புளூபிரிண்ட் திட்ட அமலாக்கம்: தலைமை  இயக்குனராக என்.எஸ். இராஜேந்திரன்!

சமூகம்
Typography

புத்ராஜெயா, மே.19-இந்தியர்களுக்கான 'புளூப்பிரிண்ட' வியூகப் பெருந்திட்டம் அமலாக்கப் பணிகளை மேற்கொள்வதற்கு 'செடிக்' அமைப்பு முற்றிலுமாக மறுசீரமைப்புச் செய்யப்பட்டு அதன் தலைமை இயக்குனராக பேராசிரியர் டத்தோ டாக்டர் என்.எஸ்.இராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியர்களுக்கான சிறப்புப் பணிக் குழுவாக செயல்பட்டு வந்த SITF அமைப்பு, இந்தியர் வர்த்தக வளர்ச்சித் திட்ட செயலகமான சீட் மற்றும் PTST எனப்படும் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்கால செயல்வரைவுத் திட்ட அமைப்பு ஆகிய மூன்று அமைப்புக்களும் இனிமேல் மறுசீரமைக்கப்படும் செடிக் அமைப்பின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட அமைப்புக்களின் செயல் திட்டங்களை விரிவாக்கவும் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களை அமர்த்தி அமலாக்கத்தை மேற்கொள்வதற்காகவும் இந்தச் சீரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஏற்பாட்டின் கீழ் 58 முழுநேரப் பணியாளர்கள் அமர்த்தப்படுவர். இதன் கீழ் 6 பிரிவுகள் உருவாகவுள்ளன. 

1) கல்வி மற்றும் இளைஞர் மேம்பாடு

2) பொருளாதாரம் மற்றும் வருமானம் மேம்பாடு

3) சமூகநல மற்றும் சமூக மேம்பாடு.

4) அடையாள ஆவண ஒருங்கிணைப்பு

5) ஆய்வு மற்றும் சிறப்பு அமலாக்கம்

6) சிறப்புத் திட்டங்கள்

சீரமைக்கப்பட்ட SITF அமைப்பு, இந்தியர்கள் அதிகமாக வாழும் 10 இடங்களில் சேவை மையங்களை அமைக்கவிருக்கிறது. அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே ஒரு தொடர்பு அமைப்பாக SITF செயல்படுவதற்காக இந்த மையங்கள் அமைக்கப்படுகின்றன.

மேலும், இந்த அமைப்பின் இயக்குனராக பேராசிரியர் டத்தோ டாக்டர் என்.எஸ். இராஜேந்திரன் பொறுப்பு வகிப்பதற்கு பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ஒப்புதல் அளித்துள்ளார்.

இம்மாதம் 22ஆம் தேதியிலிருந்து இவரது பணி தொடங்கவிருக்கிறது.

இந்திய சமுதாயம் தொடர்பான அமைச்சரவைக் குழுவின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மஇகா தேசிய தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஶ்ரீ டாக்டர் சுப்பிரமணியம், செடிக் அமைப்பின் அமலாக்க மேற்பார்வையாளராக இருப்பார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS