சிறையில் சசிகுமார் மரணம்: அது தற்கொலை அல்ல; கடுமையாக தாக்கப்பட்டே இறந்தார்!

சமூகம்
Typography

கோலாலம்பூர், நவ.14- கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதியன்று குளுவாங் சிறைச்சாலையில் தூக்குப் போட்டுக் கொண்டதாக கூறப்பட்ட சசிகுமார் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் தூக்குப் போட்டுக் கொள்ளவில்லை. மாறாக ஒருவராலோ அல்லது பலராலோ தாக்கப்பட்டு அவர் இறந்திருக்கிறார் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவித்துள்ளது. 

பிரேதங்கள் மீது பரிசோதனை நடத்துபவரான கமாருடின் கம்சூன், சசிகுமார் யாராலோ தாக்கப்பட்டு இறந்திருக்கிறார் என்றும் இது ஒரு கொலைச் சம்பவம் என்று நேற்று அறிவித்தார். இக்கொலைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை கமாருடின் போலீசாரிடமே விட்டு விட்டார் என்று இந்த வழக்கின் விசாரணையை நேரில் கண்ட இந்திய உரிமைகள் குழுவான ஹிண்ட்ராப் தகவல் தெரிவித்துள்ளது.  

அந்தச் சிறைச்சாலையில் போதைப்பொருள் விநியோகக் கும்பலைச் சேர்ந்த சிறைக்கைதியோ அல்லது சிறை அதிகாரியையோ விசாரணைக்கு உட்படுத்த போதுமான ஆதாரம் போலீசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கமாருடின் தெரிவித்துக் கொண்டார். இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, தனது உயிருக்கு ஆபத்து நேரக்கூடும் என்று சசிகுமார் சிறை அதிகாரி ஒருவரிடம் கூறியுள்ளார் என்பதையும் இங்கு கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஹிண்ட்ராப் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. 

இதனிடையே, சசிகுமார் தூக்குத்தான் போட்டுக் கொண்டார் என்று மருத்துவ அறிக்கை வெளியிட்ட நோயியல் வல்லுநரின் "கதை" நம்பக்கூடிய வகையில் இல்லை என்றும் கமாருடின் கூறினார் என்று தெரிவிக்கப்பட்டது. சசிகுமார் தரப்பில் வழக்கறிஞர்கள் வேதமூர்த்தி மற்றும் கார்த்திகேசன் ஆஜரானார்கள். 

2015-ஆம் ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதியன்று, தனது பேரனின் மரணத்தில் தமக்கு சந்தேகம் இருப்பதாக சசிகுமாரின் பாட்டி புகார் கொடுத்தார். அரிசி மற்றும் சார்டின்களை திருடிய குற்றத்திற்காக சசிகுமாருக்கு 10 வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் தனது தண்டனையை செலுத்திக் கொண்டிருந்த போது அவர் கொலை செய்யப்பட்டார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS