Top Stories

தோக்கியோ, மார்ச் 15- இன்னும் 100 ஆண்டுகளில் நாம் செவ்வாய்கிரகத்தில் வாழமுடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். நம் பேரப்பிள்ளைக்களுக்கான இடத்தை இப்போதே பதிவு செய்யவேண்டிய நிலை வந்துவிடும் போல..

ஜப்பானின் விண்வெளி வீராங்கனை நவோகா யமாஷாகி தான் இதைக் கூறியுள்ளார். தற்போதைய அறிவியல் வளர்ச்சியின் அசுர வேகத்தினைப் பார்க்கும்போது செவ்வாயில் குடியேறுவது விரைவில் சாத்தியமாகும் என அவர் கூறினார்.

ஓர் ஆங்கில செய்திக்கு அவர் அளித்த பேட்டியில், "தற்போது விண்வெளியில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலை நிலவுகிறது. 

சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் ஒருவரால் வாழ முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. சிறுநீரை சுத்திகரித்து நீராகவும் கரிமிலவாயுவை சுத்திகரித்து பிராணவாயுவாகவும் மாற்றும் தொழிநுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

இவற்றுக்கான செலவுகள் அதிகம் என்றாலும் அதனைக் குறைப்பதற்கான வழிகளும் ஆராயப்பட்டு வருகின்றன" என அவர் கூறினார்.

இதன்வழி, சும்மா ஊர் சுற்றிப் பார்க்க செல்வது போல செவ்வாயிக்கு செல்லும் காலம் நெருங்கி வருவதாக அவர் கூறினார்.

பார்சிலோனா, பிப்.28- இவ்வருடத்தின் அரையாண்டுக்குள் கைப்பேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உலகளவில் 500 கோடியை எட்டும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 310 மில்லியன் பயனர்கள் அதிகரிப்பு இதற்கு பெரும் பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.

கடந்த வருடம் உலகின் மொத்த கைப்பேசி பயனர்கள் மொத்தம் 480 கோடி பேர் அதாவது 4.8 பில்லியன். இது இவ்வருட இறுதிக்குள் 5.7 பில்லியனாக மாறும் என இது தொடர்பாக ஆய்வு நடத்திய ஜிஎஸ்மா எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலை நீடித்தால் இன்னும் மூன்று ஆண்டுகளில் அதாவது 2020-ல் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி எனும் அளவில் கைப்பேசி பயனர்கள் அதிகரிப்பர்.

இந்த எண்ணிக்கை அதிகரிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது ஆசிய கண்டம். ஆசியாவின் மக்கள் தொகை குறிப்பாக இந்தியாவின் மக்கள் தொகை கைப்பேசி விற்பனைக்கு பெரும் ஆதரவாக அமையும் என கைப்பேசி பொருளாதார ஆய்வு கூறுகிறது. 

இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 310 மில்லியன் (31 கோடி) புதிய சந்தாதாரர்கள் உருவாகுவர் என்கிறது அந்த ஆய்வு. அகன்ற அலைவரிசை மற்றும் விவேக கைப்பேசியின் அதிவேக வளர்ச்சி, பயனர்களை ஈர்க்க காரணமாக அமைகிறது. 

இதுவரை உலகளவில் 188 நாடுகளில் 4ஜி எனும் 540 கட்டமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது உலக மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினை உள்ளடக்கியதாகும்.

பார்சிலோனா, பிப்.27- கைப்பேசி பிரியர்களின் விருப்பத் தேர்வாக இருந்த நோக்கியா 3310 ரக கைப்பேசி தற்போது மீண்டும் சந்தைக்கு வந்துள்ளது. சுமார் 12 வருடங்கள் கழித்து நோக்கியா கைப்பேசி மீண்டும் தொடர்பு உலகை ஆக்கிரமிக்க தொடங்கிய முதல் பயணமாக இது கருதப்படுகிறது.

2000-ஆம் ஆண்டுகளில் மிகவும் பிரசித்த கைப்பேசி நோக்கியா 3310 ஆகும். மலேசியாவில் பலர் இதனைக் குறிப்பிடும்போது 'எவ்வளவு அடிபட்டாலும் எத்தனை முறை கீழே விழுந்தாலும் உடையாத கைப்பேசி' என்று தான் குறிப்பிடுவர். உரத்த சத்தத்துடன் உறுதியான அமைப்புடன் வலம் வந்த இந்த நோக்கியா மீண்டும் வெளிவர துவங்கியுள்ளது ஆண்ட்ரோய்டு செயலியுடன்.

1998ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை கைப்பேசி உலகை ஆண்ட நோக்கியா நிறுவனம், அதன் வைரியான சம்சுங் நிறுவனத்தால் வலுவிழந்து போனது. பின்னர், மைக்ரோசோஃப்ட் நிறுவனத்திடம் விற்கப்பட்ட அதனை, தற்போது எச்எம்டி குளோபல் நிறுவனம் வாங்கி, நோக்கியா எனும் முத்திரையைப் பயன்படுத்தும் உரிமையையும் பெற்று கொண்டது.

நேற்று அதிகாரப்பூர்வமாக இதன் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதனுடன், நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 ஆகிய கைப்பேசி ரகங்களும் நேற்று வெளியீடு கண்டன. இதன் வழி வரும் 2019ஆம் ஆண்டுக்குள் உலக கைப்பேசி சந்தையில் 5 விழுக்காட்டினை நோக்கியா கைப்பற்றும் என அதன்  மூத்த செயல் அதிகாரி அர்தோ நும்மேலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்னொரு கொசுறு தகவல், நோக்கியா 3310வின் சிறப்பான 'ஸ்னேக் கேம்' எனும் பாம்பு விளையாட்டும் இந்த கைப்பேசியில் இடம்பெற்றுள்ளது.

 நியூயார்க், பிப்.18- சுயமாக ஓட்டக்கூடிய ஆயிரக்கணக்கான தானிங்கி மின்சாரக் கார்களை ஒரே சமயத்தில் பரிட்சார்த்தமாக சாலைகளில் ஓடச் செய்வதற்கு பிரபல அமெரிக்கக் கார் நிறுவனமான ஜெனரல் மோட்டோர் (ஜிஎம்) நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

2018-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தானியங்கி கார்களைப் இந்த பரிசோதிக்க ஆயிரக்கணக்கில் சாலைகளை ஆக்கிரமிக்கும். ஜிஎம் நிறுவனத்தின் துணை நிறுவனமான 'லைப்ட்' நிறுவனம், பயணிகள் போக்குவரத்துச் சேவை நடத்தும் ஒரு நிறுவனமாகும். அமெரிக்காவில் உபருக்கு அடுத்து மிகப்பெரிய அளவில் வாடகைக் கார் சேவை நடத்தி வருகிறது.

எனவே, தனது சொந்தத் தயாரிப்பான தானியங்கி மின்சாரக் கார்களை சாலைகளில் பரிசோதித்துப் பார்ப்பதற்கு லைப்ட் நிறுவனத்திற்கு ஆயிரக்கணக்கில் சுயமாக ஓடக்கூடிய மின்சாரக் கார்களை சப்ளை செய்ய ஜிஎம் நிறுவனம் திட்டம் போட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

அதிக அளவில் இத்தகைய கார்களைத் தயாரித்து, தனது கார் வர்த்தக ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் அது இறங்கியுள்ளது என்று கூறப்பட்டது. 

 

 

 

 

 

புதுடில்லி, பிப்.14- விண்வெளி ஆதிக்கத்தில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நிலவிய போட்டாப் போட்டிகள் என்பது ஒரு கடந்த காலமாகிவிட்டது. ஆனால், இந்தியா இப்போது புதிய அதிரடியில் இறங்கியுள்ளது. ஒரே ராக்கெட் மூலம் 104 துணைக்கோளங்களை விண்வெளிக்கு நாளை அனுப்பி அசத்தப் போகிறது இந்தியா.

இதுவொரு சாதனை முயற்சி. இது வெற்றி பெறுமானால் இந்தியா விண்வெளித் துறையில் வெற்றி முத்திரையை மிக அழுத்தமாக பதித்துவிட்டது என்று அர்த்தமாகும்.

செவ்வாய்க் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் அபார வெற்றி கண்ட இந்தியாவுக்கு, ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைத் துணைக் கோளங்களை அனுப்பும் முயற்சி இன்னொரு மைல்கல்லாக அமையும்.

                     ## ராஜேஸ்வரி ராஜாகோபாலன்

கடந்த 2014ஆம் ஆண்டில் ரஷ்யா ஒரே ராக்கெட் மூலம் 37 துணைக்கோளங்களை அனுப்பி சாதனையைப் பதிவு செய்தது. அதைக் காட்டிலும் மூன்று மடங்கு கூடுதலான துணைக்கோளங்களை நாளை விண்வெளிக்கு அனுப்ப இந்தியா தயாராகி விட்டது.

இது மிகப்பெரிய விஷயம். இந்திய விண்வெளித்திட்டம் எவ்வளவு நவீனமானது என்பதை இது புலப்படுத்துவதாக அமையவிருக்கிறது என அணுசக்தி மற்றும் விண்வெளி ஆய்வு மைய தலைவரான ராஜேஸ்வரி ராஜாகோபாலன் தெரிவித்துள்ளார்.

2017-ஆம் ஆண்டுக்கான விண்வெளித் திட்டங்களில் தற்போது ஆசிய நாடுகளான இந்தியா, ஜப்பான், சீனா ஆகியவை போட்டாப் போட்டியில் உள்ளன.

கடந்த 20ஆம் நூற்றாண்டில், கெடுபிடி போர்க்காலத்தில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நிலவிய விண்வெளிப் போட்டியைப் பிரதிபலிப்பதாக இந்த ஆசிய நாடுகளுக்கு இடையிலான விண்வெளிப் போட்டிகள் அமைந்துள்ளன என்று நிபுணர்கள் கருத்துரைத்திருக்கின்றனர். ஆசியாவில், தென்கொரியாவும் இத்தகைய போட்டிக்குள் மூக்கை நுழைக்க ஆர்வம் கொண்டுள்ளது.

1962ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தினால் உருவாக்கப்பட்டு செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட 'மங்கள்யான்' விண்கலம் தான், உலகமே இந்தியாவை திரும்பிப் பார்க்கும்படி செய்தது. மிகக் குறைந்த செலவில் இந்தச் சாதனையை இந்தியா நிகழ்த்திக் காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சியோல், ஜன.23- 'கேலக்ஸி நோட் 7' (Galaxy Note 7) கைத்தொலைபேசி அதிகமாக சூடேறி, எரிந்துப் போனதற்கான காரணத்தைக் கண்டறியும் சாரணையின் முடிவில் அது பேட்டரிகளினால் ஏற்பட்ட விபரீதமே தவிர வேறு கோளாறுகள் எதுவும் இல்லை என்று சம்சோங் நிறுவனம் அறிவித்தி ருக்கிறது.

இந்தக் கோளாறுக்கு மென்பொருளோ அல்லது வன்பொருளோ காரணமல்ல, முற்றிலும் பேட்டரிதான் காரணம் என்று சம்சோங் கூறியது. கடந்த அக்டோபர் மாதத்திலேயே கேலக்ஸி நோட் 7 கைதொலைப்பேசியை சம்சோங் மீட்டுக்கொண்டது. இதனால், சம்சோங் கிட்டத்தட்ட 530 கோடி டாலர் இழப்பை எதிர்நோக்கியது.

பேட்டரிகள் தீப்பிடிப்பது தொடர்பில் சுதந்திரமான ஒரு உள்விசாரணைக் குழுவை சம்சோங் அமைத்து முழுமையான ஆய்வை மேற்கொண்டது. அந்த பேட்டரியின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு ஆகிய இரு நிலைகளிலும் கோளாறுகள் இருப்பதாக அது தெரிவித்தது.

கைத்தொலைபேசிக்குள் அடங்காத வகையில் சற்று பருமனாக பேட்டரி வடிவமைக்கப்பட்டது மற்றும் மின் பாயாமல் காக்கும் பொருள் போதுமான அளவில் பேட்டரிக்குள் இல்லாமல் போனது ஆகியவைதான் அது சூடேறி தீப்பிடிக்க காரணமாக அமைந்து விட்டது என்று விசாரணைக் குழு விளக்கியது.

 பேட்டரி தீப்பிடிக்கும் பிரச்சனை தொடர்பில் கிட்டத்தட்ட 25 லட்சம் கேலக்ஸி நோட் 7 கைத்தொலை பேசிகளை அந்நிறுவனம் சந்தையில் இருந்து மீட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு மாற்றாக வெளிடப்பட்ட பேட்டரியில் அத்தகைய பிரச்சனை எதுவும் இல்லை என்றும் இந்தத் தவறுக்கான எல்லா பொறுப்புக்களையும் சம்சோங் நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது என்றும் அறிவிக்கப்பட்டது. 

 

 

 

ஹவாய், ஏப்ரல்.2- விண்கல் ஒன்று பூமியை வந்து கொண்டிருக்கிறது. இதனால் பூமிக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பும் உண்டு என்று அமெரிக்கா விண்வெளி ஆய்வுக் கழகமான நாசா எச்சரித்து இருக்கிறது.

அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள ஹலீயகாலா எரிமலை பகுதியில் யான்-ஸ்பார்ஸ்-1 என்று சக்தி வாய்ந்த டெலிஸ்கோப் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த டெலிஸ்கோப் கடந்த மாதம் 25 ஆம் தேதியன்று பதிவு செய்த ஓர் ஆபூர்வப் புகைப்படம் நாசா விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அதில் பூமியை நோக்கி ஒரு விண்கல் பூமியை நோக்கி வருவதாக அந்தப்படத்தின் வழி கண்ட விஞ்ஞானிகள், அது குறித்து ஆய்வு நடத்தி உறுதிப்படுத்தினர். 

அது தற்போது பூமிக்கு அருகே 20 லட்சத்து 2 ஆயிரம் மைல் தொலைவை எட்டியிருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அது மட்டுமின்றி அந்த விண்கல்லினால் பூமிக்கோ அல்லது சந்திரனுக்கோ எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என உறுதிப்பட தெரிவிக்க முடியவில்லை. பூமியை தாக்கும் அபாயமும் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும் அந்த விண்கல் பூமியை நெருங்கும் போது டெலிஸ்கோப் இன்றியும் பார்க்கமுடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டன், பிப்.23- சுமார் 40 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால், ஒரு சிறிய நட்சத்திரத்தைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும் 7 கிரகங்களில் குறைந்தபட்சம் மூன்று கிரகங்களில் உயிரினங்களுக்கான வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவின் நாசா விண் ஆய்வுக்கழகம் பரபரப்பான தகவலை அறிவித்திருக்கிறது.

இந்தக் கிரகங்கள் அளவில் பூமியை ஒத்ததாக உள்ளன. மேலும், இவை உயிரினப் பரிணாமங்களுக்கு உகந்த பாறைப் படிவ திடநிலை கிரகங்களாக அமைந்திருக்கின்றன என்று நாசா விஞ்ஞானிகள்  தெரிவித்தனர்.

மனிதர்கள் வாழ்வதற்கு உகந்ததாக இந்தக் கிரகரங்கள் இருக்கக்கூடும் என்ற அபிப்ராயம் பரவியதால் இது சமூக வலைதளங்களில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

விண் தொலை நோக்காடியான 'ஸ்பிட்சர்' தொலைநோக்காடி இந்த நட்சத்திரம் சார்ந்த குடும்பத்தை கண்டுபிடித்தது. மேலும் பூமியிலுள்ள இதர தொலை நோக்காடிகளின் வழி இது மறு உறுதிப்படுத்தப்பட்டது என்று நாசா விஞ்ஞானி நிக்கோல் லெவிஸ் நேற்று மிகப்பெரிய செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றில் அறிவித்தார்.

