பீர் விழா குறிவைப்பு: 3 வெடிகுண்டு ஆசாமிகள் கைது! -ஐ.ஜி.பி.

சமூகம்
Typography

 கோலாலம்பூர், அக்.17- பீர் விழாவின் போது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் மூவரை போலீசார் கடந்த வாரம் கிளந்தானிலுள்ள பாசீர் பூத்தேயில் கைது செய்ததோடு, ஐ.இ.டி வகை வெடிகுண்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைதானவர்களில் ஒருவன் 19 வயதுடைய ஆறாம் படிவ மாணவன் என்றும் மற்றொருவர் 35 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் என்றும் போலீஸ் படைத்தலைவர் (ஐ.ஜி.பி.) டான்ஶ்ரீ புஸி ஹருண் தெரிவித்தார். மூன்றாவது நபர் 25 வயதுடைய குத்தகைத் தொழிலாளி என்று அவர் அடையாளம் கூறப்பட்டது.

இவர்கள் ஐ.எஸ்.எனப்படும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. இந்த ஐ.இ.டி. வகை வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி, நாட்டில் பல இடங்களில் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்தனர் என்று ஐ.ஜி.பி. டான்ஶ்ரீ புஸி ஹருண் கூறினார்.

இந்த சந்தேகப் பேர்வழிகளில் ஒருவனின் வீட்டின் பின்புறம் இந்த வெடிகுண்டை இவர்கள் பரிசோதித்துப் பார்த்துள்ளனர். முதலாவது முயற்சியின் போது குண்டு வெடித்தது. எனினும், மறு முயற்சியின் போது இவர்கள் தோல்வி கண்டனர்.

இந்த வகைக் குண்டுகள் 30 மீட்டர் பரப்பளவுக்கு வெடித்து, கடும் சேதத்தை ஏற்படுத்தக் கூடியவை. இந்த நபர்கள், தாங்கள் திட்டமிட்டபடி தாக்குதல்களை நடத்தி இருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று டான்ஶ்ரீ புஸி சொன்னார்.

இந்தக் குண்டுகளைத் தயாரிக்க இவர்கள் எப்படிக் கற்றுக் கொண்டார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதர தீவிரவாதிகளிடமிருந்து இவர்கள் கற்றுக் கொண்டிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியிலுள்ள கேளிக்கை விடுதிகள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களின் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றை இவர்கள் குறிவைத்திருக்கக்கூடும். மேலும் பீர் விழாவும் அவர்களின் இலக்காக இருந்திருக்கக்கூடும் என்று டான்ஶ்ரீ புஸி கூறினார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS