ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு உலக நாடுகள் ஆதரவு
ஐ.நா.பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று ஜி-4 நாடுகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு உலக நாடுகள் பல ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்தத் தகவலை ஐ.நா.வுக்கான தூதர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார். இந்தியாவுக்கு ஆதரவாக 85 நாடுகள் கையெழுத்திட்டுள்ளதாகவும், 53 நாடுகள் ஆதரவு தர தெரிவித்திருப்பதாகவும், மேலும் சில நாடுகள் இந்த வரிசையில் சேர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜி-4 நாடுகள் கூட்டத்தின் நிறைவு நாளில், பிராந்திய பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் மற்றும் தாற்காலிக உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வலியுறுத்தப்பட்டது. இது குறித்து புரி மேலும் தெரிவித்ததாவது:
""ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது மகிழ்ச்சியளிக்கக் கூடிய செய்தியாகும். ஜி-4 நாடுகளின் கூட்டத்தில் நடைபெற்ற 5 சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஐ.நா.பாதுகாப்புச் சபையின் சீர்திருத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது.
போர்ச்சுகல், கிரீஸ், ஹங்கேரி, ஸ்லோவேனியா போன்ற ஐரோப்பிய நாடுகளும், கரீபியன் மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகளும் உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளன. இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுவது சரியல்ல. சரியான காரணங்களின் அடிப்படையில், தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால் தாங்கள் ஆதரிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நாடுகள் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று சீனா கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சான்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் தெரிவித்த கருத்திலேயே சீனா உறுதியாக உள்ளது. அந்த மாநாட்டில் இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் சர்வதேச விவகாரங்களில் ஆக்கபூர்வமான பங்களிப்பை தர விரும்புவதை புரிந்து கொண்டுள்ளதாகவும், அதனடிப்படையில் ஐ.நா. சபையில் முக்கியப் பங்கு வகிக்க தான் ஆதரவு தருவதாகவும் சீனா தெரிவித்திருந்தது.
ஐ.நா.சபையின் செயல்பாடுகளிலும் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது'' என்று புரி தெரிவித்தார்.
முதன்முறையாக ஜி 4 நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டன. அதில் 21-ம் நூற்றாண்டில் பிராந்திய பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலை விரிவுபடுத்துவதே பொதுநோக்கம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.



Post your comment