பூமியைப் போன்ற சூழலைக் கொண்ட அதாவது, உயிரினங்கள் இருப்பதற்கான அல்லது தோன்றுவதற்கான வாய்ப்பினைக் கொண்ட கிரகங்கள் சிலவற்றை கடந்த காலங்களில் நாசா கண்டுபிடித்து அறிவித்துள்ளது என்றாலும் இந்தப் புதிய கண்டு பிடிப்பு முற்றிலும் மாறுபட்ட ஒன்று என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

வேற்றுக் கிரகங்களில் உயிரினங்களைத் தேடும் முயற்சிகளுக்கு இந்தக் கண்டுபிடிப்பு புதிய உந்துதலை ஏற்படுத்தி இருப்பதாக அறிவியல் உலகம் கருதுகிறது.

ஒட்டுமொத்தமாக, இந்த நட்சத்திரக் குடும்பத்திற்கு 'டிராப்பிஸ்ட்-1' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள 7 கிரகங்களும் பூமியை ஒத்தவை என்றாலும் அதில் மூன்று மிக மிகப் பொருத்தமானவை எனக் கருதப்படுகின்றன.

ஏனெனில், இந்த மூன்று கிரகங்கள், கடல்களைத் தக்க வைத்துக்கொள்ளக் கூடியவையாக தோன்றுகிறது. இதன் பாறைப் படிவங்களும் நீர் ஆதாரங்களைத் தக்கவைக்கும் திறனும் மனிதர்கள் வசிப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கு உதவக்கூடியவை என்று நாசா அறிவியல் பணித் துறையின் நிர்வாகி தோமஸ் ஷுர்பக்சென் தெரிவித்துள்ளார்.

எனவே, பூமிக்கு அப்பால் இன்னொரு பூமியை நாம் வெகு விரைவில் கண்டுபிடித்து விடுவோம். அது, இந்த மூன்று கிரகங்களில் ஒன்றாகக் கூட இருக்கலாம் என அவர்  தெரிவித்திருக்கிறார்.

இந்த டிராப்பிஸ்ட்-1 கிரகக் கூட்டமைப்பு நமது சூரிய குடும்பத்தின் இயல்பைக் கொண்டுள்ளது. நமது சூரியன் கிட்டத்தட்ட 460 கோடி ஆண்டு வயதைக் கொண்டது என்றால் புதிதாக கண்டிபிடிக்கப்பட்டுள்ள கிரகங்களைக் கொண்ட அந்த நட்சத்திரம் 500 கோடி ஆண்டு வயதைக் கொண்டது. 

இந்த நட்சத்திரதிற்கு மிக அருகில் இந்த 7 கிரகங்களும் சுற்றி வருகின்றன. அதேவேளையில், இந்த நட்சத்திரம் நமது சூரியனை விட அளவில் சிறியது என்பதால் கிரகங்கள் மீதான வெப்பத் தாக்கம் பூஜ்ஜியம் செல்சியஸில் இருந்து 100 செல்சியஸிற்குள் தான் இருக்கிறது.

அடுத்து விரைவில் விண்வெளியில் செயல்படவிருக்கும்  மிகப்பெரிய இரண்டு விண் நோக்காடிகள் முழுமையாக செயல்படும் போது குறிப்பிட்ட அந்த மூன்று கிரகங்களின் உட்புறங்களையும் நாம் ஊடுருவிப் பார்க்க முடியும். உயிர்க்கூறுகளின் தடயங்கள், ஆக்ஸிஜன், மற்றும் அதன் தெளிவான புறச்சூழல்களை நாம் கண்டுகொள்ள முடியும் என்று நாசா கூறுகிறது.

 

 

 

 

 

 

 வாஷிங்டன், பிப்.21- நாம் வாழும் சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள பூமியைப் போன்ற அமைப்பைக் கொண்ட கோள்கள் பற்றிய மிக முக்கியத் தகவல் ஒன்றை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக் கழகமான 'நாசா' நாளை அறிவிக்கக்கூடும் என்ற பெரும் பரபரப்பு உருவாகி இருக்கிறது.

மிக முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றை அது நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தக் கூட்டம் நாளைக் காலையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரியக் குடும்பத்துக்கு அப்பாலுள்ள கோள்களைப் பற்றிய புதிய கண்டுபிடிப்புத் தகவல்களை நாசா விண்வெளி ஆய்வு மையம்  இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடக்கூடும் என்ற யூகம் நிலவுகிறது.

மேலும், வேற்றுக் கிரக உயிரினம் தொடர்பான தகவலாகவும் அது இருக்கக்கூடும் என வேற்றுக்கிரகவாசிகள் மீதான ஆர்வலர்கள் தெரிவித்திருப்பதால் புதிய பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. 

இந்தச் சந்திப்பின் போது நாசா அறிவிக்கவிருக்கும் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி 'தி ஜர்னல் நேட்சர்' தளத்திலும் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், நாசா தரப்போகும் தகவல் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் அனைத்துலக அளவிலான விண்வெளி ஆய்வாளர்களிடையே அதிகரித்திருக்கிறது.

முன்கூட்டியே அனுமதிபெற்ற ஊடகங்களுக்கு மட்டுமே செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படும்., இந்தச் சந்திப்பு நாசா தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவிருக்கிறது. இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பை http://www.nasa.gov/nasatv என்ற இணைய முகவரியில் காணலாம். 

 

 

 வெலிங்டன், பிப்.14- நியூசிலாந்தின் தென் தீவின் கடலோரப் பகுதியில் வரலாறு காணாத அளவுக்கு கூட்டம் கூட்டமாகக் கரை ஒதுங்கி உயிர்நீத்த திமிங்கலங்கள் வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளன.

கிட்டத்தட்ட 400க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரைகளில் ஒதுங்கி மீண்டும் கடல் சேர முடியாமல் உயிர் நீத்துள்ளன. இந்த அளவுக்கு திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உயிர்நீப்பது இதுவரை நடந்திராத ஒன்று எனச் சுற்றுச் சூழல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

இறந்து கிடக்கும் திமிங்கலங்கள் தொடர்ந்து வீக்கமடைந்து வருகின்றன. ஒரு குறிப்பிட்ட சில நாள்களுக்குப் பின்னர் அவை வெடித்துவிடும். அவை மிகப்பெரிய சப்தத்துடன் வெடிக்கக் கூடியவை என்பதால் சுற்றுச் சூழல் மிகுந்த மாசுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சங்கடத்திலிருந்து தப்புவதற்காக நிபுணர்கள், இறந்து கிடக்கும் திமிங்கலங்களின் உடல்களில் பல இடங்களில் துவராங்களை உருவாக்கி வருகின்றனர். இதன் மூலம் அவை வெடிப்பதைப் தவிர்க்க முடியும் என அவர்கள் கூறுகிறார்கள்.

மடிந்து விட்ட திமிங்கலங்களின் உடலுக்குள் ஒருவகை வாயு உருவாகி, அவை பெருக்கமடையும் போது அவை வெடித்துச் சிதறி விடும். இத்தகைய துவாரங்களின் வழி அந்த வாயு வெளிறே வழிவகுத்து விட்டால் அவை வெடிக்காது என்று நியூசிலாந்து நிபுணர் திரிஷ் கிரேண்ட் கூறினார்.

எனினும், இப்பிரச்சனை மேலும் பூதகரமாக உருவெடுக்கும்  அபாயம் இருப்பதாக அவர் சொன்னார். இப்பகுதியின் கடலோரத்தில் இருந்து சற்று தொலைவான இடங்களில் இன்னும் நிறைய திமிலங்கலங்கள் சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றன. 

இவை திசைதப்பி கடலோரப் பகுதிகளில் ஒதுங்குமேயானால் மேலும் பல மடிய நேரும். கரைக்கு வந்த திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் கொண்டு போய்விடும் தங்களின் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த மாதிரி பலன்கள் கிடைப்பதில்லை. அவை கடலுக்கு திரும்ப மறுத்து கரையிலேயே மடிகிற பரிதாபநிலை தொடர வாய்ப்புள்ளது என்று திரிஷ் கிரேண்ட் கூறினார்.

 

 
 

கோலாலம்பூர், பிப்ரவரி 10-  சர்வதேச நேரப்படி, இன்று 10 மணிக்கு  தொடங்கும் சந்திர கிரகணம் மறுநாள் 2.53  மணி வரை நீடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 

அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா  மற்றும் ஆசியாவிலுள்ள பல பகுதிகளில் இந்த அதிசய காட்சியைக் காணலாம். சந்திர கிரகணம் ஏற்படும் போது பூமி  இடையில் அமைந்திருக்க சூரியன், சந்திரன் ஆகியவை அணிவகுத்து நிற்கும். 

இந்த அணிவகுப்பின் போது பூமியின் நிழல், சந்திரன் மீது விழுந்து சந்திர கிரகணத்தை ஏற்படுத்தும்.மேலும், சந்திர கிரகணத்தின் போது நிலவு வெள்ளி படர்ந்ததை போல பேரழகாக காட்சியளிக்கும்.

பிப்ரவரியில் தோன்றும் இந்த முழு நிலவு, பனி நிலவு என அழைக்கப்படுகிறது. மேலும் கமெட் 45p என்னும் வால்நட்சத்திரமும் நடு இரவில் தோன்றும் என தெரிகிறது இந்த கமெட் 45p வால் நட்சத்திரம் 1948-ஆம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டதாகும்.

 லண்டன், ஜன.31- 'இந்த மனுஷன் என்ன ஆட்டம் போடுறான் பாருங்க' என்று யாராவது அலுத்துக் கொள்வதை நாம் அடிக்கடி கேட்டு இருப்போம். ஆனால் அத்தகைய மனிதன், ஒரு மில்லி மீட்டர் அளவைக் கொண்ட ஒரு நுண்ணிய கடல் உயிரினத்தில் இருந்துதான் வந்தான் என்று இப்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் என்பது ஓர் ஆச்சர்யமான விஷயம்...!

மனிதனின் மிக மூத்த மூதாதையர் யார் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மூத்த மூதாதையரில் இருந்து தான் மனிதன் உள்பட பல்வேறு உயிரினங்கள் தோன்றியுள்ளன. மிக நேர்த்தியாக, பதப்பட்டநிலையில் கண்டுபிடிக்கப்பட்ட படிமத் தடயங்கள் கிட்டத்தட்ட 54 கோடி ஆண்டுகளைக் கடந்தது என்று அவர்கள் கண்டறிந்துள்ளார்.

மிக நுண்ணிய கடல்வாழ் விலங்காக இது கருதப்படுகிறது. 'சாக்கோரைத்தஸ்' என்றழைக்கப்படும் இந்த பூர்வ உயிரினம் தான் பல விலங்குகளுக்கு மூதாதை. குறிப்பாக, முதுகெலும்புள்ள விலங்குகளுக்கு இதுதான் மூதாதை.  கடல் படுகையில் மணல்களுக்கிடையே இது வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.

பிந்த நுண்ணிய உயிரினம் தனது பரிணாம வளர்ச்சிப் பாதையில், மீன்களாகி பின்னர் பல்வேறு வடிவங்கள் கண்டு படிப்படியாக மனித இனத்திற்கு வளர்ச்சி கண்டது. மத்திய சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் படிமத் தடயங்கள்

குறித்து 'நேட்சர்' எனப்படும் அறிவியல் சஞ்சிகை விரிவான ஆய்வு ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து, சீனா, மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் குழு ஒன்று இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

 

 

Advertisement