'யூரோப்பா' நிலாவில் பாயுதப்பா தண்ணீர்! விஞ்ஞானிகள் குதூகலம்!

இயற்கை
Typography

லண்டன், செப்.27- ஜுபிடர் எனப்படும் மாபெரும் வியாழன் கிரகாத்தைச் சார்ந்து இருக்கும் நிலாக்களில் ஒன்றான யூரோப்பாவின் மேற்பரப்பில் அவ்வபோது தண்ணீர் வானை நோக்கி பீய்ச்சி அடிக்கப்படுவதை விண்வெளி தொலைநோக்காடி மூலம் கண்டறியப் பட்டிருக்கிறது என்ற உற்சாகமான தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். 

கடந்த 2013ஆம் ஆண்டிலேயே யூரோப்பா நிலாவில் இப்படியொரு சம்பவம் நிகழ்வதை 'ஹுப்பள்' விண்வெளி தொலை நோக்காடி வழி கண்டறியப்பட்டது என்றாலும் அது குறித்து தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சியை நடத்திவந்தனர். 

அண்மையில் மீண்டும் அத்தகைய நிகழ்வு இடம்பெற்றிருப்பதை 'ஹூப்பள்' வழி கண்டுபிடித்த விஞ்ஞானிகள், இந்த நிலாவின் மேற்பரப்பில் மிகப் பெரிய திரவ நீர்க்கடல் இருப்பதால், வானை நோக்கி பீறிடும் தண்ணீர் விவகாரம் விஞ்ஞானிகள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

குறிப்பாக, இத்தகைய புறச்சூழலில் இங்கு நுண்ணுயிர்கள் வாழக்கூடிய சாத்தியம் இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர். அந்த வகையில், பூமிக்கு அப்பால் உயிரினங்களைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகளின் முயற்சிக்கு இதுவொரு முக்கிய தடயமாகக் கருதப்படுகிறது.

மேலும், இது பற்றிய தொடர் ஆராய்ச்சிகளுக்கு உதவும் நோக்கில் யூரோப்பா நிலாவில் பீய்ச்சி அடிக்கப்படும் தண்ணீரின் தன்மையைக் கண்டறிய, அதனூடாக விண் ஆய்வுக்கலம் ஒன்றை அனுப்பி ஆராய வாய்ப்புள்ளது.

அதேவேளையில், பீய்ச்சியடிக்கப்படும் தண்ணீரின் மாதிரியை பூமிக்குக் கொண்டு வந்து, அதில் இருக்கும் உயிரியல் கூறுகளை ஆராய்ச்சி செய்தவதற்கு ஏதுவான மாற்றுக் கலம் ஒன்றைப் பயன்படுத்துவதும் சாத்தியம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இதற்கும் அப்பால் இன்னொரு மாற்று வழியாக, யூரோப்பா நிலாவின் மீது விண் ஆய்வுக் கலத்தை தரையிறங்கச் செய்து, அதன் மேற்பரப்பில் பல கிலோ மீட்டர்கள் உயரத்திற்கு படர்ந்து கிடக்கும் பனிப் படுகைகளைத் துளையிட்டு, அதன் பரிசோதனை மாதிரிகளைப் பெறுவது பற்றியும் விஞ்ஞானிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS