பிறை ஶ்ரீசெல்வ விநாயகர் ஆலய தடை உத்தரவு நிறுத்தம்! நீதிமன்றம் தீர்ப்பு!

சமூகம்
Typography

பினாங்கு, ஜன.12-  ஶ்ரீ செல்வ விநாயகர் இந்து பரிபாலன தேவஸ்தான நிர்வாகத்திற்கு எதிராகவும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு எதிராகவும்  பெறப்பட்டிருந்த தடை உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை இன்று பினாங்கு உயர்நீதிமன்றம்  விடுத்தது.

இந்த ஆலயம், பினாங்கு அறப்பணி வாரியத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. கடந்த ஜனவரி 9ஆம் தேதியன்று ஶ்ரீசெல்வ விநாயகர் ஆலயத்தின் முன்னாள் தலைவரான எம். ஐயப்பன்,  இந்து அறப்பணி வாரிய நிர்வாகம், ஶ்ரீசெல்வ விநாயகர் ஆலயத்தில் எந்தவொரு பணியிலும் ஈடுபடக்கூடாது என்று கோரி தடை உத்தரவைப் பெற்றிருந்தார்.

இந்த உத்தரவுக்கு எதிராக, பினாங்கு அறப்பணி வாரியம் விண்ணப்பம் செய்திருந்த வேளையில், அது இன்று நீதிபதி டத்தோ ரோஸிலா யோ முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தையும் செவிமடுத்த பின்னர், முந்தைய தடை உத்தரவை நிறுத்தி வைப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார். 

மேலும், இந்தத் தடை உத்தரவின் பேரிலான முழு விசாரணை எதிர்வரும் 18ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று குறிப்பிட்ட நீதிபதி டத்தோ ரோஸிலா, இந்த வழக்கு தொடர்பான இறுதித் தீர்ப்பு வரும் வரையில், ஶ்ரீசெல்வ விநாயகர் ஆலய நடவடிக்கைகளை பினங்கு இந்து அறப்பணி வாரியமே நிர்வகிக்கலாம்.  முன்பு போலவே ஆலய பூஜைகள் நடத்தப்பட்டு வரலாம் என்றும் அவர் தீர்ப்பில் கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS