சந்திர கிரகணத்தின் போது பத்துமலை திறப்பா? கூடாது! இந்து சங்கம் அறிவுறுத்து

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஜன.13- இவ்வாண்டு தைப்பூசத் தினத்தன்று சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது. சந்திர கிரகணம் நிகழும் போது, ஆலயங்கள் பொதுவாக மூடப்பட வேண்டும். அதுவே இந்துக்களின் நம்பிக்கை. அதை எதிர்க்கும் வண்ணம் ஆலயங்கள் செயல்படக் கூடாது என்று மலேசிய இந்துச் சங்கத் தலைவர் ஆர்.எஸ் மோகன் ஷான் கூறினார். 

சந்திர கிரகணத்தின் போது, எவ்வித நன்மைகளும் ஏற்படாது என்று பல காலமாக இந்துக்கள் நம்பி வருகின்றனர். அந்த நம்பிக்கையை ஆதரிக்கும் வண்ணம், பல ஆண்டுகளாக, சந்திர கிரகணம் நிகழும் போது, ஆலயங்கள் மூடப்படும். இந்துக்கள், தங்களின் வீடுகளிலிருந்து வெளியே செல்வதையும், சந்திர கிரகணத்தின் போது தவிர்த்து வருகின்றனர்.  

"அதுமட்டுமல்லாது, சந்திர கிரகணத்தின் போது, கர்ப்பிணிப் பெண்கள் தங்களின் வீடுகளில் தான் இருக்க வேண்டும். பிராணிகளை யாரும் துன்புறத்தக் கூடாது, மரத்தையோ அல்லது மரத்தின் கிளைகளையோ வெட்டக் கூடாது. சந்திர கிரகணம் முடியும் வரை, உணவுகள் மற்றும் நீரை அருந்தக் கூடாது போன்றவற்றை இந்துக்கள் பலகாலமாக கடைப்பிடித்து வருகின்றனர்" என்று மோகன் ஷான் சொன்னார். 

கிரகணம் நிகழும் போது, பத்துமலை திருத்தலம் மூடப்படாது என்று ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஶ்ரீ ஆர். நடராஜா கூறியதைத் தொடர்ந்து, மோகன் ஷான் அவ்வாறு கருத்துரைத்தார். 

ஜனவரி 31-ஆம் தேதியன்று, இரவு 7.48 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம், இரவு 11.11 மணிக்கு தான் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

"மாலை 7.30 மணிக்குள், பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடன்களை செலுத்தி விடுவது நல்லது. இரவு 11.30 மணி வரை, எவ்வித நேர்த்திக் கடன்களையும் செலுத்துவதை அவர்கள் தவிர்க்க வேண்டும்" என்று மோகன் ஷான் அறிவுறுத்தினார். 

பினாங்கிலுள்ள பாலதண்டாயுதபாணி ஆலயம், கெடாவின் ஶ்ரீ சுப்ரமணியசுவாமி தேவஸ்தானம் மற்றும் சிங்கப்பூரிலுள்ள ஆலயங்கள் கூட, சந்திர கிரகணத்தையொட்டி, மாலை 7 மணியளவில் மூடப்படவிருப்பதாக அவர் தெரிவித்தார். 

"இந்துச் சங்கம் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டோம். ஆனால், நாங்கள் பூஜைகளை நடத்துவோம் என்று கூறுவோர்களை நாங்கள் ஏதும் செய்யலாகாது. பத்துமலையில் பூஜைகள் நடைப்பெற்றால், அதில் இந்துச் சங்கம் தலையிடாது" என்று மோகன் ஷான் சொன்னார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS