கிம் ஜொங் நாம் எப்போது இறந்தார் என்று எனக்கு தெரியாது! மருத்துவர் கல்யாணி சாட்சி!

சமூகம்
Typography

கோலாலம்பூர், நவ.14- புத்ராஜெயா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கிம் ஜொங் நாம் எப்போது இறந்தார் என்று தமக்கு தெரியாது என்று அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் கல்யாணி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

அம்மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட கிம் ஜொங் நாமை தாம் பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி காலை மணி 11-க்கு தான் சோதனை செய்ததாக கல்யாணி சொன்னார். 

கோலாலம்பூர் இரண்டாவது அனைத்துலக விமான நிலையத்தின் கிளினிக்கிலிருந்து புத்ராஜெயா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட கிம் ஜொங் நாம், அங்குச் சேர்க்கப்பட்டபோது மூச்சு விடவில்லை என்றும், அவரின் உடலில் எவ்வித அசைவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 

அசைவற்று கிடந்த அவருக்கு தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு சி.பி.ஆர் எனப்படும் சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், 6 மில்லி கிராம் அட்ரினலினை அவரின் உடலில் செலுத்தியதாகவும் அவர் சொன்னார். இருந்தபோதிலும், அவரின் உடலில் எவ்வித அசைவும் தென்படவில்லை என்று அவர் மேலும் சொன்னார். 

கிம் ஜொங் நாம் வலிப்பு நோயால் தாக்கப்பட்டு அவரின் தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் தனது கிளினிக்கில் சேர்க்கப்பட்டதாக அவரை முதலில் பரிசோதித்த கோலாலம்பூர் இரண்டாவது அனைத்துலக விமான நிலையத்திலுள்ள கிளினிக்கின் மருத்துவர் நிக் முகமட் அஸ்டுரூல் அரீஃப் கூறினார். 

அதனைத் தொடர்ந்து, தொண்டைப் பகுதி வாயிலாக அவருக்கு ஆக்சிஜன்னை செலுத்தியதாகவும், அதன் பின்னர் அவரின் மூச்சு 94 விழுக்காடு சீராக இருந்ததாக நிக் முகமட் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் உடல்நிலை சீராகும் பொருட்டு, அவரை புத்ராஜெயா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு தாம் அனுப்பி வைத்ததாக அவர் மேலும் கூறினார். 

இதனிடையே, கிம் ஜொங் நாமை கொன்றதாக சந்தேகிக்கப்படும் சித்தி அயிஷா மற்றும் டோவான் ஆகிய பெண்களின் டி.என்.ஏ மாதிரியை தாம் பரிசோதனைக்கு உட்படுத்தி, அந்த மாதிரிகளை சிப்பாங் வட்டார போலீஸ் நிலையத்தில் சமர்ப்பித்ததாக கல்யாணி இன்று நடந்த வழக்கின்போது நீதிமன்றத்தில் தெரிவித்துக் கொண்டார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS