ஜாகிர் நாயக்கிற்கு மலேசியாவில் இடமில்லை- டாக்டர் சுப்ரா

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல் 20- சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் சேவை மலேசியாவிற்கு தேவை இல்லை என்றும் அவர் மலேசியாவில் இருப்பதற்கு இடமும் இல்லை என சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார். ஜாகிருக்கு மலேசியாவின் நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு சுப்ரா மேற்கண்டவாறு கூறினார்.

நேற்று இரவு இந்திய இளைஞர்களுடனான திஎன்50 கருத்தரங்கு நடைபெற்றது. அப்போது பலர் ஜாகிருக்கு நிரந்தர குடியிருப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்து கேள்வி எழுப்பினர். இந்தியாவில் தீவிரவாத செயலுக்கான விவகாரத்தில் விசாரணை நடத்த தேடப்பட்டு வரும் ஜாகிருக்கு மலேசியாவின் குடியுரிமை வழங்கப்பட்டது எதற்காக என இந்திய இளைஞர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த சுப்ரா, "மலேசியாவிற்கு ஜாகிர் நாயக் தேவையில்லை. அவர் இஸ்லாம் சமயத்தின் முன்னேற்றத்திற்கு ஏதாவது உதவி செய்வாரா? இல்லை என்பதே அதற்கான பதில்" எனச் சொன்னார். "உள்ளூரில் ஜாகிருக்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அது தற்போதைய சமய ஆதிக்கத்தைக் காட்டுவதாக அமைக்கிறது. இந்த ஆதிக்கத்தை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்பதே நம்முடைய பிரச்சனை" என அவர் மேலும் கூறினார்.

இம்மாதிரியான விசயங்களைச் சரியாக கையாளவில்லை என்றாலும் பாகுபாடுகள் காணப்பட்டாலும் அது நாட்டின் உருமாற்ற திட்டத்திற்கு காரணமாக அமையும் என சுப்ரா எச்சரித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS