ஈப்போவில் லேனா தமிழ்வாணனுக்கு விருது: விழாவில் பி.கே.குமாரின் நூல் வெளியீடு!

சமூகம்
Typography

ஈப்போ, மார்ச்.13- தமிழ்ப் படைப்புலகம் நன்கறிந்த எழுத்தாளரும் தன்முனைப்புப் பேச்சாளருமான 'உலகப் பண்முகச் செம்மல்'  லேனா தமிழ்வாணனுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கும் விழா எதிர்வரும்  மார்ச் 17-ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணி யளவில் ஈப்போவில் நடைபெறவிருக்கிறது.

அதேவேளையில், ஈப்போ பெர்சியாரான் பெக்கோ யோகிராம் சரத்குமார் (டேவான் ஒய்.ஆர்.எஸ்.கே) மண்டபத்தில் நடைபெறும் இந்த விருது விழாவின் போது பொது வாழ்வில் 35ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றி வரும் பி.கே.குமாரின் ‘வாருங்கள் வணிகச் சமுதாயமாக மாறுவோம்’ என்ற நூல் வெளியீட்டு விழாவும் இடம்பெறவிருக்கிறது.

சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் கல்யாண சுந்தரம் மற்றும் பதிப்பகத் துறையில் முத்திரை பதித்தவரான ரவி தமிழ்வாணன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

பெரிய முதலீடுகள் இருந்தால் மட்டும்தான் சுயதொழில் செய்ய முடியுமா?  சிறிய, எளிய முதலீடுகள் மூலமும் இலக்குகளை அடையலாம் என்பதை எடுத்து இயம்பும் விதமாக பி.கே.குமாரின் ‘வாருங்கள் வணிகச் சமுதாயமாக மாறுவோம்’என்ற நூல் அமைந்திருக்கிறது.

வணிக வாய்ப்புகள் பற்றி அதிகம் அறியாதவர்களுக்கு இந்த நூலின் மூலம் புதிய வழிமுறைகள் அலசி ஆராயப்பட்டுள்ளன. வாசகர்களுக்கு வழிகாட்டியாக அமையும் வண்ணம் நூல் முழுவதும்  வணிகச் சிந்தனைகள் விதைக்கப் பட்டுள்ளன.

இந்நூல் வெளியீட்டு விழாவில் லேனா தமிழ்வாணனுக்கு வாழ்நாள் சாதணையாளர் விருது வழங்கும் சிறப்பு நிகழ்ச்சியும் மிக விரிவாக நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்வுகளுக்குத் திரளான தமிழ் ஆர்வலர்கள் வருகை புரிந்துச் சிறப்பிக்க வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான தொழில் முனைவர் நிர்வாக மையம் வேண்டுகோள் விடுத்தது.  மேல் விபரங்களுக்கு 012-5555 517 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

BLOG COMMENTS POWERED BY DISQUS