வியாழன் கிரக அசுரப் புயலைப் படம் பிடித்தது நாசா விண்கலம்.

Science
Typography

நியூயார்க், ஜூலை.12- ஜூபிட்டர் எனப்படும் வியாழன் கிரகத்தில் ஆண்டாண்டு காலமாக வீசிவரும் அசுரப் புயலை, 'எட்டிப் பார்த்து எப்படி இருக்கிறது அந்தப் புயல்..?' என்பதை நாசா அனுப்பிய 'ஜூனோ' எனப்படும் விண்கலம் கண்டறிந்து சாதனை படைத்துள்ளது.

"இன்னும் சில தினங்கள் பொறுத்திருங்கள். அந்த அதிசயப் புயலின் உண்மையான நேரடித் தோற்றம் எப்படி இருக்கும்? என்பது பற்றிய முதல் கட்டப் படங்களை ஜூனோ விண்கலம் பூமிக்கு அனுப்பவிருக்கிறது" என்று நாசா விஞ்ஞானிகள் கூறினர்.

சூர்யக் குடும்பத்திலேயே மிகப்பெரிய கிரகமாக விளங்கும் வியாழன் கிரகத்தை, மிக நெருங்கிச் சென்று அதனை கண்ணோட்டமிடும் பணியை 'ஜூனோ' இப்போது மேற்கொண்டுள்ளது.

முற்றிலும் வாயுவினால் உருவான வியாழன் கிரகத்தின் மேற்பரப்பில் குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்து புயல் இடைவிடாமல் வீசிவருகிறது.

இந்தப் புயல் கிட்டத்தட்ட 16 ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவில் வீசுகிறது. கடந்த 350 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் புயல் ஓயாமல் வீசி வருவதாக மதிப்பிடப்படுகிறது. எனினும், அண்மைய காலத்தில் இது சற்று சுருங்கி வருகிறது.

இந்தப் புயலின் தாக்கத்தை மிக நெருங்கிச் சென்று ஜூனோ விண்கலம் வெற்றிகரமாக ஆராய்ந்து வருகிறது. சில தினங்களுக்குள் ஆய்வின் விபரங்கள் பூமியை வந்தடைந்து விடும் என்று நாசாவின் 'ஜூனோ' திட்ட விஞ்ஞானி ஸ்கோட் போல்ட்டன் தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS