எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் பினாங்கு ஶ்ரீ அலுவாங் முனீஸ்வரர் ஆலயம்!

சமூகம்
Typography

ஜோர்ஜ்டவுன், நவ.14- கடந்த நவம்பர் 4-ஆம் தேதியன்று, கிட்டத்தட்ட 15 மணி நேரம் இடைவிடாது பெய்த மழையில், ஜாலான் பத்து பெரிங்கியிலுள்ள ஶ்ரீ அலுவாங் முனீஸ்வரர் ஆலயம் கடுமையாக பாதிக்கப்பட்டு, இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. 

பத்து பெரிங்கி கடற்கரையோரத்தில் அமைந்துள்ள அக்கோவிலின் அடிவாரத்தில் விரிசல்கள் பல ஏற்பட்டுள்ளதாக ஆலயத் தலைவர் ஏ.சதாசிவம் தகவல் தெரிவித்துள்ளார். 

"இந்த ஆலயத்தை எங்களால் சரிசெய்ய முடியாது. இது தரைமட்டமாக உடைக்கப்பட்ட பின்னர், மீண்டும் கட்டப்பட வேண்டும். இடைவிடாது பெய்த மழையால், நில அரிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த விரிசல்கள் கோவிலின் தரைகளில் ஏற்பட்டுள்ளன. இந்த விரிசல்கள் தொடரக்கூடும். அதுமட்டுமல்லாது, வேகமான காற்று மற்றும் தொடர் மழையின் காரணத்தால், இந்த ஆலயம் இடிந்து விழக்கூடிய அபாயத்தில் உள்ளது" என்று அவர் சொன்னார். 

இந்த ஆலயத்தை மீண்டும் கட்டுவதற்கு 100,000 ரிங்கிட் நிதி தேவைப்படுகிறது என்றும் சதாசிவம் தெரிவித்துக் கொண்டார். இதே இடத்தில் இக்கோவிலை கட்டுவதற்கு முன்னர், அந்த மண், சோதனைக்கு உட்படுத்தப்படும். கோவிலை தாங்கக் கூடிய, பலம் கொண்ட கான்கிரிட் அடித்தளம் நிறுவப்படும் என்று அவர் சொன்னார். 

"கோவில்களில் விரிசல்கள் ஏற்படுவது நல்லதல்ல. விரைவில், இக்கோவிலில் உள்ள சிலைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்படும். கோவிலை உடைக்கும் பணி அடுத்த வாரம் தொடங்கப்படும்" என்று அவர் தெரிவித்துக் கொண்டார். 

அக்கோவிலை பராமரிப்பதற்கு மட்டுமே கோவில் நிர்வாகத்திடம் நிதி இருப்பதாகவும், இந்தக் கட்டுமானப் பணியை மேற்கொள்வதற்காக, பொதுமக்கள் மற்றும் மாநில அரசின் நிதி ஆதரவை தாங்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்பதாக அவர் கூறினார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS