யாரும் திருந்தவில்லை! இன்னமும் பிபிஆர்  அடுக்கு மாடியில்  பீர் டின்கள் விழுகின்றன!

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஜன.21- இங்குள்ள பந்தாய் டாலாம் ஶ்ரீபந்தாய் பிபிஆர் அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில், மேல் மாடியில் இருந்து நாற்காலி ஒன்று தூக்கி வீசப்பட்டதால் கீழே நடந்து சென்று கொண்டிருந்த 15 வயது மாணவன் சதீஸ்வரன் படுகாயமடைந்து உயிர் நீத்த சம்பவம் இன்னும் மனதை விட்டு அகலாத நிலையில், மேல் மாடிகளில் இருந்து குப்பைகளை வீசும் பழக்கத்தை இந்தக் குடியிருப்பு மக்கள் கைவிட்டதாகத் தெரியவில்லை.

கடந்த திங்கள் கிழமை நடந்த சம்பவத்தில் 21 ஆவது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட நாற்காலி ஒன்று, தன்னுடைய தாயாருடன் கடைக்குச் சென்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த மாணவன் சதீஸ்வரனின் தலையில் விழுந்து, சம்பவம் நடந்த இடத்திலேயே உயிர்நீத்தார்.

மேல் மாடியிலிருந்து குப்பைகளைக் கண்டபடி வீசியெறியும் பழக்கம் இங்குள்ள குடியிருப்பு வாசிகளிடமிருந்து போகவில்லை. இன்னமும் குப்பைகள் பறக்கின்றன என்று இந்த அடுக்குமாடி  கட்டத்தின் கீழ் அங்காடிக் கடை நடத்திவரும் 58 வயதுடைய பெயர் குறிப்பிட விரும்பாத  நபர் கூறினார்.

ஒவ்வொரு நாளும் குப்பைகள் பறந்து வந்து விழுந்தவாறு உள்ளன. நேற்றுக் கூட காலி பீர் டின்கள் அடங்கிய பை ஒன்று பறந்து வந்து கீழே விழுந்தது. சில வேளைகளில் கடினமான பொருள்களும் வந்து விழுகின்றான. ஒரு மரணம் நிகழ்ந்த பின்னரும் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் சொன்னார்.

மேல் மாடியில் இருந்து வீசியெறியப்படும் பொருள்களால் கீழே நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் சேதமடைவது அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சியாகி விட்டது.  இத்தகையோரை கண்டித்தாலும் பயனில்லை. அவர்கள் வேண்டுமென்ற மேலும் அதிகமான குப்பைகளையே வீசுகிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மானவன் சதீஸ்வரனின் மரணத்திற்குப் பின்னராவது இத்தகைய குப்பைகளை வீசும் பழக்கத்தை தடுக்க ஏதாவது செய்ததாகத் தான் வேண்டும் என்று 29 வயதுடைய ரஷிஃப் என்பவர் கூறினார்.

குடியிருப்பு வாசிகளிடம் பொதுநல உணர்வு அறவே கிடையாது. போதுமான வசதிகள் இல்லாததால் குப்பைகளை வீசும் பழக்கத்தை அவர்களால் மாற்றிக்கொள்ள முடியவில்லை ஒவ்வொரு அடுக்கிலும் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படவேண்டும்  என்று அவர் வலியுறுத்தினார்.

சில வேளைகளில் லிப்டுகள் பழுதவடைவதால் மேல் மாடிகளில் இருந்து குப்பைப் பைகளையும் வேண்டாத பொருள்களையும் வீசுவதற்காக படிகளில் இறங்கி வரவேண்டியுள்ளது. வயதான பலரால் அவ்வாறு செய்ய முடிவதில்லை. பலர் பாதி தொலைவு வரை படிக்கட்டுகளில் நடந்து வந்து முடியாத பட்சத்தில் குப்பைகளை படிக்கட்டுகளிலேயே  வைத்து விட்டுப் போய்விடுகின்றனர் என்று ரஷிஃப் விளக்கினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS