விமானக் கோளாறு: ஏர் ஆசியா ஊழியர்களை தற்காத்துப் பேசினார் டான்ஶ்ரீ டோனி!

சமூகம்
Typography

 

கோலாலம்பூர், அக்.17- பெர்த்திலிருந்து டென்பசார் என்ற இடத்திற்கு பயணித்த QZ535 என்ற ஏர் ஆசியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவ்விமான ஊழியர்கள் கத்திக் கூச்சலிட்டு அவ்விமான பயணிகளையும் பதற்றமாக்கியதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து தனது ஊழியர்களை ஏர் ஆசியா தலைமை நிர்வாகச் செயல்நிலை அதிகாரியான டோனி பெர்னாண்டஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்காத்துப் பேசியுள்ளார். 

நேற்றைய முன்தினம் பெர்த்திலிருந்து கிளம்பிய அவ்விமானத்தில் சில கோளாறுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து 25 நிமிடங்களில் மீண்டும் பெர்த்தில் தரையிறங்கியது.  

ஏர் ஆசியா விமான ஊழியர்கள், அந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அறிந்ததும் கத்திக் கூச்சலிட்டு, பயணிகளுக்கு ஆதரவு தெரிவிக்காமல், அவர்களை பதற்றப்படுத்தியாக சில அமெரிக்க பத்திரிக்கைகள் சாடியதைத் தொடர்ந்து டோனி அவர்களை தற்காத்துப் பேசினார். 

விமானத்தில் கோளாறுகள் ஏற்படுவது இயல்பான விஷயமே என்று அவர் சொன்னார். ஆனால், சில மேற்கத்திய பத்திரிக்கைகள் கூறுவது போல் தனது ஊழியர்கள் நடந்துக் கொள்ளவில்லை என்று அவர் சொன்னார்.

ஆஸ்திரேலியா மீது 32,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம் எவ்வித அறிவிப்புமின்றி திடீரென 10,000 அடி வரை கீழ் இறங்கியது. விமானம் சட்டென்று கீழே இறங்கியதும் அவசர நேரத்தின் போது செயல்படும் சுவாசக் கருவிகள் தலைக்கு மேல் வந்து விழுந்தன.

அதைப் பயணிகள் உபயோகிக்க முயற்சிச் செய்துக் கொண்டிருந்த வேளையில், அவ்விமான ஊழியர்களின் அலறலால் அனைவரும் மரண பயத்தில் அலறத் தொடங்கி விட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், தனது விமான ஊழியர்கள், பயணிகளிடத்தில் மிகவும் அக்கறையுடன் நடந்துக் கொண்டதாகவும், சுவாசக் கருவிகளைப் பொருத்திக் கொண்டு, இருக்கையிலுள்ள பெல்டுகளை அணிந்து அமைதியாக உட்காரும்படி அவர்களுக்கு  அறிவுறுத்தியாகவும் டோனி கூறினார். 

எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல், அவ்விமானத்தை ஏர் ஆசியா விமானி தரையிறக்கியதாகவும் அவர் தெரிவித்துக் கொண்டார். 

அதுமட்டுமல்லாது, திடீரென ஒரு விமானம் சில அடிகள் கீழ் இறங்குவது இயல்பான விஷயமே என்று எட்மண்ட் கியூ என்ற ஒருவர் ட்வீட்டரில் கூறியதையும் தனது டுவீட்டர் பக்கத்தில் டோனி பகிர்ந்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS