"ரொம்ப வலிக்குது...ஸ்ப்ரே பண்ணிட்டாங்க..." : கிம்-மின் இறுதி கதறல்

சமூகம்
Typography

கோலாலம்பூர்,  பிப்ரவரி 17-  "ரொம்ப வலிக்குது... வலி தாங்கமுடியல.. என் மேல ஸ்பிரே அடிச்சுட்டாங்க " இதுதான் வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நாம் கடந்த திங்கட்கிழமை  காலையில் உதிர்த்த கடைசி வார்த்தைகள். 

கோலாலம்பூர் இரண்டாவது அனைத்துலக விமான நிலையத்தில் இரு பெண் உளவாளிகளால் திரவ ஸ்பிரே தாக்குதலுக்கு ஆளான பின்னர் கிட்டத்தட்ட 15 மீட்டர் தூரம் நடந்து சென்று, அவர் விமான நிலைய சேவை மைய  அதிகாரிகளிடம் அவர் வலியால் துடித்த வாரே ஈனஸ்வரத்தில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து, அங்கிருந்த  உதவிப் போலீசாரின் துணையோடு,   மூன்றாவது மாடியில் உள்ள  விமான நிலைய கிளினிக்கிற்குக் கொண்டு செல்லப்பட்டார். அதன் பின்னர் அவரால் கடுமையான  வலியால் கதற மட்டுமே முடிந்தது. 

எனினும், அங்கு  அவர் சுயநினைவை இழந்ததைத் தொடர்ந்து, நிலைமையின் தீவிரம் கண்டு புத்ரா ஜெயா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். எனினும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே கிம் ஜொங் நாம் மரணமடைந்தார். 

முதலில் ஒரு கொரியர் என்றே அடையாளம் காணப்பட்ட நிலையில், பின்னர் அவர் வடகொரிய அதிபர் கிம் ஜொங் யுன்னின் சகோதரர் எனத் தெரியவந்ததையடுத்து,  இவ்விவகாரம்  உள்நாடு மட்டுமின்றி அனைத்துலக நிலையிலும் பரபரப்பானது, குறிப்பிடத்தக்கது. 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS