைத்துலகப் போட்டிகளில் தொடர்ந்து வெல்லவேண்டும். அடுத்துவரும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறவேண்டும். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது எனது கனவு என்கிறார் இளம் பேட்மிண்டன் வீராங்கனையான தீனா முரளிதரன்.

பேட்மிண்டன் போட்டிகளில் மலேசியாவுக்கென தனி வரலாறு உண்டு. அந்த வரலாற்றுக்குள் ஒரு வரலாறைப் பதிவு செய்திருக்கிறார் தீனா.

அண்மையில் ஈப்போவில் நடந்து முடிந்த தேசிய பேட்மிண்டன் சாம்பியன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தேசிய சாம்பியனாக வாகை சூடியுள்ளார் 19 வயதுடைய தீனா

தீனாவின் இந்த வெற்றி, மலேசிய இந்தியர்களைப் பொறுத்தவரை ஒரு வரலாற்றுப்பூர்வமான சாதனையாகும். பேட்மிண்டனின் மகளிர் பிரிவில் தேசிய சாம்பியனாக வாகை சூடியிருக்கும் முதல் மலேசிய இந்திய வீராங்கனை என்ற சாதனையை தீனா படைத்திருக்கிறார்.

தீனாவின் மூத்த சகோதரர் கஜென் சிலாங்கூர் மாநிலத்தைப் பிரதிநிதித்து விளையாடியுள்ளார் அதேவேளையில், தீனாவின் இளைய சகோதரி செலினா முரளிதரன் தற்போது சிலாங்கூரை பிரதிநிதித்து விளையாடி வருகிறார்.

தேசிய சாம்பியன் போட்டியில் வென்றிருந்தாலும் தாம் அனைத்துலக போட்டிகளில் முத்திரை பதிக்கவேண்டும் என்ற வேட்கையுடன் தொடர்ந்தது கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக 'வணக்கம் மலேசியா' இணையச் செய்திக்கு அளித்த காணொளிப் பேட்டியில் தெரிவித்தார்

"6 வயதில் இருந்தே பேட்மிண்டன் விளையாடி வருகிறேன். எனது வெற்றிக்காக நீண்ட காலம் பயிற்சி செய்து வந்துள்ளேன். எனக்கு மிகவும் பக்கபலமாக இருப்பவர்கள் என் பெற்றோர்கள்" என்கிறார் அவர்.

 கிள்ளானைச் சேர்ந்த முரளிதரன் -டாக்டர் பரிமளா தம்பதியரின் இரண்டாவது பிள்ளையான தீனா, தனது முக்கிய இலக்கு ஒலிம்பிக் போட்டி வரை சென்று பதக்கம் வெல்வதுதான் என்கிறார்.  

பாரிஸ், மார்ச்.13- அதெல்லாம் செல்லாது.., செல்லாது.. மீண்டும் முதல்லே இருந்து ஆட்டத்தை தொடங்கணும். பார்சிலோனா மறு ஆட்டத்தில் பிஎஸ்ஜி குழுவுடன் விளையாட ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கோரி 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

கடந்த வாரம் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து ஆட்டத்தில் பிஎஸ்ஜியை வென்று பார்சிலோனா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

ஐரோப்பாவின் முன்னணி கால்பந்து குழுக்களான பார்சிலோனாவுக்கும் பிஎஸ்ஜி குழுவுக்கும் இடையே நடந்த முதல் கட்ட ஆட்டத்தில் பிஎஸ்ஜி 4-0 என்ற கோல்கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ஐரோப்பாவின் தலைசிறந்த குழுவான பார்சிலோனா 4 கோல் வித்தியாசத்தில் தோல்வி காண்பது மிக மிக அபூர்வமாகும் என்பதால் இந்த அதிர்ச்சி ஏற்பட்டது. 

எனினும், மறுவாரம் சொந்த அரங்கத்தில் நடந்த 2ஆம் கட்ட ஆட்டத்தில் பார்சிலோனா பதிலடி கொடுத்தது. இந்த ஆட்டத்தில் 6-1 என்ற கோல்கணக்கில் பிஎஸ்ஜி குழுவை வீழ்த்தி 6-5 என்ற கோல் விகிதத்தில் காலிறுதிக்கு தகுதிபெற்றது. 

இந்நிலையில், பிஎஸ்ஜி ரசிகர்கள் கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தினர். மீண்டும் பார்சிலோனாவுக்கும் பிஎஸ்ஜி குழுவுக்கும் இடையே மறு ஆட்டம் நடத்தப்படவேண்டும் என்று 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் மகஜரில் கோரியுள்ளனர்.

நடுவர் டெனிஷ் அய்டெக்கின் இரண்டு முக்கியமான பெனால்டிகளை பார்சிலோனாவுக்கு வழங்கியதால் தான் பிஎஸ்ஜி வீழ்ந்தது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். எனவே,  அந்த செல்லாது, மறு ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.

அது மட்டுமல்ல, இந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வியானது பிஎஸ்ஜியின் மனநிலைக்கு மிகப்பெரிய பாதிப்பு என்றும் கூறுகிறார்கள்.

 

தோக்யோ, மார்ச் 13- ஜப்பானின் கால்பந்து வீரரான காஸூயோஷி மியுரா நேற்று நடந்த போட்டியில் யோகோஹாமா குழுவிற்காக அடித்த கோல் அந்த குழுவின் வெற்றிக்கு உறுதுனையாக நின்றது. ஜப்பான் லீக்கில் விளையாடும் கால்பந்து வீரர்களில் இவரே வயதில் மிக முதிர்ந்தவர். அவருக்கு இந்த வருடம் 50 வயதாகிறது. "கோல் அடிப்பதற்கு நான் எப்போதும் வாய்ப்புகள் தேடிகொண்டே இருப்பேன். இந்த போட்டியில் நிச்சயம் நான் கோல் அடிப்பேன் என்று நினைத்துகொண்டு விளையாடியது எனக்கு உற்ச்சாகம் அளித்தது" என்று அவர் கூறினார். 

கடந்த பிப்ரவரியில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடிய இவர் 1990களில் ஆசியாவின் சிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்தார். 1993இல் ஜப்பான் லீக் துவங்கபட்டு ஜப்பானிய கால்பந்து துறை உயர இவரின் பங்கு முக்கியமானது. ஜப்பானுக்காக உலகளாவிய நிலை ஆட்டங்களில் விளையாடிய இவர் இதுவரை 89 கோல்கள் அடித்துள்ளார். 1994ஆம் ஆண்டில் இவர் இத்தாலியின் ஜெனோவா அணியில் இணைந்தார்.  

தனது 60ஆவது வயது வரை கால்பந்து விளையாட வேண்டும் என்பது இவரது கனவு. "இதற்குமுன் இங்கிலாந்தின் ஸ்தான்லீ மாத்தியூஸ் 1965ஆம் ஆண்டு ஸ்தோக் சிட்டிக்காக விளையாடியபோது அவருக்கு வயது 50. நான் அந்த சாதனையை முறியடிக்க முயற்சிப்பேன்", என்று மியூரா கூறினார். 

இங்கிலாந்து, மார்ச் 11-  ஆல் இங்கிலாந்து பூப்பந்து போட்டியில்,  சீனாவின் லின் டானுடன் களமிறங்கிய மலேசிய ஆட்டக்காரர் சுல்ஃபாட்லி 9-18 என்ற  புள்ளிகளில்  தோல்வியடைந்தாலும், ஆட்டத்தின் போது,  ஐந்து முறை உலகச் சாம்பியனான லின் டானை தமது நூதன ஆட்டத்தால்,திணறடிக்கச் செய்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.  

சுல்ஃபாட்லியின் ஆட்டத்தைச் சமாளிக்க முடியாத,  லின் டான் ஒரு கட்டத்தில் தமது ரேக்கட்டையே வீசி எறிய, அது போய் அரங்கத்தில் ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்த கேமராமேனைப் போய் தாக்குவது அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது. 

இது, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் இக்காணொளியைப் பார்க்கும் நெட்டிசன்கள், இதுவும் லின் டானின் புதிய விளையாட்டு நுட்பமாக இருக்குமோ என்ற கோணத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

Advertisement