தேவசூரியாவை மலேசியா கொண்டுவர மலிண்டோ  நிறுவனம் உதவி! 

சமூகம்
Typography

 

கிள்ளான், டிச.6- இந்தியாவில் தனது மாமியாரால் கொடுமைப் படுத்தப்பட்டதால் மலேசியாவிற்கு திரும்பவிருந்த தேவசூரியா, விசா காலாவதி ஆகிவிட்ட நிலையில் விமானநிலையத்தில் தடுத்து நிருத்தப்பட்டதைத்தொடர்ந்து அவருக்கு தேவையான உதவிகளை வழங்க மெலிண்டா விமான நிறுவனம் முன்வந்தது.

விசாவில் குறிப்பிட்டுள்ள காலக் கட்டத்தை விட கூடுதலான நாள்கள் இந்தியாவில் தங்கியிருந்த குற்றத்திற்காக மலேசியாவிற்கு திரும்ப முடியாதவாறு நேற்று விமான நிலையத்தில் தேவசூரியா தடுக்க வைக்கப்பட்டார். 

அவர் மீண்டும் மலேசியாவிற்கு திரும்பும் வாய்ப்பு வழங்கப்பட்டாலும், தன்னால் விமானப் பயண டிக்கெட்டிற்கான பணத்தை செலுத்த முடியாது என்று நேற்று அவர் கண்ணீரோடு தெரிவித்தார். 

அவரின் இன்னல்களைப் புரிந்துக் கொண்ட மலிண்டோ விமானச் சேவை நிறுவனம், தேவசூரியா மற்றும் அவரின் நான்கு வயது மகனுக்கான டிக்கெட்டுகளை வழங்க முன்வந்துள்ளது என்று மலிண்டோவின் தகவல் தொடர்பு நிர்வாகி சுரேஸ் வாணன் கூறினார்.  

திருச்சி விமான நிலையத்தில் விமானம் ஏறவிருந்த தேவசூரியாவை அந்நாட்டு காவல்துறை தடுத்து நிறுத்தியது. அங்குச் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த குற்றத்திற்காக அவர் அபராதம் செலுத்தவேண்டும் என்றும், அதைச் செலுத்த தவறினால், அவர் மலேசியா திரும்ப முடியாது என்றும் காவல் துறையினர் அவரிடம் தெரிவித்தனர். 

அதனைத் தொடர்ந்து, தனது கணவரின் சொந்த ஊரான ராமநாதபுரத்திற்கு அவர் திரும்பிச் செல்லும் கட்டாயம் ஏற்பட்டது. அந்தப் பயணச் சேவைக்கான டிக்கெட் பணத்தை திரட்டுவதற்கு தனது கணவர் கடன் வாங்கியதாகவும், அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், தம்மால் மீண்டும் மலேசியாவிற்கு திரும்ப முடியுமா? என்பது கேள்விக்குறியே என்று தேவசூரியா நேற்று கூறினார். 

அவரின் நிலையைக் கண்டு பரிதாபமடைந்த மலிண்டோ விமானச் சேவை நிறுவனம், அவருக்கும் அவரின் மகனுக்கும் டிக்கெட்டுகளை வழங்கவிருப்பதாக அதன் தகவல் தொடர்பு சுரேஸ் நேற்று ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்தார். மனிதநேய அடிப்படையில் அவருக்கு உதவத் தாங்கள் முன்வந்துள்ளதாக அவர் சொன்னார்.  

இதனிடையில், ராமநாதபுரத்திலிருந்து மீண்டும் திருச்சி விமான நிலையத்திற்கு தேவசூரியா மற்றும் அவரின் மகன் அழைத்து வருவதற்கான பயணச் சேவைக்கு உதவி வழங்க மலேசியாவின் ருத்ரா தேவி சமாஜ் அமைப்பின் துணைத் தலைவர் ஜி.குணராஜ் தெரிவித்தார்.  

"ராமநாதபுரத்திலுள்ள ஆத்ம சாந்தி நிலையத்தைத் தொடர்புக் கொண்டு, தேவசூரியாவிற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு நாங்கள் கேட்டுக் கொண்டோம். அவர்களும் அவருக்கு உதவ முன்வந்துள்ளனர்" என்று குணராஜ் சொன்னார்.  

மேலும், மலேசியாவிலுள்ள பலரும் தேவசூரியாவிற்கு உதவ முன்வந்துள்ளனர். யொங் லாய் லிங் என்ற வழக்கறிஞர், தானும் தனது நண்பர்களும், தேவசூரியாவின் கணவர் வாங்கிய கடனை அடைக்கும் பொருட்டு, நிதி திரட்டி வருவதாகத் தெரிவித்தார்.  

இந்தியாவில் மாமியாரால் கொடுமைப்படுத்தப்பட்டு, எப்படியாவது தன்னை மலேசியாவிற்கு அழைத்துச் செல்லுமாறு 37 வயதான தேவசூரியா வீடியோ ஒன்றில் கெஞ்சி அழுதக் காட்சி, சமூக வலைத் தளங்களில் பரவலானதைத் தொடர்ந்து, அவருக்கு பலர் ஆதரவு குரல்களை எழுப்பி வருகின்றனர். 

BLOG COMMENTS POWERED BY DISQUS