இனத் தூவேசம்: இந்திய மாணவிகளிடம் மன்னிப்புக் கேட்டடார் விரிவுரையாளர்

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல்.21- இரண்டு இந்திய மாணவிகளுக்கு எதிராக இனத் தூவேசக் கருத்துக்களைக் கூறியதாக, பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்த மலாயா பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தம்முடைய செயலுக்காக அந்த மாணவிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

அந்த மாணவிகளுக்கும் விரிவுரையாளருக்கும் இடையே நடந்த சந்திப்பு ஒன்றின் போது தமது செயலுக்காக வாய்மொழி மூலமாகவும் எழுத்துப்பூர்வமாகவும் அந்த விரிவுரையாளர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் டான்ஶ்ரீ பேராசிரியர் டாக்டர் முகமட் அமின் ஜலாலுடின் தெரிவித்தார்.

இந்த மன்னிப்பை மாணவிகளும் ஏற்றுக்கொண்டனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாது என்று தாம் நம்புவதாக அவர் சொன்னார். இந்தச் சந்திப்பின் போது துணைவேந்தர் டாக்டர் முகமட் அமினும் உடனிருந்தார்.

நடந்து முடிந்த சம்பவத்திற்காக தாம் வருந்துவதாகவும் இனத் தூவேசப் பிரச்சனைகளை கிளப்பவேண்டும் என்பது தமது நோக்கமல்ல என்றும் என்றும் எதிர்காலத்தில் மிக கவனமாகச் செயல்படப் போவதாகவும் அந்த விரிவுரையாளர் சொன்னார். 

வகுப்பறையில் இந்த விரிவுரையாளர் அவ்வாறு இனத் தூவேசமாக பேசியது குறித்த சம்பவம் பற்றி அண்மையில் முகநூலில் தகவல் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியர்களில் பல்வேறு தரப்பினரும் விரிவுரையாளரின் செயலை மிகக் கடுமையாக விமர்சித்ததோடு அவரை வேலையிலிருந்து நீக்கவேண்டும் என்றும் கோரிவந்தனர்.

இதனிடையே எந்த வகையான இனத் தூவேசங்களையும் இதர இனங்களை அவமதிக்கும் செயல்களையும் மலாயா பல்கலைக்கழகம் சகித்துக் கொள்ளாது என்று துணைவேந்தர் டாக்டர் முகமட் அமின் வலியுறுத்தினார்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS