பள்ளியில் சேர்க்க மறுப்பதா? என் தத்துப் பிள்ளைக்கு விடிவு எங்கே? -தாய் வேதனை

சமூகம்
Typography

பெட்டாலிங் ஜெயா, ஜன.21- பள்ளிகள் தொடங்கி மூன்று வார காலம் ஆகிவிட்டது. இன்னமும் தங்களின் பிள்ளையைப்  பள்ளியில் சேர்க்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை என்று 7 வயது வளர்ப்புச் சிறுவனின் தாயார் வேதனையுடன் கூறியுள்ளார்.

தங்களின் பிள்ளையை பள்ளியில் சேர்ப்பதில் நிலவும் தாமதமான அரசு நடைமுறை போக்குகளால் பிள்ளையின் கல்வி பாதிக்கப்படுமோ? எனப் பெற்றோர்களான ஸ்டீபன் சார்ல்ஸ் மற்றும் லாம் சிவீ  தியாம் தம்பதிகள் அச்சம் தெரிவித்தனர்.

அண்மையில் கல்வியமைச்சர் டத்தோஶ்ரீ மாட்ஷிர் காலிட் செய்திருந்த அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்தது. பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்களில் ஒருவர் போதுமான ஆவணங்கள் வைத்திருந்தாலும் அல்லது ஆவணங்களுக்கு விண்ணப்பம் செய்து அது பரிசீலனையில் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் பிள்ளைகள் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும் என்று அமைச்சர் தெளிவு படுத்தி இருந்தார். 

ஆனால், கூட்டரசு பிரதேசக் கல்வித்துறை எங்களின் பிள்ளையான மார்க் சைரிலை பள்ளியில் சேர்க்க அனுமதி தரவில்லை. தங்களுக்கு அமைச்சிலிருந்து கடிதம் வரவில்லை என்று கூறிக் காலத் தாமதம் செய்து வருகிறார்கள் என்று மார்க் சைரில் என்ற அந்தச் சிறுவனின் தாயார் லாம் சுவீ  தியாம் சொன்னார். 

மூன்று வாரக் குழந்தையாக இருந்த போது எங்கள் பிள்ளையை நாங்கள்  தத்தெடுத்தோம். அவனுக்கு  மலேசிய குடியுரிமைக்கான விண்ணப்பம் செய்துள்ளோம். அது பரிசீலனையில் இருக்கிறது. ஆனால், எங்களின் பிள்ளையைச் சேர்க்க வேண்டுமானால் அவனுக்கு அனைத்துலக பாஸ்போர்ட் அல்லது குடியுரிமை சான்றிதழ் வேண்டும் என்று கல்வி இலாகா சொல்கிறது  என்றார் அவர்.

அண்மையில் தர்ஷனா என்ற தத்தெடுக்கப்பட்ட சிறுமி, கடும் சர்ச்சைக்குப் பிறகு பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்ட சம்பவத்தை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். என் பிள்ளைக்கும் அப்படியொரு விடிவு பிறக்கும் என்று எண்ணினேன் என்று லாம் சுவீ  தியாம் குறிப்பிட்டார்.

நானும் என் கணவரும் மலேசிய பிரஜைகளாக இருக்கும் போது எங்கள் பிள்ளை மார்க்கின்  அனைத்துலக பாஸ்போர்ட் தேவை என்று கல்வி இலாகா சொல்வது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார். சட்டப்பூர்வமாக த்தெடுக்கப்பட்டவன் என் பிள்ளை. அவனுக்கான ஆவணத்திற்கு நாங்கள் முறையாக விண்ணப்பித்துள்ளோம் என்றார் அவர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS