நகராண்மைக் கழக ஊழியர் மீது 'பெப்பர் ஸ்பிரே' அடித்த ஆடவருக்கு 5 மாதச் சிறை!

சமூகம்
Typography

கோலாலம்பூர், நவ.14- கார் நிறுத்தும் இடத்தில் முறையாக நிறுத்தப்படாத கார் சக்கரத்தில் இயந்திரப் பூட்டுப் போட்டதற்காக சுபாங் ஜெயா நகராண்மைக் கழக அதிகாரி முகத்தில் 'பெப்பர் ஸ்பிரே' அடித்த ஆடவருக்கு 5 மாதச் சிறைத் தண்டனை மற்றும் 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. 

லெங் வான் குவான் என்ற அந்த 50 வயது மதிக்கத்தக்க வேலை இல்லாத ஆடவர், விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்த தவறினால், அவருக்கு மேலும் மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சகாரியா கூறினார். 

அந்த அபராதத் தொகையை நீதிமன்றத்தில் லெங் வான் செலுத்தினார். இன்று முதற்கொண்டு, அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை அமலுக்கு வருகின்றது என்று சகாரியா தெரிவித்துக் கொண்டார். தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை, இரு பிள்ளைகளுக்கு தந்தையான லெங் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு அத்தண்டனை விதிக்கப்பட்டது. 

அதற்கு முன்னர், தமது பாதுகாப்பில் குடும்பம் இருப்பதை சுட்டிக் காட்டி, தமக்கு குறைந்தபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று லெங் நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டார். கடந்த நான்கு மாதங்களாக தமக்கு வேலை இல்லை என்றும், சில மாதங்களுக்கு முன்னர் தமது கண்களில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துக் கொண்டார். 

ஆனால், கடமையைச் செய்யும் அதிகாரிகளிடத்தில் பொதுமக்கள் தகாத முறையில் நடந்துக் கொள்ளக் கூடாது என்றும், அவருக்கு விதிக்கப்படும் தண்டனையானது மற்றவர்கள் இவ்வாறு நடந்துக் கொள்வதை தடுக்கும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் நதாஷா சின் லேய் ஜீ நீதிமன்றத்தில் வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS