மாநில அரசாங்கங்கள் மத்திய அரசாங்கத்தை குறை சொல்லக் கூடாது!

சமூகம்
Typography

கோலாலம்பூர், நவ.13- மத்திய அரசாங்கத்தின் பரிந்துரைகளை கண்டுக் கொள்ளாத மாநில அரசாங்கங்கள் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்ட பின்னர் மத்திய அரசைக் குறைக் கூறக்கூடாது என்று புறநகர் நல்வாழ்வு, வீட்டுடமை, ஊராட்சி அமைச்சர் டான்ஶ்ரீ நோ ஒமார் அறிவுறுத்தினார். 

மலைச்சரிவான பகுதிகளில் மேம்பாடு திட்டங்களை மேற்கொள்வதை சில மாநில அரசாங்கங்கள் நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசாங்கம் அறிவுறுத்திய போதும், அதைத் தொடர்கின்ற மாநில அரசாங்கள், பிரச்சினைகள் ஏற்பட்ட பின்னர், மத்திய அரசாங்கத்தை குறைச் சொல்லக்கூடாது என்று ஒமார் சொன்னார். 

"அப்பகுதிகளில் மேம்பாடு திட்டங்களை மேற்கொள்ளக்கூடாது என்று மாநில அரசாங்கங்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க முடியாது. இருந்தபோதிலும், கொடுக்கப்படும் அறிவுரையை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார் அவர். 

"பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தலைமையில் தேசிய இயற்பியல் திட்டமிடல் வாரியம் ஒன்று அமைக்கப்பட்டு, அதன் வாயிலாக இவ்வாறான மேம்பாடுகள் குறித்து கொள்கைகள் மற்றும் பரிந்துரைகளை பகிர்ந்துள்ளோம். இந்தக் கொள்கை மற்றும் பரிந்துரைகளை மாநில அரசாங்கங்கள் பின்பற்றும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார் அவர். 

பினாங்கு மாநில அரசாங்கம், தங்களின் சொந்த விருப்பு அடிப்படையில் இந்த மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதாக சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் பூடிமான் முகமட் சோடி நாடாளுமன்றத்தில் கூறியதை ஆமோதிக்கும் வண்ணம் நோ இவ்வாறு கருத்துரைத்தார். 

2009-ஆம் ஆண்டில், இந்த மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ளக் கூடிய முறையான பரிந்துரைகள் அடங்கிய வழிகாட்டி நூல் ஒன்றை மத்திய அரசாங்கம் வெளியிட்டதாகவும், அதனைப் பின்பற்றாமல், தனது இஷ்டத்திற்கு மலைச்சரிவான பகுதிகளில் மேம்பாட்டு திட்டங்களை பினாங்கு மாநில அரசாங்கம் மேற்கொண்ட்தாக பூடிமான் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS