தைப்பூசத்தில் கால்பந்து, குண்டர் கும்பல் சின்னம், டுரியான், கத்திகள், தடுக்கப்படும்!

சமூகம்
Typography

 கோலாலம்பூர், ஜன.22- மிகப்பெரிய காவடிகள், கத்திகள், டுரியான்கள் மட்டுமின்றி கால்பந்து கிளப்புகளின் சின்னங்கள், குண்டர் கும்பல் சின்னங்கள் ஆகியவற்றைக் கொண்ட காவடிகள், பத்துமலை ஆலயத்தின் நுழைவாயிலேயே தடுத்து நிறுத்தப்படும். 

தடை செய்யப்பட்ட சின்னங்கள், மிளகாய், ஆப்பிள் என்று அலங்கரிக்கப்பட்ட காவடிகளும் தடுத்து நிறுத்தப்படும். எந்தெந்தக் காவடிகளைத் தடுத்து நிறுத்துவது என்ற பட்டியல் தைப்பூச பணிப் படையிடம் வழங்கப் பட்டிருப்பதாக ஶ்ரீமகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஶ்ரீ ஆர். நடராஜா தெரிவித்தார்.

மரபுக்கு மாறான காவடிகளைச் சுமந்து வரவேண்டாம். அத்தகைய செயல், காவடி எடுப்பதன் நோக்கத்தையே சிதைத்து விடும். அதுவொரு கேளிக்கையாக ஆகிவிடும்.  காவடி எடுப்பதன் நோக்கமென்ன என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். முருகப் பெருமானின் பெயரால் நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றுகிறோம் என்பதை மறந்து விடக்கூடாது என்று அவர் சொன்னார். 

அளவுக்கு அதிகமான பெரிய காவடியாக இருந்தால் உள்நுழைவாயிலில் நுழைவதில் சிரமம் ஏற்படும். உடல் முழுவதும் கொக்கிகள் குத்திக்கொள்வது, கூர்மையான பொருளின் மீது நின்று நடனம் ஆடுவது  சுருட்டு மற்றும் சிகரெட் புகைப்பது, சாட்டையில் அடித்துக் கொள்வது, மதுபானங்களை வைத்திருப்பது ஆகியவை ஊக்குவிக்கப் படமாட்டாது என்று டான்ஶ்ரீ நடராஜா விளக்கினார்.

மிகப்பெரிய அளவிலான மேளங்களையும் பொருத்தமில்லாத பாடல்களைப் பாடி ஆட்டம் போடுவதையும் பக்தர்கள் தவிர்க்கவேண்டும் என்றார் அவர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS