வங்கிக்குச் செல்லும் வழியில் வழிப்பறியா? கடை ஊழியரின் கபட நாடகம் அம்பலம்!

சமூகம்
Typography

ஈப்போ, ஜன.22- வங்கிக்குச் செல்லும் வழியில் இருவர், தன்னை மடக்கி,  தான் வேலை செய்யும் கடைக்குச் சொந்தமான பணத்தை அபகரித்துக் கொண்டு சென்று விட்டதாக போலீசில் புகார் செய்த கடை ஊழியர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக நம்பப்படும் அவருடைய நண்பர்கள் இருவரும் கைதாயினர்.

இங்குள்ள கிரீன்டவுன் வர்த்தக மையப் பகுதியிலுள்ள வங்கியில் பணத்தைப் போடச் சென்று கொண்டிருந்த போது மோட்டர் சைக்கிளில் வந்த இருவர், தன்னை மடக்கி கையில் இருந்த பணப் பையை அபகரித்து சென்று விட்டதாக 23 வயதுடைய கடை ஊழியர் ஒருவர் போலீசில் புகார் செய்தார்.

அந்தப் பையில் கடைக்குச் சொந்தமான 3,060 ரிங்கிட்டும், தன்னுடைய சொந்தப் பணமான 200 ரிங்கிட்டும் தன்னுடைய அடையாளக்கார்டு, வாகன லைசென்ஸ், ஏடிஎம் கார்டு, கைத்தொலைபேசி  ஆகியவையும் இருந்ததாக போலீசாரிடம் அவர் சொன்னார்.

மேலும், தன்னுடைய அடையாள ஆவணங்களை, சம்பந்தப்பட்ட திருடர்கள் தவறாகப் பயன்படுத்தி விடக்கூடும் என்றும்  அவர் அச்சம் தெரிவித்ததாக ஈப்போ ஓசிபிடி முகம்மட் அலி தம்பி சொன்னார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து நாங்கள் புலன் விசாரணை மேற்கொண்டோம். மேலும் இந்தத் திருட்டில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 22 வயதுடைய மற்றும் 24 வயதுடைய  இருவரை  கைது செய்து விசாரித்தோம்.

அப்போது இவர்கள் மூவருமே நண்பர்கள் எனத் தெரிய வந்தது.  மேலும் இந்த மூவரும் முன்கூட்டியே திட்டமிட்டு இந்தத் திருட்டு நாடகத்தை நடத்தி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாக ஓசிபிடி முகம்மட் அலி தம்பி தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS