செவ்வாய்க் கிரகத்தில் குடியேறினால் நோய் எதிர்ப்புச் சக்தி பறிபோகும்! -விஞ்ஞானி

Science
Typography

 மாஸ்கோ, செப்.3- செவ்வாய்க் கிரகத்தில் குடியேறினால் மனிதர்களுக்கே உரிய நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும் என்று விஞ்ஞானி ஒருவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

பூமிக்கு அடுத்து, பூமியை போலவே தட்ப வெப்பநிலை நிலவும் செவ்வாய்க் கிரகத்தில் மனிதனால் வாழ முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். எனவே, மனிதனைச் செவ்வாய்க் கிரகத்தில் குடியேற்ற தீவிர ஆய்வுகள் நடந்து வருகின்றன.

ஆனால் செவ்வாய்க் கிரகத்தில் குடியேறினால், மனிதனின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, அவன் பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகக் கூடும். அங்கு உயிர் வாழ்வது கடினம் என்று ரஷ்ய விஞ்ஞானி கூறுகிறார்.

மாஸ்கோவில் உள்ள இயற்பியல் தொழில் நுட்பக் கல்வி மையத்தின் பேராசிரியர் எவ்ஜினி நிக்காலோங் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஏற்றார் போல் மனிதனின் உடல் அமைப்புகள் செயல்படுகின்றன. இந்த ஈர்ப்பு விசைக்கு தகுந்த மாதிரி நோய் எதிர்ப்புச் சக்திகளும் உடலில் உருவாகின்றன.

ஆனால், செவ்வாய்க் கிரகத்தில் ஈர்ப்புச் சக்தி வேறு மாதிரி இருக்கும். எனவே. மனிதனின் நோய் எதிர்ப்புச் சக்தி மறைந்துவிடும். இதன் மூலம் பல்வேறு நோய்களைச் சந்திக்க நேரும் அங்கு வாழ்வது கடினம் என்று அவர் எச்சரிக்கிறார்.

விண்வெளியில் ஈர்ப்புச் சக்தி இல்லை. விண்வெளி ஓடத்தில் 6 மாதம் வரை தங்கி இருந்த 18 ரஷ்ய விண்வெளி வீரர்களை ஆய்வு செய்த போது 

அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருந்தது. சாதாரண சூழ்நிலையில் கூட நோய்க் கிருமிகளின் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள் என்று பேராசிரியர் எவ்ஜினி நிகாலோங் கூறுகிறார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS