வேலைச் சுமையின் காரணத்தால் மலேசியர்கள் மத்தியில் ஆரோக்கியக் குறைவு!

சமூகம்
Typography

கோலாலம்பூர், நவ.18- வேலைச் சுமையின் காரணத்தால் மலேசியர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. அதனால் அவர்களின் வேலைத் திறன் குறைந்துக் கொண்டே போவதாக காப்புறுதி நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது. 

மலேசியத் தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை செய்கிறார்கள். இதனால், அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு, அது ஆரோக்கியமற்ற வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது. அதைத் தொடர்ந்து, அவர்களின் ஆரோக்கியம் பாதிப்படைகின்றது என்று ஏ.ஐ.ஏ ஆயுள் காப்புறுதி நிறுவனத்தால் நடத்தப்பட்ட மலேசியாவின் சிறந்த வேலையிடங்கள் என்ற அந்த ஆய்வறிக்கை விவரித்துள்ளது. 

அந்த ஆய்வு, 47 நிறுவனங்களைச் சேர்ந்த 5,369 தொழிலாளர்களிடத்தில் நடத்தப்பட்டது. அவர்களில் 50 விழுக்காட்டிற்கும் மேலானவர்கள் மனநோயால் பாதிக்கப்படும் விழிம்பில் உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. 

"53 விழுக்காடு மலேசியர்கள், வேலை தொடர்பான மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். 12 விழுக்காட்டினர் கடுமையான விரக்தி மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்" என்று அந்த ஆய்வறிக்கை தெளிவு படுத்தியுள்ளது. 

இந்த ஆய்வின் வாயிலாக 84 விழுக்காட்டினர் தசைக்கூட்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. இதனால், பலரின் வேலைத்திறனில் தொய்வு ஏற்பட்டுள்ளது. உடல்நலம் பாதிப்படைந்த பலர் விடுமுறை எடுத்துக் கொள்வதால், அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நான்கு நாடுகளிலும், மொத்தம் 214 நிறுவனங்களில் வேலைப் பார்க்கும் 10,001 வேலையாட்களிடம் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

மற்ற மூன்று நாட்டவர்களைக் காட்டிலும், மலேசியர்கள் கூடுதல் மணிநேரம் வேலைச் செய்கிறார்கள். ஒரு வாரத்திற்கு, கூடுதல் 15 மணி நேரம் அவர்கள் வேலைச் செய்கின்றனர். இருந்தபோதிலும், அந்தக் கூடுதல் மணி நேரங்கள் வாயிலாக தொழில்திறன் அல்லது உற்பத்தி திறன் அதிகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS