பிரதமரை ஆபாசமாக சித்தரித்த படத்தை பகிர்ந்த தொழிற்சாலை ஊழியருக்கு 4 மாதச் சிறை!

சமூகம்
Typography

கோலாலம்பூர், நவ.17- பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கை ஆபாசமாக சித்திரித்த கார்ட்டூன் படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. 

முகமட் ஹமீசான் கசாலி என்ற அந்த 24 வயது ஆடவர் கைது செய்யப்பட்ட நவம்பர் 12-ஆம் தேதியிலிருந்து அத்தண்டனை அமல்படுத்தப்படுகிறது என்று மாஜிஸ்திரேட் முகமட் அஸாலி இப்ராஹிம் கூறினார். 

மலாக்காவிலுள்ள தாமான் பாயா ரும்பூட் பெர்டானா என்ற தனது இல்லத்தில், பிரதமரை ஆபாசமாக சித்தரிக்கும் கார்ட்டூன் படம் ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த குற்றச்சாட்டை ஹமீசான் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு அத்தண்டனை விதிக்கப்பட்டது.  

1998-ஆம் ஆண்டின் தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233 (C) பிரிவின் கீழ், அக்குற்றத்தை புரிபவருக்கு ஒரு வருடச் சிறைத் தண்டனை அல்லது 5,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து தாம் சிறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதனைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் தம்மீது கருணைக் காட்ட வேண்டும் ஹமீசான் கேட்டுக் கொண்டார். அவர் தரப்பில் எந்த வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. 

அவரின் அக்குற்றத்திற்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும். இதேப் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையும் என்பதைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் அவருக்கு அதிகப்பட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் அபு அர்சால்னா கேட்டுக் கொண்டார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS