'சாந்திக்காக எதையும் செய்வேன்'- திருமுருகனின் இன்னொரு முகம்!

சமூகம்
Typography

கிள்ளான், நவ.18- வேலை செய்யும் இடத்தில் இருந்த எரிவாயு கலன் தனது முகத்தில் வெடிக்கும் போது, "உனக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன்" என்று தனது மனைவியிடம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல போய்விடுமோ என்ற பயம் மட்டுமே குளிர்சாதன இயந்திரத்தை பழுதுபார்க்கும் எஸ்.திருமுருகனின் மனதில் இருந்தது. 

எஸ்.பி.எம் வரைக்கும் மட்டுமே படித்து இருந்ததால், அவரின் மனைவி சாந்தியால் கால்நடை மருத்துவத்தை மலேசியாவில் படிக்க முடியவில்லை. திருமணத்திற்கு பிறகு அவரை கால்நடை மருத்துவத்திற்கு படிக்க வைப்பேன் என்று 32 வயதான திருமுருகன் உறுதியளித்திருந்தார். 

"அந்தச் சம்பவத்தில் என் கணவரின் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு தீக்காயங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. மேலும், அவர் கடும் வலியால் துடித்துக் கொண்டிருந்தார். அவரை அறுவை சிகிச்சைக்காகக் கொண்டுச் செல்லும் போது, கண்களில் கண்ணீரோடு, என்னால் உனது கனவை நினைவாக்க முடியுமா என்று தெரியவில்லை என்றார்" என்று கெடாவைச் சேர்ந்த சாந்தி கூறினார். 

அந்தச் சம்பவம் அவர்களின் திருமணம் நடந்த ஐந்தே மாதங்களில் நிகழ்ந்தது. அப்போது அவ்விருவரும் சிங்கப்பூரில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். 17 நாட்களுக்குத் தீவிர சிகிச்சையின் கீழ் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த திருமுருகன், உடல்தேறியதும், தனது மனைவியின் கனவை நினைவாக்கும் முயற்சியில் மீண்டும் இறங்கினார். 

"அச்சம்பவத்திற்குப் பிறகு, தனது வேலையை விட்டு விட்டு, ஜொகூர் பாருவில் கார் கழுவும் நிலையத்தை அவர் நடத்தி வந்தார். மேலும், ஓய்வு நேரங்களில் 'உபேர்' சேவையையும் வழங்கி, எனது படிப்புக்காக தேவைப்படும் பணத்தை அவர் சேமித்தார்" என்று சாந்தி கண்ணீர் மல்க கூறினார. 

அப்போதுதான், ஆஸ்திரேலியாவிலுள்ள சில கல்லூரிகளில் விலங்கியல் அறிவியல் கல்வியில் டிப்ளோமா பட்டத்தை சாந்தி பெறலாம் என்றும், அந்த டிப்ளோமாவை வைத்திருப்பவர்கள் கால்நடை மருத்துவப் படிப்பை படிக்கலாம் என்று தனது உபேர் பயணி ஒருவர் தன்னிடம் தெரிவித்ததாக திருமுருகன் கூறினார்.  

அதனைத் தொடர்ந்து, பெர்த்திலுள்ள 'டேவ் வெஸ்டர்ன் யூனிவர்சிட்டி'யில் (Tafe Western University) தன் கணவர் தன்னை பதிவு செய்து விட்டதாகவும், இவ்வருட ஆகஸ்டு மாத்த்தில் அவ்விருவரும் அங்கு குடிபெயர்ந்ததாக சாந்தி தெரிவித்தார். "ஆகஸ்டு 21-ஆம் தேதியன்று, நான் எனது படிப்பை தொடங்கினேன். என் கணவரும், இங்குள்ள கல்லூரி ஒன்றில், குளிர்சாதனத்தை பழுது பார்க்கும் தொழில்முறை குறித்த குறுகிய கால பயிற்சிக் மேற்கொண்டு வருகிறார்" என்று சாந்தி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

கெடா மாநிலத்திலுள்ள புக்கிட் கராங்கான் என்ற பகுதியைச் சேர்ந்த திருமுருகன், கோவில் திருவிழா ஒன்றின் போது சாந்தியை முதல் முறையாக சந்தித்ததாகவும், அவரை பார்த்த உடனேயே காதல் வயப்பட்டதாகவும் சொன்னார். 

"என் கணவர் தான் என் உலகம். அவரின் ஒவ்வொரு அம்சங்களையும் நான் விரும்புகிறேன். அவரின் முகத்தில் உள்ள தீப்புண் காயங்கள் உட்பட" என்று சாந்தி கூறினார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS