முன்பின் தெரியாதவரிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை ஏற்காதீர்!

சமூகம்
Typography

கோலாலம்பூர், நவ.18- உங்களின் தனிநபர் தகவல்களை கொடுக்குமாறு தொலைபேசி அழைப்பு ஏதும் வந்தால், அந்த அழைப்பை உடனே துண்டித்து விடுங்கள் என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் மக்களை அறிவுறுத்தியுள்ளனர். 

46.2 மில்லியன் கைத்தொலைபேசி உபயோகிப்பாளர்களின் தனிநபர் தகவல்கள் ஊடுருவப் பட்டதைத் தொடர்ந்து, மக்கள் பலரின் தனிநபர் விவரங்கள் பலரின் கைவசம் உள்ளது. ஆகவே, தனிநபர் விவரங்களைக் கூறி, வங்கி எண்களையோ, அல்லது இதர விவரங்களையோ கேட்டு யாரேனும் தொலைபேசி அழைப்பு விடுத்தால் அதனை உடனே துண்டிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

தீங்கு விளைவிக்கும் எண்ணத்தில் சிலர் நம்மை தொடர்புக் கொள்ளலாம் அல்லது நமது நேரத்தை வீணாக்கும் பொருட்டு, சில தொலைதொடர்பு ஊழியர்கள் நம்மை அழைக்கலாம் என்று இணைய பாதுகாப்பு அதிகாரியான போங் சூக் ஃபூக் கூறினார். 

"வெளியிடப்பட்ட அந்தத் தனிநபர் விவரங்கள் கொண்டு வங்கியில் கடன் வாங்கவோ அல்லது கடன் அட்டையை பெறவோ முடியாது என்ற போதிலும், அதனைக் கொண்டு சில மோசடிகளை செய்யலாம்" என்றார் அவர். "கைத்தொலைபேசி எண்களைப் போன்று, நம்மால், அடையாள அட்டை எண்களை மாற்ற முடியாது. நமது வங்கி கணக்கின் எண் மற்றும் அடையாள அட்டை எண்களை யாரிடம் பகிரக்கூடாது" என்று அவர் அறிவுறுத்தினார். 

வெளியிடப்பட்ட விவரங்கள் கொண்டு, கடன்கள் ஏதும் பெற முடியாது என்ற போதிலும், அவற்றைக் கொண்டு, நமது மற்ற விவரங்களை வங்கிகளிலிருந்து பெற முடியும் என்று அகாதி ஆலோசனைக் குழு (Akati Consulting Group) வின் நிர்வாகச் செயல்நிலை அதிகாரியான கிருஷ்ண ராஜகோபால் தெரிவித்தார். இந்த தகவல்களை வெளியிட்டவர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுப்பிடித்து அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். 

இதனிடையில் இணையத்தை உபயோகிப்போர், முறையான பாதுகாப்பை கொண்டிருக்க வேண்டும். அவர்களின் கணினிகளில் வைரஸ் தடுப்பு இருக்க வேண்டும். நம்பகத்தன்மை கொண்ட அகப்பக்கங்களை மட்டுமே அவர்கள் வலம் வர வேண்டும். மேலும் தங்களின் சொந்த விவரங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை அவர்கள் நிறுத்த வேண்டும் என்று தேசியப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப மையத்தின் துணை இயக்குநர் டாக்டர் முகமட் ரொஸ்மாடி மொக்தார் கூறினார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS