புத்த பிக்குகளை தாக்க கத்தியுடன்  தலைநகரில் திரிந்த தீவிரவாதி கைது

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஜன.22- புத்த பிக்குகளைக் கொல்வதற்காக கத்தியுடன் கோலாலம்பூர் நகரைச் சுற்றிக் கொண்டிருந்த ஐஎஸ் தீவிரவாதத் தொடர்புடைய நபர் ஒருவர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடவும் ஐஎஸ் சித்தாந்ததைப் பரப்பவும் திட்டம் தீட்டி செயல்பட்டுக் கொண்டிருந்ததாக கருதப்படும் இவர்கள் இருவரையும் இருவேறு தருணங்களில் போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்களில் ஒருவர் ஓர் இந்தோனிசியர் ஆவார்.  புலனம் மூலமாக மூத்த ஐஎஸ் தலைவர் ஒருவருடன் தொடர்பு கொண்டு  இதர பல இந்தோனிசியர்களையும்  திரட்டுவதற்கு  இந்த நபர் பேசி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

மியன்மாரில் ரோஹின்யா முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு பழிவாங்கும் நோக்கில் கோலாலம்பூரில் புத்த பிக்குகளைத் தாக்குவதற்கு இந்த நபர்  திட்டமிட்டிருந்தான்.

கைதான இன்னொரு நபர் தனியார் சமயப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியரான  ஒரு மலேசியர் ஆவர். கேளிக்கை மையங்களைத் தாக்கவும்  கொள்ளையடிக்கவும் முஸ்லிம் அல்லாதோரைக் கடத்திக் கொலை செய்யவும் இந்த நபர் திட்டம் தீட்டியதாக ஐஜிபி டான்ஶ்ரீ முகம்மட் ஃபுஸி தெரிவித்தார். இந்த நபர் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு ஏற்கனவே பல மாதங்கள் சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS