குடியுரிமை இல்லை, பள்ளியில் இடமில்லை; மூன்று இந்திய சிறுவர்களுக்கு வந்த சோதனை! 

சமூகம்
Typography

பட்டர்வொர்த், ஜன.13- க.டர்ஷனாவிற்காக பலர் குரல் கொடுத்து அந்தச் சிறுமியின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்தது போல், தங்களுக்கும் யாராவது உதவ மாட்டார்களா என்று வி.சூர்யா என்ற சிறுவனும் அவனின் இரு சகோதரிகளும் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

பள்ளித் தவணை தொடங்குவதற்கு முன்னர், இரு ஜோடி சீருடைகள், புது புத்தகப்பைகள் போன்றவற்றை வாங்கி வைத்துக் கொண்டு, எப்போது பள்ளித் தொடங்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த வி.சூர்யா (வயது 13), வி.அகிலாண்டேஸ்வரி (வயது 12) மற்றும் வி.துர்கைநாயகி (வயது 11) ஆகிய மூவரும் குடியுரிமை இல்லாத காரணத்தால், இவ்வருடம் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. 

மாக் மண்டீன் தேசிய வகை தமிழ்ப்பள்ளியில் கல்வி அமைச்சின் அரையாண்டு அனுமதியுடன் ஆரம்பக் கல்வியைப் பெற்ற வி.சூர்யாவிற்கு, இவ்வருடம் இடைநிலைப்பள்ளியில் கால் எடுத்து வைக்க விருந்தார். ஆனால், கடந்தாண்டு வரை வழங்கப்பட்ட அனுமதியை, இம்முறை வழங்க கல்வி அமைச்சு மறுத்துவிட்டது. இச்சிறுவனின் இரு சகோதரிகளும் இதேப் போன்ற பிரச்சனையை எதிர்நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இம்மூவரின் தந்தையான வி.வெங்கடேஸ்வரன் (வயது 45) மலேசியப் பிரஜையாவார். இப்பிள்ளைகளின் தாயார், பாலியைச் சேர்ந்த இந்திய-சீன வர்க்கத்தைச் சேர்ந்தவர். இவர் 2011-ஆம் ஆண்டில், சாலை விபத்தொன்றில் மரணமடைந்து விட்டார். இம்மூவரின் பிறப்புப் பத்திரங்களில், தந்தையின் பெயர் குறிப்பிடப்படவில்லை. 

"முறையான பிறப்புப் பத்திரங்கள், சிறுவர்களுக்கான அடையாள அட்டைகள், மை-கார்டுகள் இல்லாத காரணத்தால் இவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுகிறது. ஆதலால், என் பிள்ளைகள் மூவரும், 6 மாதத்திற்கு ஒருமுறை கல்வி அமைச்சின் அனுமதி பெர்மிட்டோடு கல்வி பயின்று வந்தனர்" என்று பகுதிநேர மின்னியல் தொழில் புரிந்து வரும் வி.வெங்கடேஸ்வரன் கூறினார். 

"ஒவ்வொரு வருடமும், என் பிள்ளைகள், பள்ளித் தவணைகளில் சில மாதங்கள் பள்ளி செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார். 

அம்மூவரும் தனது பிள்ளைகள் தான் என்பதை நிரூபிக்கும் பொருட்டு, கடந்த 2016-ஆம் ஆண்டு அவர்கள் மரபணு சோதனையை மேற்கொண்டதாக அவர் கூறினார். 

"அதன் தொடர்பில் நீதிமன்றத்தின் முடிவுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்" என்று வெங்டேஸ்வரன் சொன்னார். 

நடைமுறை பரிசீலனைக்கான தாமதங்களால் சிறுவர்களின் கல்வி தடைப்படக் கூடாது என்று அக்குடும்பத்தை நேரில் கண்டு பேசிய போது, பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் தி.ஜெயபாலன் கூறினார். 

"அம்மூவரின் தந்தை மலேசியர் என்ற போதிலும், அவர்களுக்கு கல்வி உரிமை வழங்கப்படவில்லை. இது தேவையற்ற மன உளச்சலை அந்தக் குடும்பத்திற்கு ஏற்படுத்துகிறது" என்று அவர் கருத்துரைத்தார். 

இதனிடையில், குடியுரிமை இல்லாத காரணத்தால் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படாத மாணவர்களின் பிரச்சனைகள் பல சமீப காலமாக வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. 

கடந்த வியாழக்கிழமையன்று, ஜாலான் புக்கிட் கம்பீரிலுள்ள பினாங்கு கல்வி இலாகா முன்பு, தங்களின் பெற்றோர்களுடன் ஏழு மாணவர்கள் தங்களுக்கு கல்வி உரிமை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், பாஸ்போர்ட் அல்லது கடப்பிதழ் சமர்ப்பிக்கப்பட்டால் மட்டுமே அவர்கள் அனைவரும் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்று கல்வி இலாகா பதிலளித்தது. 

அம்மூன்று பிள்ளைகளும் அரசாங்க பள்ளிகளில் பயில ஏதுவாக கல்வி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களை வி.வெங்டேஸ்வரன் சமர்ப்பிக்கவில்லை என்று பினாங்கு மாநில கல்வி இலாகாவின் துணை இயக்குநர் முகமட் ஜாமீல் முகமட் கூறினார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS