வாயுவெளி கொண்ட இன்னொரு பூமி! உயிரினங்கள் இருக்குமா?

Science
Typography

 லண்டன், ஏப்ரல்.7- பூமியைப் போலவே புறச்சூழலில் வாயுகள் சூழ்ந்திருக்கக்கூடிய இன்னொரு பூமியை விஞ்ஞானிகள் முதன் முறையாகக் கண்டுபிடித்து இருக்கின்றனர். உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியங்களை இந்தப்புறச் சூழல்கள் காட்டுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

பூமியைக் காட்டிலும் 1.4 மடங்கு பெரிதாகக் காணப்படும் இந்தக் கிரகம், சுமார் 39 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கிறது. இதற்கு 'GJ 1132b' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தக் கிரகத்தை 'சூப்பர் எர்த்' என்று விஞ்ஞானிகள் வர்ணித்தனர். இதைச் சுற்றி பல அடுக்குகளாக வாயுகள் உள்ளன. இவை தண்ணீராகவோ அல்லது மீத்தெய்ன் அல்லது இரண்டும் கலந்த கலவையாகக் கூட இருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.

நம்முடைய சூரியக் குடும்பத்திற்கு அப்பாலுள்ள கிரகங்களில் உயிரினங்களைக் கண்டுபிடிக்க நாம் மேற்கொண்டிருக்கும் முயற்சிக்கு இத்தகைய புற வாயுப் படலங்கள் மிக முக்கியமானதாகும் என்று விஞ்ஞானி டாக்டர் ஜோன் சவுத்வொர்த் தெரிவித்தார்.

எனினும், இங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான வழியுண்டு என்று நாம் இப்போதைக்கு ஒரு முடிவுக்கு வந்து விடமுடியாது. ஏனெனில் இந்தக் கிரகம் பூமியைவிட பல மடங்கு வெப்பமானதாக தென்படுகிறது என்று அவர் சொன்னார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS