சந்திர கிரகணம்; பத்துமலை மூடப்படாது! 

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஜன.13- தைப்பூசத் தினமான ஜனவரி 31-ஆம் தேதியன்று சந்திர கிரகணம் நிகழவிருக்கின்ற போதிலும், அன்றைய தினத்தில் பத்துமலை திருத்தலம் மூடப்படாது என்று ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஶ்ரீ ஆர்.நடராஜா கூறினார்.  

அதிகமான பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடன்களை ஜனவரி 29-ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 1-ஆம் தேதி வரை செலுத்திய வண்ணம் இருப்பர் என்றும், தைப்பூசத் தினத்தன்று, சந்திர கிரகணத்தைக் காரணம் காட்டி, ஆலயத்தின் நடையைச் சாத்துவது என்பது சாத்தியமற்றது என்று அவர் கருத்துரைத்தார். 

"சந்திர கிரகணத்தையொட்டி, பரிகாரப் பூஜைகள் ஶ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் நடைப்பெறவிருக்கின்றன. ஆதலால், தங்களின் நேர்த்திக் கடன்களுக்கு பாதிகம் நேர்ந்துவிடுமோ என்று பக்தர்கள் கவலைக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை" என்று அவர் சொன்னார். 

"நேர்த்திக் கடனை சந்திரக் கிரகணம் நிகழும் போது செலுத்தக் கூடாது என்று கருதும் பக்தர்கள், வேறொரு நாளில் தங்களின் நேர்த்திக் கடன்களை செலுத்துக் கொள்ளலாம்" என்றார் அவர். 

இதனிடையில், ஒவ்வொரு வருடமும் நடைப்பெறும் வெள்ளி ரத ஊர்வலத்தோடு, இவ்வாண்டு தங்க ரத ஊர்வலமும் நடைப்பெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி ரதத்தில் முருகப் பெருமான் வலம் வரும் வேளையில், தங்க ரதத்தில் விநாயகப் பெருமான் வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 29-ஆம் தேதியன்று, ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்திலிருந்து இந்த ரதங்கள், மாலை 7 மணிக்கு புறப்படும்.  

BLOG COMMENTS POWERED BY DISQUS