'குடும்ப உறவா? ஆஹா, ஏக திருப்தி..' என்கிறார்கள் 83% மலேசியர்கள்!

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்.17- தங்களின் தனிப்பட்ட குடும்ப உறவுகள் ஏக திருப்திகரமாக இருக்கின்றன என்று 83 விழுக்காடு மலேசியர்கள் கூறுகின்றனர் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின்படி ஆசியாவிலுள்ள 10 நாடுகளில், மலேசியா 5ஆவது இடத்தில் இருக்கின்றது. 

குடும்ப உறவுகளில் மக்கள் எவ்வளவு திருப்திகரமாக இருக்கிறார்கள்? அதனை மேலும் மேம்படுத்த என்ன செய்யவேண்டும்? என்பது குறித்த ஆய்வுகளுக்கான 2016-ஆம் ஆண்டின் குறியீட்டு அட்டவணை வழி மேற்கண்ட புள்ளி விபரங்களை கிடைத்துள்ளன. 

தங்களின் வாழ்க்கைத் துணை, தங்கள் மீது செலுத்தும் அன்பு திருப்திகரமாக இருக்கிறது என்று 83 விழுக்காடு மலேசியர்கள் கருதுவதாக அது தெரிவிக்கிறது. 

அதே வேளையில், ஆசிய ரீதியில் பார்த்தால் இத்தகைய திருப்தியுடன் இருப்பவர்கள் 73 சதவிகிதம் தான் எனக் கண்டறியப்பட்டுள்ளது. தங்களுக்கு இடையே வாக்குவாதங்கள் உருவாவதற்கு முக்கிய காராணமாக இருப்பது 'பணம்' தான் என்று 47 விழுக்காடு மலேசியர்கள் கூறுகின்றனர்.

இது தவிர, பொதுவாக வாக்குவாதங்களும் சச்சரவுகளும் ஏற்படுவதற்கு குழந்தைகள் காரணம் என்று 33 விழுக்காட்டினரும் ஒருவர் மீது ஒருவர் அக்கரையற்று இருப்பது 32 விழுக்காடு காரணமாக அமைகிறது என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. தொலைப்பேசி மற்றும் கம்பியூட்டரில் அதிக நேரத்தை செலவிடுவதால் வரும் வாக்குவாதங்கள் 31 விழுக்காடு எனக் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் மலேசியத் தம்பதிகளில், தங்களது பணத்தை தனித் தனி வங்கி கணக்கில் வைத்துக் கொள்பவர்களே அதிகம். 39 விழுக்காட்டினர் மட்டுமே கூட்டு வங்கிக் கணக்கு வைத்திருக்கின்றனர்.

மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, இந்தோனிசியா உள்பட 10 நாட்டுகளில் இது தொடர்பாக 5,000 பேரிடம் நடத்தப்பட்ட கருத்தாய்வுகளின் வழி இது கண்டறியப் பட்டிருக்கிறது. இந்த ஆய்வை 'புருடென்சியல் அசூரன்ஸ் மலேசியா பெர்ஹாட்' நடத்தி இருக்கிறது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS